Friday, January 25, 2013

வத்திக்கான்: பாசிஸ்டுகளின் முதலீட்டு வங்கி


வத்திக்கான் உலகிலேயே மிகவும் சிறிய "நாடு". அதனை நாடென்று அழைக்க முடியுமா என்பதே சந்தேகம். ஏனெனில், ரோம் நகரத்தில் ஒரு சிறிய பிரிவு தான் வத்திக்கான். அப்படியானால் அதனை எதற்காக தனி நாடு என்று அழைக்கிறார்கள். அதற்கு சரித்திரப் பின்னணி உண்டு. 20 ம் நூற்றாண்டு வரையில், அது உண்மையிலேயே ஒரு தனியான நாடு தான். ரோம் நகரமும், அதனை சுற்றியுள்ள மத்திய இத்தாலியின் சில பகுதிகளும் வத்திக்கானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் ஆட்சியை பிடித்த முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள், வத்திக்கானின் ஆட்சிக்குட்பட்ட  பகுதிகளை இத்தாலியுடன் சேர்த்துக் கொண்டார்கள். அதற்கு பதிலாக, இன்றுள்ள வத்திக்கான் நகரின் சுதந்திரம் அங்கீகரிக்கப் பட்டது. அதாவது இரண்டு அரசியல் சக்திகளும், ஒருவரின் சுதந்திரத்தை மற்றவர் அங்கீகரித்தார்கள். வத்திக்கானுக்கும் பாசிஸ்டுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வாறு தான் ஆரம்பமாகின. இந்த நெருக்கத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. வத்திக்கானுக்கும், பாசிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளை கண்டால் பிடிக்காது. அன்று இத்தாலி இருந்த நிலையில், கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனை தடுப்பது அவசியம் என்று நினைத்தார்கள். கம்யூனிசத்தை வர விடாமல் தடுப்பதற்காக, வத்திக்கான் உலகம் முழுவதும் தோன்றிய  பாசிச சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டமை ஒன்றும் புதினமல்ல. சோஷலிச கிழக்கு ஐரோப்பாவின் ஒரேயொரு கத்தோலிக்க நாடான போலந்தில் சதி செய்து குழம்ப நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் "கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு" வழிவகுத்ததும் உலகம் அறிந்த விடயங்கள். 

முசோலினி, வத்திக்கானின் சுதந்திரத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை. பாசிஸ்டுகள் இத்தாலி மக்களிடம் இருந்தும், எத்தியோப்பியா போன்ற காலனிகளிடம் இருந்தும் கொள்ளையடித்த பெருந்தொகை பணத்தை, பாதுகாப்பாக வத்திக்கானிடம் கொடுத்து வைத்தார்கள். இரண்டாம் உலகப்போரில் பாசிஸ்டுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், அந்தப் பணம் வத்திக்கானிடம் பத்திரமாக இருந்தது. அதனை அவர்கள் என்ன செய்தார்கள்? பிற ஐரோப்பிய நகரங்களில், அசையா சொத்துக்களில் முதலீடு செய்தார்கள். இலண்டன், பாரிஸ் போன்ற நகரங்களில் மிகவும் செலவு பிடிக்கும் மாவட்டங்களில் உள்ள ஆடம்பர வீடுகளின், அடுக்குமாடி கட்டிடங்களின் உரிமையாளர் வத்திக்கான் என்றால் நம்புவீர்களா? பிரிட்டனில் வெளியாகும் கார்டியன் பத்திரிகை, அது சம்பந்தமான விபரங்களை வெளியிட்டுள்ளது.(How the Vatican built a secret property empire using Mussolini's millions)  

வத்திக்கான் வசம் இருக்கும் முசோலினியின் பணத்தின், இன்றைய மதிப்பு 680 மில்லியன் யூரோக்கள். அதில் ஒரு பகுதி வீட்டு மனைகளில் முதலீடு செய்யப் படுகின்றது. வத்திக்கானுக்கு விசுவாசமான வங்கியாளர்கள் அதனை நிர்வகித்து வருகின்றனர். அனேகமாக அவை வத்திக்கானுக்கு சொந்தமான பினாமி முதலீட்டு நிறுவனங்களாக இருக்கும். Paolo Mennini, மற்றும்  John Varley ஆகியோர் வத்திக்கானுக்கு விசுவாசமான குறிப்பிடத் தக்க முக்கியமான வங்கியாளர்கள் ஆவர். பிரிட்டனின் கத்தோலிக்க வங்கியாளரான John Varley, பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்திருக்கும்  Barclays வங்கியின் தலைமை நிர்வாகி ஆவர். இந்த முதலீடுகளில் கிடைக்கும் இலாபம் எங்கே போகின்றது என்பன போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாது. வத்திக்கானும், அதனோடு சம்பந்தப் பட்ட நிறுவனங்களும் இரகசியமாக வைத்திருக்கின்றன. அந்த நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் எதுவும் பகிரங்கப் படுத்தப் படுவதில்லை. சுதந்திரமான கணக்காளர் எவரையும் பரிசோதிக்க அனுமதிப்பதில்லை.  

வத்திக்கானுக்கு சொந்தமான மூலதனம், பல நாடுகளுக்கு  கைமாறியுள்ளது. 1930 ம் ஆண்டு, பாசிஸ்டுகளின் பணம், லக்சம்பேர்க் நாட்டை சேர்ந்த வங்கி ஒன்றின் கணக்கில் வைக்கப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், அங்கிருந்து "போரில் நடுநிலை வகித்த" சுவிட்சர்லாந்துக்கு மாற்றப் பட்டது. அதில் ஒரு பகுதி, பின்னர்  அமெரிக்க வங்கிகளிலும் வைப்பிலிடப் பட்டது. லக்சம்பேர்க், சுவிட்சர்லாந்து என்பன, சர்வதேச கறுப்புப் பணத்தை கவரும் நோக்குடன், வரிச் சலுகை வழங்கும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது. முசோலினியின் பணம் வத்திக்கானிடம் இருப்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் தான். இது சம்பந்தமான விபரங்கள், ஏற்கனவே பல நூல்களில் வெளியாகி உள்ளன. இதை விட, "மதக் கடமைகளுக்கான நிறுவனம்" (IOR) என்ற பெயரில் வத்திக்கானின் உத்தியோகபூர்வ வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. அதன் நிலையான சொத்தின் மதிப்பு  6 கோடி யூரோக்களுக்கு மேல் தேறும். அந்த வங்கியின் நிர்வாகி  Paolo Cipriani, தாங்கள் "மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், கருப்பு பணத்தை பதுக்கி வைக்கும் நாடுகளுடன் தொடர்பு வைப்பதில்லை..." என்று கூறுகின்றார். ஆனால் உண்மை என்ன என்பது கர்த்தருக்கு மட்டுமே தெரியும். அந்த வங்கியில் முப்பத்தி ஐயாயிரம் கணக்குகள் இருப்பதாகவும், அவை யாவும் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க பங்குத் தந்தைகள் போன்றோருக்கு சொந்தமானவை என்றும் கூறுகின்றனர். 

வத்திக்கானின் வங்கியானது உலகிலேயே மிகவும் இரகசியமான வங்கி ஆகும். வத்திக்கானின் வங்கி நிர்வாகிகளில் ஒருவர், 1982 ம் ஆண்டு பாலம் ஒன்றின் கீழ் பிணமாக கண்டெடுக்கப் பட்டார். அது ஒரு கொலையா அல்லது தற்கொலையா என்ற மர்மம் இன்னும் துலங்கவில்லை. வத்திக்கான், சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுகின்றது என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. வத்திக்கான் வங்கி, கிரிமினல்களின் கறுப்புப் பணத்தை வெளுப்பதற்கு உதவுகின்றது என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்து வருகின்றது. ஏற்கனவே அந்த சந்தேகம் காரணமாக, 23 மில்லியன் யூரோ பெறுமதியான பங்குகள், நீதி அமைச்சின் உத்தரவின் பேரில் முடக்கி வைக்கப் பட்டுள்ளது. அமெரிக்க வங்கியான JP Morgan Chase,  வத்திக்கானின் கணக்கு ஒன்றை மூடி வைத்துள்ளது. போதுமான தகவல்கள் இல்லாத, சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த கணக்கு முடக்கப் பட்டது. 

மேலதிக தகவல்களுக்கு: 
1.How the Vatican built a secret property empire using Mussolini's millions
2.Bank Vaticaan opent de boeken: transparantie en rode cijfers
3.Vaticaan stak miljoenen van Mussolini in geheim vastgoedproject

***********************

வத்திக்கான் தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.வத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம் 
2.வத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி!
3.கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!
4.கொடுமைக்கார கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள்

No comments: