Monday, August 13, 2012

மெல்லப் பேசுங்கள், கொல்லப் போகிறார்கள்!

"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
 (பகுதி - 6)
"உலகிலேயே மிகவும் இரகசியமான, கட்டுகோப்பான இயக்கம்", என்றெல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் புகழப் பட்டது போன்று, எழுபதுகளில் க்மெர் ரூஜ் இயக்கம் புகழப்பட்டது. ஒரு காலத்தில், புலிகளுக்கு கிடைத்ததை விட, பல மடங்கு அதிகமான சர்வதேச அங்கீகாரம் க்மெர் ரூஜுக்கு கிடைத்திருந்தது. சுமார் பதினான்கு வருடங்களாக, க்மெர் ரூஜ் அரசை, "கம்போடிய மக்களின் ஏக பிரதிநிதியாக", ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து வந்தது. இன்று, அதே ஐ.நா. மன்றம், நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு, க்மெர் ரூஜ் கால இனப்படுகொலையை விசாரிக்கும்  வேடிக்கையான நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

க்மெர் ரூஜ் இயக்கத்தின் உள்கட்டமைப்பை ஆராய்ந்தால், சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பெண்களின் படையணிகளும், ஆண் போராளிகளுக்கு நிகராக போரிட்டு வந்துள்ளன. ஈழம் போன்று, பழைமைவாத கலாச்சாரத்தில் ஊறிய கம்போடிய சமுதாயத்தில், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஆயுதமேந்திப் போராடுவதென்பது, ஒரு மாபெரும் சமூகப் புரட்சி ஆகும். க்மெர் ரூஜ் போராளிகள், இறுதி வெற்றி கிடைக்கும் வரையில் திருமணம் செய்யத் தடை இருந்தது. (அதே நேரம், தலைவர்கள், தளபதிகள், மணம் முடித்து, குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.) முகாமில் இயக்கப் பாடல்களை மட்டுமே கேட்க முடியும். சினிமாப் பாடல்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. கம்போடியா முழுவதும் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், இயக்கப் போராளிகளுக்கு இருந்த விதிகள் எல்லாம், பொது மக்களுக்கும் செல்லுபடியானது. 

நாட்டுக்காக போராட கிளம்பிய போராளிகள், "இல்லற வாழ்வை துறந்து, துறவு நிலை வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொண்ட புனிதர்கள்" போன்று பொது மக்களால் கருதப் பட்டனர். இந்து மத வேர்களைக் கொண்ட, தேரவாத பௌத்த நாடான கம்போடியாவில், சிறுவயதிலேயே துறவறம் பூணுவது, சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று.  பெற்றோர்கள் தம் பிள்ளைகளை, இளம் பிக்குகளுக்கான பாடசாலையில் சேர்த்து விடுவார்கள். அது கட்டாயமில்லா விட்டாலும், பல பெற்றோருக்கு அது ஒரு சமூக அந்தஸ்து அல்லது பெருமைக்குரிய விடயம். சாலோத் சார் (பொல் பொட்) கூட, பிரபலமான விகாரைப் பள்ளி ஒன்றில் பிக்குவாவதற்கு படித்து, பட்டம்  பெற்றவர் தான். ஆகையினால், பிற்காலத்தில் கம்போடிய மக்களின் வாழ்க்கையயை தீர்மானித்த கடுமையான க்மெர் ரூஜ் சட்டங்களும், ஒரு மதத்தின் கடும்போக்கு விதிகளைப் போன்று காண்டப்பட்டன. 

கிராமங்களில் அமைக்கப்பட்ட கூட்டுறவுப் பண்ணைகளில் (கம்யூன்), அனைவரும் கட்டாயமாக வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். வயல்களில், அல்லது   கட்டுமானப் பணிகளில், அதிக உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் பட்டனர். (விதிவிலக்காக முன்னாள் ஆலைத் தொழிலாளர்கள், தலைநகரத்தில் இருந்த தொழிற்சாலைகளை இயக்குவதற்கு அனுப்பப் பட்டிருந்தனர்.) பகல் முழுவதும் வேலை செய்த மக்கள், இரவில் தங்குவதற்கு ஓலைக் கொட்டில்கள் கட்டப் பட்டிருந்தன. அவற்றை வீடுகள் என்பதை விட, முகாம்கள் என்று அழைப்பதே பொருத்தம். ஆண்கள் ஒரு முகாமிலும், பெண்கள் இன்னொரு முகாமிலுமாக தனியாக பிரித்து வைக்கப் பட்டனர்.

பிள்ளைகள் பெற்றோருடன் தங்க அனுமதிக்கப் படவில்லை. அவை பிற பிள்ளைகளுடன் தனியான முகாம் ஒன்றில் தங்க வேண்டும். இதனால், குடும்பங்கள் பிரிந்து வாழ்ந்தன.  (இயக்கப் பொறுப்பாளர்கள், தலைவர்களின் குடும்பங்களும் அவ்வாறு பிரிந்து வாழ்ந்தன.) கணவன், மனைவி சேர்ந்திருப்பதற்கும், பெற்றோர் பிள்ளைகளை பார்க்கவும், இயக்கம் நேரம் ஒதுக்கிக் கொடுத்தது. தனி நபரின் விருப்பங்கள், குடும்ப உறவுகள் எல்லாம் இயக்க விதிகளுக்கு கட்டுப்பட்டவை. இந்து மத ஆன்மீகத்தில் கூறப் படும், "நான்" என்ற அகந்தை அடக்கப் பட வேண்டும். க்மெர் ரூஜ் ஆட்சியில், யாரும் "நான்" என்று சொல்லக் கூடாது. "நாம்" என்று சொல்ல வேண்டும். கடவுளிடம் கருணை காட்டுமாறு கேட்பதைப் போன்று, இயக்கத்திடம் யாசிக்க வேண்டும். அன்னாசிப் பழத் தோல் போன்று, இயக்கத்திற்கு ஆயிரம் கண்கள் இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர். 

க்மெர் ரூஜ் இயக்கத்தினர் விதித்த கட்டுப்பாடுகள், எத்தனை கடுமையாக இருந்த போதிலும், மக்கள் அதனை விமர்சிக்க அஞ்சினார்கள். யாருக்கும் அரசியலில் கருத்துக் கூறும் துணிவு இருக்கவில்லை. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதர்களாக, அன்றாட கடமைகளில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டு வாழ்ந்தார்கள். ஏற்கனவே கருத்துக் கூறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியுமாகையால், மக்கள் வாயை மூடிக் கொண்டு காலத்தைக் கழித்தார்கள்.  நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடனும் தமது குறைகளை பகிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில், நம்பிக்கைக்குரியவர் என்று நீங்கள் நினைக்கும் யாரும், க்மெர் ரூஜ் உளவாளியாக இருக்கலாம். எவராவது பக்கத்தில் பதுங்கி இருந்து ஒட்டுக் கேட்கலாம். இரவில் மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதை தவிர்த்தார்கள். "சாப்பிடுவதற்கும், மூச்சு விடுவதற்கும் மட்டுமே வாய் திறக்க வேண்டும்."  என்பது அடிக்கடி கேட்கும் புத்திமதி ஆகும்.  இலங்கையில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட மாகாணத்திலும், இதே போன்ற நிலைமை காணப்பட்டது. யாழ்ப்பாணத்திலோ, வன்னியிலோ, புலிகளின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள், தங்கள் அனுபவங்களை இப்போதும் நினைவுகூருகின்றனர். 

தடை செய்யப்பட்ட மாற்று  இயக்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், தமக்கெதிராக சதி செய்யலாம் என்று புலிகள் அஞ்சியதைப் போல, க்மெர் ரூஜ் தலைமையும் நடந்து கொண்டது. முன்பிருந்த கம்போடிய அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல, மன்னராட்சி அனுதாபிகள், ஜனநாயக வழியில் இயங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். அவர்களும், வர்களது குடும்ப உறுப்பினர்களும், மக்களிடம் இருந்து பிரித்தெடுக்கப் பட்டு, சிறை வைக்கப் பட்டனர். பெரும்பாலானோர் விசாரணையின் பின்னர் கொல்லப் பட்டனர். எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டும் சந்தேகிக்கப் படவில்லை. உதாரணத்திற்கு, (பொல் பொட் தலைவராக நியமிக்கப் பட்ட) 1960 ம் ஆண்டு, கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கமாக அறிவிக்கப் பட்டது.  இதனை பல மூத்த உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். ஏனெனில், ஒன்பது வருடங்களுக்கு முன்னர், 1951 ம் ஆண்டு, (வியட்நாமியர்களின் உதவியுடன்) கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட தகவல், ஏற்கனவே வரலாற்றில் பதியப் பட்டிருந்தது. அந்த வரலாற்றுத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வாதாடிய, தலைவர்கள், உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். "வியட்நாமிய கைக்கூலிகள்" என்று குற்றம் சாட்டப் பட்டு கொலை செய்யப் பட்டனர்.

க்மெர் ரூஜ் ஆண்ட கம்போடியாவில், மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டும் சந்தேகிக்கப் படவில்லை. ப்னோம் பென் போன்ற நகரங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களும், அவர்களது சமூகப் பின்னணி காரணமாக சந்தேகப் பட்டியலில் இருந்தனர். நகரங்களில் நவீன ஆடை, அணி கலங்களை, "பேஷன்" பார்த்து அணிந்து பழக்கப்பட்ட மக்கள், தற்பொழுது கறுப்பு நிற சீருடை மட்டுமே அணிய வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர். கம்போடியாவின் விவசாயக் குடிமக்கள், காலங்காலமாக கறுப்பு நிற உடை அணிவது வழக்கம். தோளில் எப்போதும், சிவப்பும் வெள்ளையும் கலந்த சால்வை ஒன்று தொங்கும். உச்சி வெயிலில் வேலை செய்யும் நேரம், அதனை தலைப்பாகை போன்று கட்டிக் கொள்வார்கள். முகம் கழுவி விட்டு, அந்த துண்டால் துடைத்துக் கொள்வார்கள். 

"உழவர்களின் உடை", கம்போடிய மக்களின் பொதுவான ஆடையாக்கப் பட்டது. நமது நாட்டில் எல்லோரும், கிராமப்புற விவசாயிகள் போன்று, வேட்டியை  மடித்துக் கட்டி, தோளில் சால்வை அணிந்து சென்றால் எப்படி இருக்கும், என்பதை கற்பனை செய்து பாருங்கள். மேலும், நகரத்தில் வாழ்ந்த காலத்தில், மடிப்புக் குலையாத சட்டை போட்டுக் கொண்டு, குளிரூட்டிகள் பொருத்திய அலுவலகத்தில் வேலை செய்தவர்கள்; கொதிக்கும் வெயிலில், வயலில் சேற்றுக்குள் நின்று கொண்டு நெல் பயிரிடும் காட்சியையும் நினைத்துப் பாருங்கள். க்மெர் ரூஜின் ஆட்சிக் காலத்தில், அத்தகைய "கொடுமைகளை" அனுபவித்த மத்தியதர வர்க்கம், எந்தளவு வன்மத்தை மனதில் வைத்திருந்திருக்கும்?

நாளையே தமிழ் நாட்டில் ஒரு "தமிழ் க்மெர் ரூஜ் இயக்கம்" அதிகாரத்திற்கு வந்தால், சொகுசாக வாழ்ந்த மேட்டுக்குடியினரை வயலில் வேலை செய்ய வைக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதைத் தடுப்பதற்கு ஒரே வழி, இப்பொழுதே "பொல் பொட், க்மெர் ரூஜ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை" தீவிரமாக நடத்த வேண்டும். "பொல் பொட் இருபது இலட்சம் மக்களை இனப்படுகொலை செய்த கொலை வெறியன்" என்ற செய்தியை மட்டும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். "எதற்காக கொலை செய்தார்கள்?" என்ற காரணம் எல்லாம் எமக்குத் தேவையில்லை. "பொல் பொட் கொலை செய்வதில் இன்பம் கண்ட மன நோயாளி." அது மட்டுமே காரணம்.  

பொல் பொட்  உருவாக்கிய, "புதிய சமத்துவ சமுதாயத்தில் சேர மறுத்ததால், சாதாரண விவசாயியாக வேலை செய்வதற்கு சுய கெளரவம் இடம் கொடுக்காததால்," ஆயிரக் கணக்கான மத்திய தர வர்க்க மக்கள் கொல்லப் பட்டனர். அது தலைமை இட்ட கட்டளையாக இருக்கவில்லை. ஆனால், கிராமப்புற விவசாயிகளின் பிள்ளைகளான, படிப்பறிவற்ற க்மெர் ரூஜ் போராளிகள் மத்தியில், தமது சொல்லுக்கு கட்டுபடாதவர்களை கொன்று விடும் முரட்டுத் தனம் மேலோங்கிக் காணப்பட்டது. அது ஒரு வர்க்க முரண்பாடு, அல்லது வென்றவர்கள் தோற்றவர்களை பழிவாங்கும் வெறிச் செயல் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஜி அரசில் பணியாற்றிய, அல்லது ஆதரவளித்த சந்தேகத்தின் பெயரில் பலர் கொல்லப் பட்டனர். ஜெர்மனியிலும், பிரான்சிலும் மட்டுமே, இலட்சக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும் பொழுது, கம்போடியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு எனலாம். 

கம்போடியாவின் அனைத்துப் பிரைஜைகளும், வயல்களில் வேலை செய்ததால், வேலை குறைவாகவும், ஆட்கள் அதிகமாகவும் இருந்தனர். வேலை கடினமாக இருக்கவில்லை. ஒரு காலத்தில் அங்கு வேலை செய்தவர்கள், பின்னர் புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். தஞ்சம் கோரிய நாட்டில் கிடைத்த தொழில் அதை விடக் கடினமாக இருந்தது. கம்போடியாவில் பரம்பரையாக விவசாயம் செய்து வந்த மக்களுக்கு, அது ஏற்கனவே பழகிப் போன தொழில். ஆனால், அதற்குப் பழக்கப்படாத வேறு வேலை செய்து கொண்டிருந்த மக்களுக்கு, அது கடினமாகத் தோன்றியதில் வியப்பில்லை. இருப்பினும், க்மெர் ரூஜ் ஆதரவுத் தளமான, கிராமப்புற விவசாயிகளையும் வெறுக்க வைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதை மறுக்க முடியாது.

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பொறுப்பான தளபதியின் முடிவில் தான் எல்லாம் தங்கி இருந்தது. சிலர் மக்களுடன் தாராளமாக நடந்து கொண்டனர். சிலர் மக்களை அடிமைகள் போன்று நடத்தி, அவர்களது உழைப்பை சுரண்டும் வண்ணம், அதிக வேலை வாங்கினார்கள்.  மக்கள்  ஆயுதமேந்திய க்மெர் ரூஜ் போராளிகளுக்கு பயந்து வாழ்ந்தனர். அவர்கள் சொன்ன படி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எதிர்த்துப் பேசினால் என்ன நடக்கும் என்பது தெரிந்த விடயம் தான். அடுத்த நாள் ஒரு வேலையாள் குறைந்திருப்பார். ஒரு காலத்தில் எதிர்ப்பவர்களை எல்லாம் கொலை செய்வது மலிந்து விட்டதால், சில இடங்களில் வேலை செய்வதற்கே ஆட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களை எப்படி நடத்துவது என்பதில், பிரதேசப் பொறுப்பாளர்களுக்கு இடையில் வித்தியாசம் இருந்த போதிலும், ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலம், தொடர்ந்து பத்து நாட்கள் வேலை, ஒரு நாள் ஓய்வு என்பது எல்லா இடங்களிலும் நடைமுறைப் படுத்தப் பட்டது. 

பத்து நாட்கள் வேலை, ஒரு நாள் ஓய்வு என்பது பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்திலும் நடைமுறையில் இருந்தது. பொல் பொட்டும், பிற தலைவர்களும் பிரான்ஸில் கல்வி கற்றதால், பல பிரெஞ்சு தத்துவங்களை நடைமுறைப் படுத்தினார்கள். பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்திலும், மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே பலர் கொல்லப் பட்டனர். மதம் தடைசெய்யப்பட்டது. தேவாலயங்கள் மூடப்பட்டன. பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் கொல்லப்பட்டனர், அல்லது சாதாரண மக்களைப் போல வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். புரட்சிக்கு எதிரானவர்கள் என்று கருதப் பட்டவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். ஒரு காலத்தில் புரட்சியில் முன் நின்று பாடுபட்ட விசுவாசமான புரட்சியாளர்கள், தலைவர்கள் கூட, எதிர்ப்புரட்சியாளர் முத்திரை குத்தப் பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு பல ஒற்றுமைகளை கூறிக் கொண்டே போகலாம்.  

க்மெர் ரூஜ் நடைமுறைப்படுத்திய கம்யூன் முறை, எந்தவொரு கம்யூனிச நாட்டிலும் நடைமுறையில் இருக்கவில்லை. சோவியத் ஒன்றியம், சீனா போன்ற நாடுகளிலும், சோஷலிசப் புரட்சிக்குப் பின்னர், கூட்டுறவுப் பண்ணைகள் (கம்யூன்) கொண்டுவரப் பட்டன. ஆனால், அங்கெல்லாம் குடும்ப உறுப்பினர்களை பிரித்து வைக்கவில்லை. மத்திய கால பிரான்ஸில், கத்தோலிக்க மதத்தின் அதிகாரத்தை எதிர்த்துப் போராடிய, "கத்தார்கள்" (Heretics) என்ற மதப் பிரிவினர் அவ்வாறான கம்யூன் முறையை பின்பற்றினார்கள். அதுவும் ஒரு சமத்துவ சமுதாயம் தான். க்மெர் ரூஜ் போல தூய்மைவாதப் போக்கை கடைப்பிடித்து ஒழுகினார்கள். தென் பிரான்ஸில் பலமாக இருந்த கத்தார்கள் ஆட்சிப் பிரதேசத்தில், ஆண்களும், பெண்களும் பிரிந்து வாழ்ந்தார்கள். இல்லற வாழ்வை ஒறுத்து துறவறம் பூணுவது, சாதாரண குடிமக்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டிருந்தது. 

நகரங்களில் வாழ்ந்த மக்களை பலவந்தமாக வெளியேற்றி, கிராமங்களில் வயல்களில் கட்டாய  வேலை  செய்ய வைத்த, க்மெர் ரூஜ் கால "கொடுமை"யை நினைத்து தலையிலடித்துக் கொள்கிறோம். "மாபாவி பொல் பொட் நாசமாப் போக..." என்று மண்ணள்ளித் தூற்றுகின்றோம். ஆனால், அந்தக் காலத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான வளர்ச்சிப் பணிக்கான திட்டங்களை தீட்டிய மேலைத்தேய பொருளியல் மேதைகளுக்கு அது விசித்திரமாக தோன்றவில்லை. "சனத்தொகை பெருக்கத்தால் அவதியுறும் நகரங்களில் வாழும் மக்களை, நாட்டுப்புறங்களை நோக்கி நகர்த்த வேண்டும். பயிரிடப்படாத தரிசு நிலங்களையும், பாவனையில் இல்லாத நிலவுடமையாளர்களின் நிலங்களையும் கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும். விவசாயத்தில் இரசாயன கிருமி நாசினி தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்." இப்படிப் பல திட்டங்களை அவர்களே முன்வைத்தார்கள். ஆனால் அவையெல்லாம் ஏட்டில் மட்டுமே எழுதப் பட்டிருந்தன. யார் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?  

பொல் பொட் அரசு அவற்றை எல்லாம் கச்சிதமாக நடைமுறைப் படுத்தியது. ஆனால், மக்கள் என்ன விலை கொடுத்தார்கள்? பொல்பொட் அரசின் நோக்கங்கள் நன்றாகவிருந்த போதிலும், ஆயுத அதிகாரம் மேல் மோகம் கொண்ட பிரதேச பொறுப்பாளர்கள் கொடூரமாக நடந்து கொண்டார்கள். அது எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது. பல்வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள், வயல்களிலேயே புதைக்கப் பட்டன. (அதனால் தான் "கொலைக்களம்"(Killing Fields) என்ற பெயர் வந்தது.) ஏனென்றால், மனிதப் பிணங்களும் பயிருக்கு   உரமாகலாம். "போரில் மடிந்தவர்கள் உரமாகி விடுதலைப் பயிர் வளர்த்தனர்", என்று கேள்விப் பட்டிருப்போம். அது அங்கே நடந்து கொண்டிருந்தது. இறந்தவர்களின் எலும்புக் கூடுகளையும் இடித்து தூளாக்கி, இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம் என்று சிலருக்குத் தோன்றியது. அந்த நோக்கத்துடன் சேகரித்து வைக்கப்பட்ட மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், இன்றைக்கு "க்மெர் ரூஜ் இனப்படுகொலையின் சாட்சியங்களாக" காட்சிப் பொருளாக்கப் பட்டுள்ளன. 

க்மெர் ரூஜ் அரசாங்கத்தில், பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர்கள் இருந்த போதிலும், பொருளாதாரத் திட்டங்களில் குளறுபடி இருந்ததாகத் தெரிகின்றது. 1975 ஏப்ரல் மாதம், க்மெர் ரூஜ் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னரும், புதிய பணநோட்டுகளை புழக்கத்தில் விடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே இலட்சக்கணக்கான நோட்டுகள், சீனாவில் அச்சிடப் பட்டு தயாராக இருந்தன. ஆனால், கட்சித் தலைமை வேறு முடிவுகளை எடுத்தது. பணம் இருந்தால், ஊழலும் இருக்கும். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்வதையும், இரகசியமாக செல்வம் சேர்ப்பதையும் தவிர்க்க முடியாது. ஆகவே, பணம் பயன்பாட்டில் இல்லாமல் தடை செய்யப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, பண்டமாற்று முறை அமுல் படுத்தப்பட வேண்டும். ஒரு பிரதேசத்தில் அளவுக்கதிகமாக கிடைக்கும் உற்பத்தி  பொருளை, தட்டுப்பாடு நிலவும் பிரதேசத்திற்கு அனுப்பலாம். ஏற்கனவே, கம்போடியாவின் மலைஜாதி மக்கள் பண்டமாற்று முறைக்கு பழக்கப் பட்டவர்கள். பண்டமாற்றுப் பொருளாதாரத்தினால், கம்போடிய மக்கள் ஒன்றும் பெரிதாகப் பாதிக்கப் படவில்லை. பணம் புழக்கத்தில் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு பொருளுக்கும் விலை தீர்மானிக்கப் பட்டது. 

அதிகாரத்தில் உள்ளவர்கள், இரகசியமாக செல்வம் சேர்க்க முடியா விட்டாலும், ஊழல் வேறு வடிவத்தில் தொடர்ந்தது. பல இடங்களில் பண்டமாற்றுப் பொருளாதாரம் இரத்துச் செய்யப்பட்டது. மக்களின் அடிமை வாழ்வும், துயரமும் அப்பொழுது தான் ஆரம்பமாகியது. ஒரு கம்யூன் தலைவர், அல்லது பிரதேசப் பொறுப்பாளர், தனக்கு அதிகளவு உணவை பதுக்கிக் கொண்டார். அதே நேரம், மக்கள் கஞ்சியை மட்டும் குடித்து விட்டு வேலைக்கு சென்று வர வேண்டிய நிலையில் இருந்தனர். அரிசி, காய்கறி, இறைச்சி எல்லாம் ரேஷன் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டு வந்தது. அது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடைமுறைப் படுத்தப் படவில்லை. சில பிரதேசப் பொறுப்பாளர்கள், ரேஷனை குறைத்து மக்களைப் பட்டினி போட்டார்கள்.  சில இடங்களில் அளவுக்கதிகமாக விளைந்த அரிசியை, மக்களின் உணவுத் தேவைக்கு கொடுக்காமல், வெளிநாடுகளுக்கு அனுப்பும் வணிகர்களுக்கு விற்று காசாக்கினார்கள். அதே நேரம், உணவோ, மருந்தோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. சில இடங்களில் பஞ்சம் ஏற்பட, அதுவும் காரணமாக இருக்கலாம். மேலும், நோய் வாய்ப்பட்டவர்கள் உற்பத்தியில் ஈடுபட முடியாதென்பதால், அவர்களுக்கென ஒதுக்கும் உணவின் அளவு குறைக்கப் பட்டது. வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு  நிலவியது. எங்கேயும் மேலைத்தேய மருந்து கிடைக்கவில்லை. இதனால், பல நோயாளிகள் சாவை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. 

ஒரு சில இடங்களில் வேண்டுமென்றே உணவுப்பற்றாக்குறை தக்க வைக்கப் பட்டது.  அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, சில பொறுப்பாளர்கள் தம்மை எதிர்ப்பவர்களை தண்டித்தார்கள். ஆதரித்தவர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். வைப்பாட்டிகளும் வைத்துக் கொண்டார்கள்.  இதனால் க்மெர் ரூஜ் ஆட்சி, உள்ளுக்குள்ளேயே புழுத்து அழுகத் தொடங்கியது. ஒரு காலத்தில், இரட்சகர்களாக கருதப்பட்ட போராளிகள், மக்களிடம் இருந்து அன்னியப் பட்டார்கள். க்மெர் ரூஜ் இராணுவம், மக்களுக்கு மேலேயுள்ள அதிகார வர்க்கமாக பார்க்கப் பட்டது. இதனால், நகரம் சார்ந்த மத்திய தர வர்க்கத்திடமிருந்து மட்டுமல்ல, கிராமம் சார்ந்த விவசாயக் குடிமக்களிடம் இருந்தும், க்மெர் ரூஜ் இயக்கம் அன்னியப் பட்டது. க்மெர் ரூஜின் வீழ்ச்சிக்கு அதுவே தொடக்கப் புள்ளி எனலாம். ஒரு வேளை, பொல் பொட் தலைமை பொறுப்பற்று நடந்து கொண்ட பொறுப்பாளர்களை தண்டித்திருந்தால், நற்பெயரை தக்க வைத்திருக்கலாம். ஆனால் அவர்களோ, "வியட்நாமிய ஏகாதிபத்திய ஊடுருவல், அந்நிய கைக்கூலிகளை களையெடுத்தல்." இவற்றிலே அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.     

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள்:
1."பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
2.கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்
3.இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
4.பொல் பொட் ஒரு கம்யூனிஸ்டா? அல்லது க்மெர் தேசியவாதியா?
5."இன்றிலிருந்து இயக்கம் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும்"

 உசாத்துணை: 
1. Kampuchea, A photo record of the first American visit to Cambodia since April 1975, by Robert Brown, David Kline
2. Pol Pot, The History of a Nightmare, by Philip Short
3. De Glimlach van Polpot, Peter Fröberg Idling
4. A Short History of Cambodia, by John Tully
5. Angkor: An Essay on Art and Imperialism by Jan Myrdal and Gun Kessle

 இணையத் தளங்கள்: 
1. CAMBODIA: NATIONALISM, PATRIOTISM, RACISM, AND FANATICISM, http://www.mekong.net/cambodia/natlism.htm
2. Truth about Pol Pot and Maoism, http://maoistrebelnews.wordpress.com/2011/07/26/truth-about-pol-pot-and-maoism/ 
3. Pol Pot Was Not and Is Not A Communist, http://msuweb.montclair.edu/~furrg/pol/khmerrouge.html
4. Jag såg inget massmord, JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja, http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab
5. Khmer Rouge Prompts Generational Conversation, http://www.theworld.org/2011/06/khmer-rouge-prompts-generational-conversation/
6. What Went Wrong with the Pol Pot Regime, http://www.aworldtowin.org/back_issues/1999-25/PolPot_eng25.htm
7.Cambodia: POL POT THE INTERVIEW AND CONFESSION, http://www.youtube.com/watch?v=BQMyX80jCF8

1 comment:

கவி அழகன் said...

Athisayikka vaitha padaippu