Friday, May 20, 2011

அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்

["இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா", தொடர் - 3]
(பிரேசில், பகுதி: இரண்டு)

பிரேசிலில், அடிமைத்தளைகளை அறுத்தெறிந்த கறுப்பின அடிமைகள், ஒரு சுதந்திர தேசத்தை நிர்மாணித்திருந்தனர். தென் அமெரிக்காவில், அடிமைகளின் சுதந்திரத் தாயகம் "Palmares " குறித்த தகவல்களை, உங்களில் பலர் இப்போது தான் அறியப் போகின்றீர்கள். அமெரிக்க கண்டத்தில் ஆப்பிரிக்க அடிமைகள் காலந்தோறும் கட்டுண்டு கிடந்ததாக கருதுவது தவறு. வெள்ளையின கனவான்களின் பெருந்தன்மையே அடிமைத் தளையை தகர்த்தாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது. விடுதலைக்காக இரத்தம் சிந்திய போராட்டம் நடத்திய கறுப்பின அடிமைகளைப் பற்றிய ஆவணங்கள் குறைவு. அதனால் ஆயுதமேந்திய அடிமைகளின் எழுச்சி குறித்து அறிந்தவர்கள் குறைவு. தென் அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் போராடி, தமக்கென சுய நிர்ணய உரிமை கொண்ட தனி நாடு அமைத்துக் கொண்டனர். Palmares என்று அழைக்கப்பட்ட கறுப்பின அடிமைகளின் தேசம், ஒன்றிரண்டு வருடங்களல்ல சுமார் 90 ஆண்டுகளாக (1605 - 1694) தனது சுதந்திரத்தை நிலை நாட்டியது. பிரேசிலின் வட கிழக்கு கரையோரம் உள்ள Alagoas மாநிலத்தில் அந்த நாடு (Palmares) அமைந்திருந்தது. அண்ணளவாக போர்த்துக்கல் அளவு நிலப்பரப்பு, ஒரு கறுப்பின ராஜாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. சிறப்பு பயிற்சி பெற்ற கறுப்பினப் படையணிகள் காலனியாதிக்கவாதிகளுக்கு சவாலாக விளங்கின.
பிரேசிலில் அடிமை வியாபாரிகளும், கரும்பு ஆலை அதிபர்களும், அனைத்து ஆப்பிரிக்கர்களையும் கால்நடைகளாக கருதிய காலமது. அங்கோலாவில் இருந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு வந்த அடிமைகளில் பலர், நாகரீகமடைந்த "இம்பன்களா" வகுப்பை சேர்ந்தவர்கள், என்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இம்பங்களா என்பது இந்தியாவில் ஷத்திரிய குலத்திற்கு ஒப்பானது. அங்கோலா ராஜதானியை ஸ்தாபித்த பெருமைக்குரியவர்கள். காலம் செய்த கோலம். போர்த்துக்கேயரின் சூழ்ச்சிக்கு இரையாகி இராஜ்ஜியத்தை இழந்தார்கள். அடிமைகளாக பிரேசில் கொண்டு செல்லப்பட்டார்கள். சொந்த நாட்டில் வீர புருஷர்களாக வலம் வந்தவர்கள், கடல் கடந்த தேசத்தில் அடிமை உழைப்பாளிகளானார்கள். கரும்பு ஆலை அதிபர்களின் கொடுமையில் இருந்து தப்பிக்க தருணம் பார்த்து காத்திருந்தார்கள். டச்சு- போர்த்துக்கல் யுத்தம் அதற்கு வழி சமைத்துக் கொடுத்தது.

கரும்புத் தோட்டங்களில் நிலவிய கடுமையான தண்டனைகள், அடிமைகளை பயமுறுத்தி பணிய வைக்கவில்லை. மாறாக கொடுமை கண்டு கொதித்தெழுந்த அடிமைகள் ஆலை முதலாளியையும், வெள்ளையின காவலர்களையும் கொலை செய்து விட்டு தப்பியோடினார்கள். நிச்சயமாக, முன்னாள் இம்பங்களா வீரர்களின் போர்க்குணாம்சம் கிளர்ச்சியை தூண்டிய காரணியாக இருந்தது. இருப்பினும் கலகம் செய்யும் அடிமைகளுக்கு தப்பிச் செல்ல ஒரு புகலிடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்க அம்சம். அந்தப் புகலிடங்கள் "கிளம்போஸ்" (Quilombos ) என அழைக்கப்பட்டன. மலைகளும், காடுகளும் இயற்கையான தடுப்பரண்களாக இருந்தன. கரும்புத் தோட்ட காவலர்கள் தப்பிச் சென்ற அடிமைகளை பிடிக்க முடியாதவாறு அவை பாதுகாத்தன. சிறிது காலம் செல்ல கிளம்போஸ் குடியேற்றங்கள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு மன்னரால் நிர்வகிக்கப்பட்டன. தமக்கு தேவையான உணவுப் பொருட்களை தாமே பயிரிட்டுக் கொண்டனர். ஆயுதங்களுக்காக கரும்பாலை முதலாளிகளின் வீடுகளை தாக்கினார்கள்.

ஆரம்ப காலத்தில் தப்பியோடிய அடிமைகள் ஆண்களாக இருந்தனர். இதனால் பெருந்தோட்டங்களில் கட்டுண்டு கிடந்த பெண் அடிமைகளை விடுதலை செய்தனர். புதிய தேசத்தில் குடும்பங்களும், கிராமங்களும் உருவாகின. இருப்பினும் சனத்தொகையில் குறைந்தளவு பெண்கள் இருந்ததால், பாண்டவர்களைப் போல ஒரு பெண்ணை பல ஆண்கள் மணந்து கொண்டனர். பல்மாரஸ் தேசத்தில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்த முன்னாள் அடிமைகள், கரும்பாலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பல காரணங்கள் இருந்தன. ஒன்று, அடிமைகளின் எஜமானர்களான ஆலை முதலாளிகளை பழி வாங்குவது. இரண்டு, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை அபகரிப்பது. மூன்று, பிற அடிமைகளை விடுதலை செய்து தம்மோடு கூட்டிச் செல்வது. இதன் மூலம் சுதந்திர கறுப்பின தேசத்தின் பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அந்த நாடு, முப்பதாயிரம் குடிமக்களை கொண்டிருந்தது. அவர்களில் பலர் சுதந்திர தேசத்தில் பிறந்த பிள்ளைகள்.

பல்மாரஸ் குடிமக்கள், வெள்ளையின காலனியாதிக்கவாதிகளின் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிடவில்லை. போராட்டமே வாழ்க்கை என்றாகி விட்டதால், அதற்கேற்ற கலைகளும் தோன்றின. கப்புஈரா (Capoeira) என்ற தற்காப்பு நடனம் அந்தக் காலத்தில் தோன்றியது. பார்ப்பவர்களுக்கு கராத்தே சண்டை போலவும், அதே நேரம் நடனம் போலவும் தோன்றும். அது தான் அந்தக் கலையின் சிறப்பம்சம். காலனியாதிக்கவாதிகள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கவில்லை. சுதந்திர அடிமைகளின் தேசத்தை கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்கள். ஆயினும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவின. பல்மாரஸ் மக்கள் பொறிகளை, அகழிகளை அமைத்து தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். முடியாத பட்சத்தில் தமது வயல்களை தாமே அழித்து விட்டு காடுகளுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

இறுதியில் போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகளுக்கு கைகொடுக்க வந்தார்கள் Bandeirantes. அதாவது போர்த்துக்கல்லில் இருந்து நாடுகடத்தப்பட்ட கொடிய கிரிமினல்கள். இவர்களின் தாக்குதல்களுக்கு நின்று பிடிக்க முடியாமல் பல்மாரஸ் நிலைகுலைந்தது. 1695 ம் ஆண்டு, சுதந்திர கறுப்பின தேசத்திற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதப்பட்டது. மன்னன் Zumbi கொல்லப்பட, குடிமக்கள் மீளவும் அடிமைகளாக்கப்பட்டனர். அந்த தேசத்தில் சுதந்திரமாகப் பிறந்த பிள்ளைகளும் அடிமைத்தளைக்கு தப்பவில்லை. Bandeirantes வீரர்களின் சேவைக்கு நன்றிக்கடனாக ஸௌ பவுலு (Sao Paulo ) நகரில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. பிரேசிலின் பிரதான குடியேற்றமான ஸௌ பவுலுவை பாதுகாப்பதே Bandeirantes வீரர்களின் ஆரம்பகால கடமையாக இருந்தது. பிரேசில் அரசியலில் "பவுலிஸ்ட்டா" க்களின் (ஸௌ பவுலுக் காரர்கள்) ஆதிக்கம் அதிகம். இன்றைக்கும், ஸௌ பவுலுவில் தூய வெள்ளையர்கள் குடியிருப்பதும் அதற்குக் காரணம்.
ஆயிரத்திற்கும் குறையாத வங்கிகள், லட்சக்கணக்கான தொழிற்சாலைகளைக் கொண்ட ஸௌ பவுலு São Paulo நகரம் பிரேசில் தேசிய வருமானத்தில் 40 % த்தை உற்பத்தி செய்கின்றது. மோட்டார் கார், விமானங்களைக் கூட உற்பத்தி செய்யுமளவுக்கு தலை சிறந்த தொழிற்துறை வளர்ச்சி கண்ட நகரம். ஸௌ பவுலு, பொருளாதார வளர்ச்சிக்கு அங்கே குடியேறிய பெரும்பான்மை ஐரோப்பிய வெள்ளையருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. ஸௌ பவுலு நகரின் மொத்த சனத்தொகையில் 70 % தூய ஐரோப்பிய வெள்ளையர்கள். நிச்சயமாக முதன்முதல் குடியேறியவர்கள் போர்த்துக்கேயர்கள் தான். அவர்களைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, போலந்து போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் வந்து குடியேறினார்கள். அவர்களைத் தவிர பெருமளவு யூதர்கள், லெபனான் அரேபியர்கள், ஜப்பானியர்கள் ஆகியோரும் 19 ம் நூற்றாண்டிலேயே வந்து குடியேறியுள்ளனர். இன்றைக்கும் ஸௌ பவுலு நகரின் ஒவ்வொரு பகுதியும் பல்லின மக்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கின்றன. "சாந்தோ அமரோ" வட்டாரம் குட்டி ஜெர்மனியாக காட்சியளிக்கின்றது. அதே போல, "ஆர்மேனியா" ஆர்மேனியரின் வட்டாரம், "விலா மரியானா" அரபு வட்டாரம், "பெர்டிசெஸ்" யூத வட்டாரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஸௌ பவுலு நகரிற்கு அருகாமையில் "Holambra" என்றொரு குடியேற்றம் உள்ளது. பெயரில் இருந்தே அது டச்சுக் காரரின் பிரதேசம் என்று ஊகிக்கலாம்.

அனேகமாக அனைத்து ஐரோப்பியர்களும், ஜப்பானியர்களும் தமது நாட்டில் தீராத வறுமை காரணமாக பிரேசிலுக்கு புலம்பெயர்ந்தவர்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்த சில வருடங்களின் பின்னரும் இந்த புலம்பெயர் படலம் தொடர்ந்தது. தமது ஏழைகள் பொருளீட்டுவதற்காக கடல்கடந்து செல்வதை ஐரோப்பிய அரசுகளும் ஊக்குவித்தன. பிரேசில் அரசு ஐரோப்பிய குடியேறிகளை இருகரம் நீட்டி வரவேற்றது. இன்று ஐரோப்பா வரும் மூன்றாம் உலக குடியேறிகளை நடத்தும் விதமானது, அவர்களது இரட்டை அளவுகோலை எடுத்துக் காட்டுகின்றது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதியாக வந்தாலும் "அதிர்ஷ்டம் தேடி பிழைக்க வந்தவர்கள்" என்று ஐரோப்பிய அரசுகள் ஏளனம் செய்கின்றன. அன்று தமது குடிமக்கள் அமெரிக்காவுக்கு பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்ததை மறந்து விட்டு பேசுகிறார்கள். இதிலே குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம், தொழில்நுட்ப அறிவின் பரவலாக்கம். ஐரோப்பியர்கள் தமது முன்னாள் ஆசிய, ஆப்பிரிக்க காலனிகளுடன் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் ஸௌ பவுலு நகரில் குடியேறியவர்கள் தமது வெள்ளை இனத்தவர்கள் என்பதால், விமானம் செய்யும் தொழில் நுட்பத்தைக் கூட சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பொத்தாம்பொதுவாக பிரேசிலை வறிய நாடு என்று கூறுவது முறையாகாது. பிரேசிலுக்கு விஜயம் செய்பவர்கள் அங்கு காணப்படும் முரண்பாடுகளைக் கண்டு அதிர்ச்சி அடைவார்கள். வளர்ச்சியடைந்த முதலாம் உலகமும், அபிவிருத்தியையே கண்டிராத மூன்றாம் உலகமும் அருகருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கோ தொலைதூர ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டு, காலனிகளை சுரண்டிய காலம் மாறி விட்டது. இப்பொழுது எஜமானர்களின் வாரிசுகள், அந்தக் காலனிகளிலேயே நிரந்தரமாகக் குடியேறி சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறிய காலகட்டத்தை பிரேசிலில் தெளிவாக காணலாம். அந்தக் மாற்றம் இடம்பெற்ற பொழுது தான் அடிமை முறையும் ஒழிக்கப்பட்டது. பிரான்ஸ், அமெரிக்காவில் தோன்றிய பூர்ஷுவா புரட்சிக் காற்று பிரேசிலிலும் வீசியது.

ஔரோ பிரேட்டோ (Ouro Preto), 18 ம் நூற்றாண்டில் தங்க வேட்டைக்கு புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. பிரேசில் முழுவதிலும் அந்தப் பிரதேசத்தில் மட்டுமே அதிகளவு தங்கமும், வைரமும், பிற விலைமதிக்க முடியாத ரத்தினக் கற்களும் கிடைத்தன. அங்கே குடியேறிய மக்கள் அனைவரும் தங்கம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். தங்கத்தை சாப்பிட முடியாது என்பதை காலந்தாழ்த்தி புரிந்து கொண்ட பொழுது, நிலைமை கட்டுமீறி சென்று விட்டது. உணவுப்பொருட்கள் யாவும் தங்கத்தை விட பதினைந்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. உணவுப் பற்றாக்குறையால் பஞ்சம் தலைவிரித்தாடியது. பை நிறைய தங்கம் இருந்தும் சாப்பிட எதுவுமின்றி பலர் இறந்தார்கள். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, போர்த்துக்கேய காலனிய அதிகாரிகள் வரியை உயர்த்தி மக்களை வருத்தினார்கள். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கூட காலனிய ஆட்சியாளருக்கு எதிராக திரண்டனர்.

பிரேசிலை குடியரசாக்கும் இலக்கோடு புரட்சிக்கு தயாரானது ஒரு சிறு குழு. நடுத்தர வர்க்க புத்திஜீவிகளைக் கொண்ட அந்தக் குழுவினர் செயலில் இறங்கும் முன்பே கைது செய்யப்பட்டனர். ஆட்சிக்கவிழ்ப்பு குற்றம் சாட்டப்பட்ட குழவில் இருந்த சிலர் அதிகாரத்தில் இருந்த உறவினர் உதவியால் விடுதலை பெற்றனர். பிறர் தமக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சத்தியம் செய்து தண்டனையில் இருந்து தப்பிவிட்டார்கள். ஒரேயொரு உறுப்பினர் மட்டும், ஜோகிம் ஜோஸ் த சில்வா சாவியர் என்ற பல் வைத்தியர், கொள்கையில் உறுதியாக நின்றார். தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க மறுத்தார். ஆட்சியாளர்கள் அவரது தலையை வெட்டி நகர சதுக்கத்தில் காட்சிக்கு வைத்தார்கள். இந்த ஒரு சம்பவத்தை தவிர பிரேசிலில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டம் எதுவும் நடக்கவில்லை.

1822 தொடக்கம் 1889 வரை பிரேசிலை பேட்ரோ அரசவம்சத்தினால் (Pedro I & II) ஆளப்பட்ட சாம்ராஜ்யமாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் காலனிய எஜமானான போர்த்துக்கல் ஐரோப்பாவில் நெருக்கடியில் சிக்கியிருந்தது. நெப்போலியனின் படையெடுப்புகள் காரணமாக மன்னர் குடும்பம் பிரேசிலுக்கு தப்பியோடியது. அங்கிருந்த படியே பிரேசிலையும், போர்த்துக்கல்லையும் ஆட்சி செய்தனர். ஒரு ஐரோப்பிய நாட்டின் தலை நகரம் லத்தீன் அமெரிக்காவில் அமைந்திருந்தது, உலக வரலாற்றில் அது தான் முதலும் கடைசியுமாகும். 15 நவம்பர் 1889 ல், இராணுவ அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். சக்கரவர்த்தியை போர்த்துக்கல்லுக்கு கப்பலேற்றி அனுப்பி விட்டு குடியரசு பிரகடனம் செய்தார்கள். இந்த முறை குடியரசுவாதிகளுக்கு இங்கிலாந்து பக்கபலமாக இருந்தது. பிரேசிலின் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தை, முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றியதில்
ஆங்கிலேயரின் பங்களிப்பு பிரதானமானது.

நகரங்களில் முதலாளித்துவ பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்ட பொழுதிலும், நாட்டுப்புறங்களில் பெரும் நிலச்சுவாந்தர்களின் ஆதிக்கம் குறையவில்லை. நிலமற்ற விவசாயிகளின் பிரச்சினையும் தீரவில்லை. அடிமை முறை ஒழிப்பில் இருந்து ஆரம்பிப்போம். சுதந்திரம் பெற்ற அடிமைகளில் பலர் வேலை தேடி நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தார்கள். எஞ்சிய சிலர் கிராமத்தில் விவசாயம் செய்ய விரும்பினர். ஆனால் அவர்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று, முன்னாள் எஜமானிடம் கூலி வேலை செய்வது அல்லது அவனிடமே குத்தகை நிலம் எடுப்பது. இரண்டாவது, வளமற்ற தரிசு நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்வது. சுயாதீனமாக கமம் செய்யும் விவசாயிகளின் நிலங்கள் அதிக விளைச்சலை தருமாயின், அவற்றை பெரிய பண்ணையார்கள் அபகரிக்க பார்ப்பார்கள். அடிமாட்டு விலைக்கு விற்க மறுக்கா விட்டால், குண்டர்களை வைத்து அடித்துப் பறிப்பார்கள். வெள்ளையின சிறு விவசாயிகளின் கதியும் அது தான்.

Movimento dos Trabalhadores Rurais Sem Terra (MST) என்ற நிலமற்ற விவசாயிகளின் அமைப்பு இன்று அரசுக்கு சவாலாக விளங்குகின்றது. எழுபதுகளின் இறுதியில் பிரேசிலின் தென் மாநிலங்களில் தோன்றியது அந்த அமைப்பு. நிலப்பிரபுக்களின் நிலங்களை பறித்து நிலமற்ற விவசாயிகளுக்கு கொடுத்து வருகின்றது. உலகில் எந்தவொரு பண்ணையாரும் தனது நிலத்தில் சிறு பகுதியை ஏழை விவசாயிக்கு தானமாக கொடுப்பதில்லை. போராடாமல் எந்த உரிமையும் கிடைப்பதில்லை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள், MST யில் அங்கம் வகிக்கும் ஒன்றைரை மில்லியன் ஏழை விவசாயிகள். இது வரை காலமும் 350 க்கு மேற்பட்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம், நிலமற்ற விவசாயிகள் சிறு துண்டு நிலமாவது சொந்தமாக்கியுள்ளனர். MST நிலப்பறிப்புடன் மட்டும் நிற்காது, நகர்ப்புற இடதுசாரி ஆர்வலர்களின் உதவியுடன் சமூக நலன் பேணும் திட்டங்களையும் நடைமுறைப் படுத்துகின்றது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விதைகளை, விவசாய உபகரணங்களை, பூச்சி கொல்லி மருந்துகளை வழங்கி வருகின்றது. அதிக விளைச்சலை பெறும் வகையில் உற்பத்தி செய்வதற்கு, பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். பாடசாலைகளைக் கட்டி விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரும்பான்மை வாக்குப்பலத்தில் ஆட்சிக்கு வந்த தொழிலாளர் கட்சியும், ஜனாதிபதி லூலாவும் சர்வதேச இடதுசாரிகள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த லூலா, சிறு வயதில் கஷ்டப்பட்டவர். ஆரம்ப பாடசாலையுடன் படிப்பை இடைநிறுத்தி விட்டு ஆலைத் தொழிலாளியாக வேலை செய்தவர். இதனால் ஏழைகளின் மனதறிந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்ததால், பிரேசிலில் புரட்சிகர மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. லூலா ஆட்சிக்கு வந்த பின்னர் எதிரிகளையும், நண்பர்களையும் ஆச்சரியப்பட வைத்தார். ஐ.எம்.எப். சொற்கேட்டு ஆட்சி செய்தார். லூலா தெரிவான காலகட்டம் இங்கே முக்கியமானது. 1998 ல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி பிரேசிலை வெகுவாகப் பாதித்தது. அத்தகைய தருணத்தில் லூலா போன்ற இடதுசாரித் தலைவரின் அவசியத்தை முதலாளிகளும் உணர்ந்திருந்தனர். பதவிக்கு வந்த சில வருடங்களிலேயே தொழிற்கட்சி மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். லூலாவின் மந்திரிசபை பொருளாதார சீர்திருத்தம் எதிலும் இறங்காததால், வெறுத்துப் போன MST ஆதரவை வாபஸ் வாங்கியது. MST போர்க்குணாம்சம் மிக்க அமைப்பாக இருந்த போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவது என்.ஜி.ஒ. என்ற தொண்டு நிறுவனங்களாகும். பிரேசிலின் ஏழைகள் காலம் ஒரு நாள் மாறும் என்று காத்திருக்கிறார்கள்.


தொடரின் முன்னைய பதிவுகள்:

5 comments:

MK said...

நல்லதொரு செய்தித்தொகுப்பு. அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி!

அமிர்தா said...

நீங்கள் எழுதும் விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாகவும் , புதிய விஷயங்களாகவும் உள்ளது.

உங்கள் பதிவுகளை பலமுறை Reshare செய்திருக்கிறேன்.

தோழர் உங்கள் எழுத்து படிப்பதற்கு கடினமாக உள்ளது.

Kalaiyarasan said...

//தோழர் உங்கள் எழுத்து படிப்பதற்கு கடினமாக உள்ளது.//

மகா, எனது மொழிநடையை குறிப்பிடுகிறீர்களா?

அமிர்தா said...

ஆமாம் தோழர். உங்கள் mail id கொடுங்கள் இதைப் பற்றி விளக்கமாக‌ சொல்ல விரும்புகிறேன்.

Kalaiyarasan said...

kalaiy26@gmail.com
இதற்கு தொடர்பு கொண்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி.