Monday, March 08, 2010

இரண்டாவது ஈழப் போரின் நினைவுக் குறிப்புகள்

[இலங்கையில் இரண்டாவது ஈழப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. சுவிஸ் "தமிழ் ஏடு" மாதப் பத்திரிகையில் "எடிட்டோர் பக்கம்" பகுதியில் பிரசுரமானது.]

இரண்டாவது தமிழீழ யுத்தம் என அழைக்கப்படும், இன்றைய "புலிகள் - ஸ்ரீ லங்கா இராணுவ யுத்தம்" 3 வது ஆண்டை நிறைவு செய்து, 4 வது ஆண்டுக்குள் பிரவேசிக்கின்றது. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தில், இம் மூன்றாண்டு காலம் என்பது மிகச் சொற்பமே, எனச் சுலபமாக கூறிடலாம். பெருமளவு இழப்புகளையும், சிறிதளவு வெற்றிகளையும் சந்தித்து விட்ட இவ்விரு பக்க படைகளும், இதுவரை சாதித்தது என்று எதையும் கூறிக் கொள்ள முடியாத நிலை. சமாதான மூச்சிற்கு அவகாசம் எடுக்காது சமரைத் தொடர்வது பற்றி நாம் புரிதல் அவசியம். தம் இருத்தலுக்காகவோ, அன்றில் கௌரவ தடைக்கோ தயங்கி நிற்றல் பலர் அறியாதவொன்றல்ல.

இருப்பினும் மரணத்திற்குள்ளும், பட்டிநிக்குள்ளும் தமது வாழ்வை இழந்து விட்ட மக்களையிட்டு உணராதிருத்தலும் முடியாது. இன்றைய நிலையில், இழப்பதற்கு உயிரை விட ஏதுமற்ற நிலையில், மக்கள் வாழும் ஒரு தேசத்தில் சமதர்மம் பிறக்குமா? அல்லது தமிழீழம் பிறக்குமா? என்பதை ஆராயும் அளவிற்கு யாரும் வரவில்லை. 1990 ல் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இருந்த நட்புறவு அறுந்து விட்ட தருணம். இந்த யுத்தத்தின் நன்மை,தீமைகளை பகுத்தாயும் முன்பே மக்கள் போர்ச் சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி விட்டு, முழுத் தமிழீழ பிரதேசங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க புலிகள் எடுத்த முயற்சி. குறுகிய காலத்திற்குள் கிழக்கை மீட்டெடுத்த ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை, போராளிகளை காடுறையும் கெரில்லாச் சமருக்கு தள்ளியது. சில மாதங்களுக்கு போர் ஓய்ந்த வேளை, வடக்கில் புலிகளின் ஆட்சி, கிழக்கில் இராணுவ ஆட்சி எனும் வரையறையை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதை விட, வவுனியா போன்ற எல்லைப்புறங்களை தக்க வைத்தலையே இராணுவம் விரும்பியது. ஒரு வகையில் இப்படி இருப்பதுவே தமக்கும் சிறந்தது, என இரு பக்கமும் கருதுவது போல தெரிந்தது.

யாழ் குடாநாட்டை சிங்கள முழுமையாக பார்த்தே ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. இடையில் இடம்பெற்ற வடமராட்சி தாக்குதலும் இந்திய தலையீட்டால் இடையில் நின்றது. கிழக்கில் மக்கள் தொகையில் சரிபாதிக்கு மேல் சிங்கள,முஸ்லிம் இனங்கள் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அங்கு தனது காலைப் பலப்படுத்தவே இலங்கையரசு விரும்பியது. அது போல நூறு வீதம் தூய தமிழினத்தை (முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் பின்) கொண்ட வடபகுதியில் தமது நிரந்தர தளத்தை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் புலிகள் இறங்கினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால செயற்பாடுகள், யாழ் குடாநாட்டுக்குள்ளே கருக்கொண்டதும், உருக் கொண்டதும், இவ்விடத்தே குறிப்பிடத் தக்கது. இதுவே "வட இலங்கைப் போராளிகள்" என உலக நாடுகள் அழைப்பதற்கு காரணமானது.

அப்பாவி தமிழ் மக்களின் வீடுகள் மீது, விமானக் குண்டுகளைப் பொழிவதால், இடம்பெயரும் மக்கள். போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான நெருக்கம் விரிவடையும் என்பது இலங்கை இராணுவத்தின் கணக்கு. பெருமளவு இழப்புகளை சந்தித்த போதிலும், மக்கள் அரசின் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர். புலிகள் இவ் வெறுப்பை தமக்கான ஆதரவாக மாற்றி வருதையும் கண்கூடாக காணக் கூடியதாகவிருந்தது.

முன்பு போராட்டப் பாதையில் இருந்து வழி மாற்றி விரட்டப்பட்ட மாற்று இயக்கங்கள். தமது இருத்தலுக்காய் முன்பு இந்திய இராணுவம், தற்போது இலங்கை இராணுவம் என்று கொழு கொம்பாய் பற்றிக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முயற்சிக்காத இவர்களது போக்கு. பழிவாங்கலை முதன்மைப் படுத்தல். அரசின் எடுபிடிகளாக செயற்படுதல். இவை யாவும் இவர்களையும் இராணுவ தாகம் கொண்ட குழுக்களாகவே இனங்காட்டுகின்றன. பலம் வாய்ந்த மாற்று அரசியல் இயக்கமாக தம்மை வளர்த்துக் கொள்ளாததும் இக் குழுக்களின் பலவீனமாகும்.

இப் போராட்ட வரலாற்றில் பல தலைமைகள் கொல்லப்பட்டதும், இம் மூன்றாண்டு காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரச தரப்பில் பாதுகாப்பு அமைச்சர், வட பகுதி இராணுவ பொறுப்பதிகாரி, கடற்படைத் தளபதி, ஜனாதிபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் மத்திய குழு உறுப்பினர்களான செங்கதிர், சர்வதேச தொடர்பாளர் கிட்டு ஆகியோர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை. அதை தொடர்ந்த விசாரணைகள் புலிகளை குற்றவாளிகளாக சுட்டி நின்றன. அது சர்வதேசத்தின் பார்வையை சிறு தீவின் பக்கம் திரும்பச் செய்தது.

போரின் அகோரத்திற்கு அப்பாவி மக்கள் முகம் கொடுப்பது ஒரு பக்கம். இவர்களும் எதிரிகளா? எனக் கேட்கும் வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சம் பாராது, ஈவிரக்கமின்றி கொள்வதும் அவ்வப்போது நடந்துள்ளன. இவற்றை நியாயப்படுத்த யார் எத்தகைய காரணங்களைக் கூறிய போதிலும், இவை இனங்களுக்குள்ளே ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

இரு பக்கமும் இராணுவரீதியிலான பலப்பரீட்சையிலேயே நம்பிக்கையோடு தொடரும் வேளை, எதிர்காலம் குறித்த அச்சவுணர்வு பலரிடம் குடிகொண்டிருத்தல் இயல்பு. புலிகளும், இலங்கையரசும் சமரசத்திற்கு இடம் கொடாத நிலையில், இந்தியாவின் தலையீடு அடிக்கடி வலியுறுத்தப் பட்டது. ஆனால் ஏற்கனவே சூடு கண்ட இந்தியா, தனக்குள்ளே உள்ள முடிச்சுகள் இறுகிய நிலையில் மீண்டும் இலங்கைக் களத்தில் குதிக்கும் நிலையிலிருக்கவில்லை. அகதிகளை வைத்திருப்பதைக் கூட ஒரு சுமையாகவே, இந்திய துணைக்கண்டம் கருதுகின்றது. சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவை தாண்டி வர முடியாத நிலை. இந்நிலையில், முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்ட தீவாக காட்சி தரும் இலங்கை. எந்தவொரு தீர்வும் இராணுவ சக்திகளுக்குட்பட்டதாகவோ, அல்லது அவர்களின் பங்கேற்புடனோ அமையும் என அரசியல் அவதானிகள் கருதினார்கள்.

எது எப்படியிருப்பினும், சமாதானம் என்பது இன்னும் நீண்ட காலத்தின் பின்பே சாத்தியப் படக் கூடியது. நாட்டின் வட-கிழக்கு பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் அளவு மோசமடைந்த நிலை. கிழக்கில் ஸ்ரீலங்கா படையினர் எதிரிகளை அளிப்பதை விட வயல்களை அழிப்பதே சிறந்தது எனக் கருதி செயற்பட்டனர். இயற்கையாகவே வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டை யுத்தம் பாலைவனமாக்கியது.

No comments: