Friday, December 24, 2010

பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பத்து)

1982 ல், ஈழ - பாலஸ்தீன ஆதரவு துண்டுப்பிரசுரங்கள், "ஈழப் புரட்சி அமைப்பினரால்" வெளியிடப்பட்டன. அந்த வருடம் லெபனானில் ஷப்ரா, ஷட்டிலா என்ற இரு பாலஸ்தீன அகதி முகாம்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஈழத்தமிழர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈழத்தில் மெல்ல மெல்ல ஆயுதப் போராட்டம் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம் அது. பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் கொலைவெறிக்கு சற்றும் சளைக்காமல், சிங்கள இராணுவம் படுகொலைகளை செய்தது. இருப்பினும் அந்த வருடம் (1982) இஸ்ரேலியரின் பாலஸ்தீன இனப்படுகொலை ஈழத்திலும் அனுதாப அலையை தோற்றுவித்தது.

ஷப்ரா, ஷட்டிலா படுகொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் லெபனான் பாசிஸ்ட்களான பலாங்கிஸ்ட்கள். இருப்பினும் இஸ்ரேலும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தது. இஸ்ரேலிய படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட அகதி முகாம்களில், தொடர்ந்து மூன்று நாட்கள் படுகொலை இடம்பெற்றது. கசாப்புக் கடையில் ஆடு வெட்டுவதைப் போல, கொலைஞர்கள் சாவகாசமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். அன்று அந்த இனப்படுகொலையை அரங்கேற்றிய இஸ்ரேலிய படைத் தளபதி ஷரோன், பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஷரோனுக்கு எதிராக பெல்ஜியத்தில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இருந்தாலும் என்ன, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு இருந்தால், எந்தவொரு போர்க்குற்றவாளியும் விசாரணைக்கு அஞ்சத் தேவையில்லை.

லெபனானில் இஸ்ரேலிய படையெடுப்பின் பின்னர், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கு பாதுகாப்பான பின்தளம் என்று கூறக் கூடிய நாடு எதுவும் இருக்கவில்லை. ஏற்கனவே ஜோர்டானில் விரட்டப்பட்டு தான் லெபனான் வந்தார்கள். லெபனானிலும் அவர்களுக்கு வரவேற்புக் கிட்டவில்லை. வேண்டா விருந்தாளிகளாக நடத்தப் பட்டார்கள். எண்பதுகளில் லெபனானில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, PLO வேறு வழியின்றி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. அன்று PLO உலகில் "பணக்கார இயக்கம்" என்று பேசப்பட்டது. அனைத்து அரபு நாடுகளும் அளித்த தானங்கள், அவர்களது பணப்பெட்டியை நிரப்பின. யாசிர் அரபாத் வெளிநாட்டுப் பயணங்களுக்கு என தனியான விமானம் வைத்திருந்தார். உலகில் முதன்முதலாக விமானம் வாங்கிய விடுதலை இயக்கம் என்ற பெயரும் PLO வுக்கு இருந்தது. அந்நிய நாடுகளில் அளவுக்கதிகமாக தங்கியிருந்தால் விடுதலையைப் பெற முடியாது என்பதை, பாலஸ்தீனர்கள் காலந் தாழ்த்திப் புரிந்து கொண்டனர். இஸ்ரேலிய இராணுவம் பலமாக இருந்ததால், PLO வின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்று எதுவும் இருக்கவில்லை. அதனால், இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் யாவும், அயல் நாடுகளில் இருந்தே நெறிப் படுத்தப் பட்டன.

1967 ம் ஆண்டு யுத்தத்தின் பின்னரே, ஆயுதமேந்திய பாலஸ்தீன அமைப்புகள் வளர்ச்சி அடைந்தன. ஜெருசலேம், மேற்குக் கரை, காஸா பிரதேசங்களை, இஸ்ரேல் போரில் கைப்பற்றியது. ஜோர்டானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மேற்குக்கரை (ஜெருசலேம் உட்பட), எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா என்பன, பாலஸ்தீனரின் புகலிடமாக விளங்கியது. அதாவது 1948 ல் இஸ்ரேல் உருவானதால் வெளியேற்றப் பட்ட பாலஸ்தீன அகதிகள், அந்தப் பிரதேசங்களில் அடைக்கலம் கோரி இருந்தனர். 1967 போரின் பின்னர், மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ வேண்டிய நிலை வந்தது. ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்வதென்பது, ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும் இடர். அதாவது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கு பிரஜாவுரிமை கிடையாது. அதனால் கடவுச் சீட்டும் எடுக்க முடியாது. வாக்குரிமை கிடையாது. அதனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாது. வீடு, காணி சொந்தமாக வைத்திருக்கும் உரிமை கிடையாது. அதனால் அவர்களது வீடுகள் இடிக்கப்படுகின்றன. நிலங்கள் பறிமுதலாகின்றன. நிச்சயமாக அத்தகைய சூழ்நிலையில் மக்கள் ஆயுதப் போராட்டத்தை முழு மனதுடன் ஆதரிப்பார்கள். 1967 ம் ஆண்டின் பின்னர், விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்கு ஏதுவான சமூகக் காரணி அங்கே காணப்பட்டது.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் குறித்த அவா, சில இளைஞர்களிடம் காணப்பட்ட போதிக்கும், அது வளர்ச்சி அடைய ஒரு உந்துசக்தி தேவைப்பட்டது. இஸ்ரேலில் 1967 யுத்தம், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்களை விடுதலை இயக்கங்களில் சேரத் தூண்டியது. அதே போல, இலங்கையில் 1983 இனக்கலவரம், ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களை விடுதலை இயக்கங்களில் சேர்த்து விட்டது. அன்று ஈழத்தில் இயக்கங்களில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள், பயிற்சிக்காக இந்தியா சென்றார்கள். ஏனென்றால், அனைத்து இயக்கங்களும், இந்தியாவில், தமிழ் நாட்டில் தான், பயிற்சி முகாம்களை கொண்டிருந்தன. அதே போல அன்று பாலஸ்தீன இயக்கங்கள் யாவும், ஜோர்டானில் நிலை கொண்டிருந்தன. இஸ்ரேலின் எல்லையான ஜோர்டான் நதிக்கரை அருகில், பயிற்சி முகாம்கள் அமைந்திருந்தன. ஈழ விடுதலை அமைப்புகளின் தலைமையகங்கள் சென்னையில் இருந்ததைப் போல, பாலஸ்தீன இயக்கங்கள் ஜோர்டானின் தலைநகர் அம்மானில் தலைமையகங்களை கொண்டிருந்தன. அன்று தமிழ் நாட்டில் ஈழப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடுமளவிற்கு சுதந்திரம் இருந்தது. இந்திய அரசு, தமிழ்நாடு மாநில அரசு ஆகியனவற்றின் செல்வாக்கு அவர்களுக்கு இருந்தது.

ஆரம்ப காலத்தில் முப்பதுக்கும் குறையாத ஈழ விடுதலை அமைப்புகள் தோன்றியிருந்தன. ஒரு சில, நாலைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட சிறிய இயக்கங்களாக இருந்தன. அன்று ஜோர்டானிலும் ஐம்பதுக்கும் குறையாத பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் தோன்றின. அரபு நாடுகளில் இருந்து பணம் வருகின்றது என்பதற்காக இயக்கம் தொடங்கியவர்களும் உண்டு. பதா போன்ற தேசியவாத அமைப்புகளும், PFLP போன்ற மார்க்சிய அமைப்புக்களுமாக அவர்களுக்கிடையில் கொள்கை வேறுபாடு காணப்பட்டது. அதே போன்று ஈழ விடுதலை அமைப்புகளிலும், ஒரு சில தேசியவாதத்தையும், வேறு சில மார்க்சியத்தையும் தமது கொள்கைகளாக கொண்டிருந்தன. 1984 ம் ஆண்டு யாழ் குடாநாடு போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலத்தில் A .K . 47 துப்பாக்கிகளை ஏந்திய இயக்க உறுப்பினர்கள், "பிக்-அப்" வாகனத்தில் பவனி வருவார்கள். அதே போன்ற காட்சிகளை அன்று ஜோர்டானில் இருந்தவர்கள் கண்டிருப்பார்கள். ஆமாம், அதே A .K . 47, அதே பிக் அப் வண்டி, போராளிகளின் தோற்றமும் ஒரே மாதிரித் தான் இருக்கும். (வெளியே இழுத்து விடப்பட்ட சட்டை. மார்பில் சன்னக் கூடுகளை வைக்கும் "ஹோல்சர்" பை. இத்தியாதி.)
ஒரு காலத்தில், தமிழக மக்களுக்கு ஈழப் போராளிகள் மீது மதிப்பும், மரியாதையும் இருந்தது. பின்னர் சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் அது இறங்குமுகமாகியது. ஜோர்டானிலும் அதே போன்ற நிலை காணப்பட்டது. உதாரணத்திற்கு குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு பாலஸ்தீன போராளியை ஜோர்டான் போலீசார் கைது செய்திருந்தனர். கைதியை விடுவிக்குமாறு, சம்பந்தப் பட்ட போராளியின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போலிஸ் நிலையம் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இது போல நிறைய சம்வங்கள் இடம்பெற்றன. தமிழகத்தில் போராளிக் குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்ட "பர்மா பஜார் சம்பவம்" போன்ற பல ஜோர்டானிலும் இடம்பெற்றன.

அன்று ஈழ விடுதலை அமைப்புகள் தமிழகத்தை பின்தளமாக பயன்படுத்துவதற்கு சில குருட்டு நம்பிக்கைகள் காரணமாக இருந்தன. "இந்தியாவிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். அதனால் இந்திய அரசு எப்போதும் ஈழத்தமிழருக்கு சார்பாகவே நடக்கும். ஒரு போதும் ஈழ விடுதலை அமைப்புகளை அடக்க துணியாது. அது தமிழகத்தில் கிளர்ச்சியை தோற்றுவிக்கும்...." இவ்வாறு அந்த நம்பிக்கை அமைந்திருந்தது. ஜோர்டானில் தளம் அமைத்திருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் அதே போன்ற குருட்டு நம்பிக்கையுடன் செயற்பட்டார்கள். "ஜோர்டானில் பெருமளவு பாலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். (1948 ல் இஸ்ரேலை விட்டு வெளியேறிய பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் குடியுரிமை வழங்கப்பட்டது.) அதனால் ஜோர்டான் அரசு விடுதலை அமைப்புகளை அடக்குமாகில், பாலஸ்தீன பிரஜைகள் கிளர்ந்தெழுவார்கள்..." 1970 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அந்த நம்பிக்கை தவிடுபொடியாகியது.

பேசும் மொழி ஒன்றாகிலும், பாலஸ்தீன, ஜோர்டானிய மக்கள் மத்தியில் கலாச்சார வேறுபாடுகள் உண்டு. பாலஸ்தீனர்கள் நகர்ப்புற கலாச்சாரத்தை கொண்டவர்கள். மேலைத்தேய கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தைக் கொண்டிருந்தது. அதற்கு மாறாக ஜோர்டானியர்கள் "பெதூயின்" என்ற நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களது கலாச்சாரமும் நாட்டுப்புறம் சார்ந்தது. மன்னர் ஹுசைன் ஹஷமித் குலத்தை சேர்ந்தவர். மன்னரின் குல விசுவாசம், பெதூயின் படைவீரர்களின் விசுவாசம் என்பன, பாலஸ்தீனருக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவின.
மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமான ஜோர்டானிய படைகள், பாலஸ்தீன ஆயுதபாணி இயக்கங்கள் மீது யுத்தம் தொடுத்தது. "கறுப்பு செப்டம்பர்" என்று அழைக்கப்படும் அந்தப் போரின் பின்னர், ஒரு பாலஸ்தீன போராளியை கூட ஜோர்டானில் விட்டு வைக்கவில்லை. போராளிகள் மத்தியில் இழப்பு அதிகமாக காணப்பட்டது. அனைத்து பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் ஜோர்டானை விட்டு வெளியேறி, லெபனானில் தளம் அமைத்தன.

1983 ம் ஆண்டு, இந்தியா ஆயுதம் கொடுக்கிறது, பயிற்சி கொடுக்கிறது என்று, அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளும் இந்தியாவில் தளமமைத்தன. இருந்தாலும் அன்று சில மார்க்சிய அமைப்புகள் இந்தியாவை "பிராந்திய வல்லரசு" என்றன. பங்களாதேஷில் இந்திய தலையீட்டை விளக்கும், "வங்கம் தந்த பாடம்" என்று ஒரு நூல் கூட வெளிவந்தது. "முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான புரட்சி என்ற கொள்கை, இந்திய முதலாளித்துவ அரசுக்கும் எதிரானது தான்." என்பதை ஒத்துக் கொண்டன. அதெல்லாம் சொல்லில் மட்டுமே, செயலில் காட்ட தயங்கினார்கள். ஆனால் ஜோர்டானில் நிலைமை வேறாக இருந்தது. மார்க்சிய PLFP ஜோர்டானிய தொழிற் சங்கங்களுக்குள் ஊடுருவியது. பொதுவுடைமை புரட்சிக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தலைநகர் அம்மானில் கூட காணப்பட்டன. PFLP உறுப்பினர்கள் மசூதிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்கு பதிலாக, கார்ல் மார்க்சின் மேற்கோள்கள் ஒலிபரப்பாகின. பிற்காலத்தில் ஒரு நேர்காணலின் போது, "மார்க்சிஸ்ட்கள் ஜோர்டானில் குட்டையை குழப்பியதாக...." யாசிர் அரபாத் தெரிவித்தார். இருப்பினும் சில சம்பவங்கள், அமெரிக்கா, ஜோர்டான் அரசு மீது அழுத்தம் பிரயோகிக்க காரணமாக இருந்தது உண்மை தான். அது வேறொன்றுமில்லை. PFLP, சில மேற்குலக நாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, ஜோர்டானுக்குள் கொண்டு வந்து விட்டது!

இந்தியாவுக்கும், ஈழத்திற்கும் நடுவில் 20 மைல் கடற்பரப்பு இருந்தது. ஆரம்ப காலங்களில், ஈழப் போராளிகள் இந்தியாவில் இருந்து இலங்கை சென்று தாக்குதல் நடத்தி விட்டு திரும்பிச் சென்றனர். அதே போல, பாலஸ்தீன போராளிகளும் ஜோர்டானில் இருந்து இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி விடுவார்கள். ஜோர்டான், இஸ்ரேலிய எல்லையான ஜோர்டான் நதி எல்லை தாண்டுவதற்கு இலகுவானது. பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலால், இஸ்ரேலிய அரசுக்கும், ஜோர்டானிய அரசுக்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது. ஈழப் போராளிகளின் தாக்குதலால், இலங்கை, இந்திய அரசுகள் ஒன்றையொன்று பகைத்துக் கொண்டன. ஆனால் அந்தப் பகைமை எல்லாம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் வரையில் தான். அதன் பிறகு இந்திய இராணுவமே ஈழப் போராளிகளை எதிர்த்துப் போரிட்டது. 1970 கறுப்பு செப்டம்பரும், அதே போன்ற அரசியல் மாற்றத்தின் விளைவாகும். இஸ்ரேலிய அரசுக்கும், ஜோர்டான் அரசுக்கும் இடையில் இரகசியமாக நட்புறவு ஏற்பட்டது. ஜோர்டான் மன்னர் ஹுசைன் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்பது பின்னர் பகிரங்கமாகியது. மார்க்சிய PFLP கூட அதைக் காரணமாக காட்டி ஹுசைன் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் அன்று அயலில் இருந்த அரபு நாடுகள், ஹுசைன் அரசு கவிழ்வதை விரும்பவில்லை என்பது யதார்த்தம்.

பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை ஜோர்டான் தனது நலன்களுக்காக பயன்படுத்தியது. மேற்குக்கரை, காஸா போன்ற பகுதிகளில் செல்வாக்கு செலுத்துவது ஜோர்டானின் உள்நோக்கம். அதற்கு இஸ்ரேலின் ஒத்துழைப்பு கிட்டியதும் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை கைவிட்டது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கும் அதே போன்றதே. இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. இலங்கை அரசு அதற்கு விட்டுக் கொடுத்ததும், ஈழ விடுதலை அமைப்புகள் இந்தியாவுக்கு தேவைப் படவில்லை. பாலஸ்தீன-ஈழப் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச சமூகமும் ஒரே முடிவைத் தான் கொண்டிருந்தது. இஸ்ரேலிய அரசு, பாலஸ்தீன விடுதலை இயக்க சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராக இருந்தது நோர்வே. இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கும் நோர்வே தான் அனுசரணையாளர். இந்த உதாரணம் ஒன்றே போதும், பாலஸ்தீனரும், ஈழத் தமிழரும் ஒரே விதியை கொண்ட சகோதர இனங்கள் என்பதை நிரூபிக்க.

(தொடரும்)

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:

9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு

6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

1 comment:

வானம் said...

நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள உதவுகிறீர்கள் கலையரசன்.
தொடர்ந்து வருவேன்.
நன்றி.