Thursday, March 14, 2013

புதிய போப்பாண்டவர் ஒரு போர்க்குற்றவாளி!




Habemus Papam! (அபெமுஸ் பாப்பம்! எங்களுக்கு ஒரு போப்பாண்டவர் கிடைத்து விட்டார்!)

அப்பாடா... ஒரு வழியாக போப்பாண்டவரை தெரிவு செய்து விட்டார்கள். ஆர்ஜென்தீனா நாட்டை சேர்ந்த Mario Bergoglio, புதிய போப்பாண்டவராக தெரிவானதும் முதலாம் பிரான்சிஸ் என்ற நாமத்தை சூட்டிக் கொண்டார். கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாக கொண்ட, லத்தீன் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஒருவர் தெரிவானது, இது தான் முதல் தடவை. இருந்தாலும், கடந்த கால வத்திக்கான் அரசியலை வைத்துப் பார்க்கும் பொழுது, புதிய போப்பாண்டவரின் தெரிவு உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என சந்தேகப் பட வைக்கின்றது.

புதிய போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் ஒரு போர்க்குற்றவாளியா? புதிய பாப்பரசர், அவரது தாயகமான ஆர்ஜெந்தீனாவில் பிஷப்பாக கடமையாற்றிய காலத்தில், இரண்டு அரசியல் கொலைகளில் நேரடியாக பங்கெடுத்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. 1976 - 1983 காலகட்டத்தில், ஆர்ஜென்தீனாவை ஆண்ட இராணுவ சர்வாதிகார அரசு, இடதுசாரிகளுக்கு எதிரான போர் ஒன்றில் ஈடுபட்டிருந்தது. கம்யூனிஸ்டுகளும், பிற இடதுசாரி ஆர்வலர்களும் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப் பட்டனர். பலர் இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு காணாமல்போயுள்ளனர். (விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, அட்லாண்டிக் சமுத்திரத்தினுள் தூக்கிப் போடப்பட்டனர்.)

ஹொர்கெ மாரியோ  போர்கொயியோ (Jorge Mario Bergoglio)  என்ற இயற்பெயரைக் கொண்ட, எமது புதிய போப்பாண்டவர், இராணுவ கொலைகாரர்களுடன் நெருக்கமாக உறவாடியிருக்கிறார். (Bergoglio ocultó la complicidad del Episcopado argentino con la Junta Militar del dictador Videla , http://www.publico.es/internacional/452122/bergoglio-oculto-la-complicidad-del-episcopado-argentino-con-la-junta-militar-del-dictador-videla) அவரது மேற்பார்வையின் கீழ், இரண்டு இடதுசாரி ஆர்வலர்கள் காணாமல்போயுள்ளமை உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

2007 ம் ஆண்டு, இராணுவ சர்வாதிகார ஆட்சியில் நடந்த போர்க்குற்றங்கள் சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது Cristian Federico என்ற பிஷப் கொலைக் குற்றச்சாட்டில் ஆஜர் படுத்தப் பட்டார். நமது புதிய போப்பாண்டவர், அந்த கொலைக் குற்றவாளியுடன் ஒரே இயேசு சபையில் பணியாற்றி உள்ளார். கம்யூனிசத்திற்கு எதிரான இயேசு சபையினரின் வெறுப்புணர்வு ஊரறிந்த ஒன்று. இந்த விபரங்கள், Horacio Verbistky என்ற ஆர்ஜந்தீனிய ஊடகவியலாளர் எழுதிய, "el Silencio" (2005) என்ற நூலில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. 

சில நாட்களுக்கு முன்னர் , புதிய போப்பாண்டவரின் தாயகமான ஆர்ஜென்தீனாவுக்கு அருகில் உள்ள மால்வினாஸ் (Falkland) தீவில் ஒரு தேர்தல் நடைபெற்றது. (Falklands referendum: Voters choose to remain UK territory, http://www.bbc.co.uk/news/uk-21750909) இன்னமும் பிரிட்டனுக்கு சொந்தமான காலனியான போல்க்லாந்து தீவுகளில் வாழும் அனைவரும் பிரிட்டனில் இருந்து சென்று குடியேறியோர் ஆவர். 99% மானோர், பிரிட்டனோடு சேர்ந்திருக்க விரும்புகிறோம் என்று வாக்களித்ததில், எந்த ஆச்சரியமும் கிடையாது. போல்க்லாந்து தீவுகளை, மால்வினாஸ் என்ற பெயரில் அழைத்து வரும் ஆர்ஜெந்தீனா, அந்த தீவுகள் தனக்கே சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றது. 1982 ம் ஆண்டு, பலாத்காரமாக தீவை ஆக்கிரமித்த ஆர்ஜெந்தீன படைகளுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் பெரும் யுத்தம் நடைபெற்றது. அந்தப் போரில் பிரிட்டன் வென்ற போதிலும், ஆர்ஜன்தீனாவின் உரிமை கோரல் தொடர்கின்றது. அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகளை, ஆர்ஜன்தீனாவின் இன்றைய ஜனாதிபதி கிறிஸ்டினா கிர்ஷ்ணர் நிராகரித்துள்ளார். 

போல்க்லாந்து தீவுகளில் நடந்த கேலிக்குரிய "தேர்தலுடன்" ஒப்பிடும் பொழுது, சர்வாதிகார நாடுகளில் நடக்கும் தேர்தல்கள் அதிக ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாக கூற முடியும். பிரிட்டன் அவசர அவசரமாக, அங்கு ஒரு தேர்தலை நடத்த வேண்டிய காரணம் என்ன? தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், போல்க்லாந்து தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு, எண்ணை ஆகிய இயற்கை வளங்களை 2017 ம் ஆண்டளவில் ஏற்றுமதி செய்யப் போவதாக, Borders and Southern Petroleum என்ற நிறுவனம் அறிவித்திருந்தது. (கார்டியன் பத்திரிகையில் ஜனவரி மாதம் வெளியான செய்தி, இணையத்தில் அழிக்கப் பட்டுள்ளது. செய்தியின் இணைப்பு: http://www.guardian.co.uk/uk/2013/jan/28/falkland-islands-british-oil-exploration? )

நிச்சயமாக, மால்வினாஸ் தீவுக்கு உரிமை கோரும் ஆர்ஜன்தீனா, இவற்றை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. ஏதோ ஒரு வழியில், பிரிட்டனிடம் இருந்து போல்க்லாந்து தீவுகளை பறித்து விட வேண்டும் என நினைக்கும். மீண்டும் ஒரு போர் நடக்கும் சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும், அது நடக்காது என்றும் சொல்ல முடியாது. உலகில் எல்லாவற்றிற்கும் இடையில் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறது. போல்க்லாந்து தீவுகளில் எரிபொருள் கண்டுபிடிக்கப் பட்டதும், பிரிட்டனின் காலனிய உரிமையை நிலைநாட்ட நடந்த தேர்தலும், இறுதியில் ஆர்ஜன்தீனாவை சேர்ந்த போப்பாண்டவரின் தெரிவும்.... எல்லாமே தற்செயல் நிகழ்வுகள் தானா?


ஆர்ஜென்தீனா பற்றிய முன்னைய பதிவுகள்:
ஆர்ஜெந்தீன மக்களின் அறிவிக்கப்படாத புரட்சி

 போப்பாண்டவர் பற்றிய முன்னைய பதிவுகள்:
1. வத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி!
2."பாப்பரசர் ஹமாஸ் பிரச்சாரகர்!" - இஸ்ரேல் குற்றச்சாட்டு

5 comments:

Kalaiyarasan said...

போர்க்குற்றம் என்பதை வரையறை செய்வதற்கு, அந்த நாட்டில் ஒரு யுத்தம் நடைபெற்றிருக்க வேண்டும், அல்லது ஆயுதமேந்திய குழுக்கள் மோதியிருக்க வேண்டும் என்றெல்லாம் அர்த்தம் உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. சட்டம் தெரிந்த யாராவது தெளிவு படுத்தினால் நல்லது. ஆர்ஜென்தீனாவின் இராணுவ ஆட்சியில் நடத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், நெதர்லாந்து ஊடகங்களினால் கவனமெடுத்து பிரசுரிக்கப் பட்டு வந்துள்ளன. அதற்கு காரணம், அடுத்த மாதம் நெதர்லாந்து அரசராக முடிசூட்டிக் கொள்ள இருக்கும் வில்லெம் அலெக்சாண்டரின் (பெண் கொடுத்த) மாமன் சொரெகியெத்தா, இராணுவ சர்வாதிகார ஆட்சியில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர். அவருக்கெதிராக போர்க்குற்ற வழக்கு போடுவதற்காக இங்கே நிறையப்பேர் காத்திருப்பதால், அவர் நெதர்லாந்து பக்கம் தலைகாட்டுவதில்லை. (இரகசியமாக வந்து சென்றதாக சொல்கிறார்கள்.) அடுத்த மாதம் முடிசூட்டு விழாவுக்கும் அவர் வருவாரா என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக பாராளுமன்றத்திலும் விவாதம் நடந்து வருகின்றது. மேலும், ஏற்கனவே நெதர்லாந்து நாட்டில் வசிக்கும், இன்னொரு ஆர்ஜெந்தீன போர்க்குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு போலிஸ் ஆய்வாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே, ஆர்ஜென்தீனாவிலும், ஸ்பெயினிலும், "ஆர்ஜெந்தீன போர்க்குற்ற வழக்குகள்" நடந்து வருகின்றன. அதைப் பின்பற்றி, நெதர்லாந்திலும் போர்க்குற்ற வழக்கு தொடுக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களை பிரசுரித்த செய்தித்தாள்களில் "Oorlogsmisdadiger " (போர்க்குற்றவாளி) என்று தான் எழுதப் பட்டுள்ளது. அந்த செய்தியின் இணைப்பை இங்கே தருகிறேன்.
//De Nationale Recherche is sinds het voorjaar van 2006 bezig met een vooronderzoek naar een in Nederland wonende Argentijn die er van wordt verdacht oorlogsmisdaden te hebben gepleegd gedurende het militaire bewind tussen 1976 en 1983.// http://www.vn.nl/Standaard-Media-Pagina/Onderzoek-naar-Argentijnse-oorlogsmisdadiger-ligt-stil.htm

Unknown said...

இதுவரை கருப்பினத்தவர் யாராவது போப்பாண்டவராக வந்திருக்கிறார்களா ஐயா?

Kalaiyarasan said...

//இதுவரை கருப்பினத்தவர் யாராவது போப்பாண்டவராக வந்திருக்கிறார்களா ஐயா?//

இல்லை. ஆனால், அதற்கு தகுதியான ஒருவர் இருக்கிறார். நான் முன்பு எழுதிய பதிவொன்றை பாருங்கள்.
---------------
போப்பாண்டவர் பெனெடிக் பதவியை விட்டு விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதனால், கார்டினல்கள் என்ற வத்திக்கான் அரசாங்கத்தின் மந்திரிகள் ஒன்று சேர்ந்து, புதியதொரு போப்பாண்டவரை தம் மத்தியில் இருந்து தெரிவு செய்யவுள்ளனர். வத்திகான், அகில உலக கத்தோலிக்க பேரரசாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், இது வரை காலமும் இத்தாலி நாட்டவர்கள் மட்டுமே பாப்பரசராக தெரிவு செய்யப் பட்டனர். அண்மைக் காலமாக, மரபுக்கு மாறாக, ஒரு போலந்துக்காரரும், ஜெர்மன்காரரும் தெரிவு செய்யப் பட்டனர். ஆனால், அவர்களும் வெள்ளையின ஐரோப்பியர்கள் தான். இம்முறை ஒரு கறுப்பு போப்பாண்டவர் தெரிவு செய்யப் படுவாரா? அதன் மூலம், வெள்ளையரல்லாத கத்தோலிக்க மக்களையும் வத்திக்கான் பிரதிநிதித்துவப் படுத்துவதாக காட்ட முடியும். ஏற்கனவே ஒரு கறுப்பின கார்டினல், வத்திக்கான் அரசவையில் வீற்றிருக்கின்றார். அவர் பெயர் Peter Turkson. 63 வயது. Ghana நாட்டை சேர்ந்தவர். இவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளில் இருந்து, ஒரு கடும்போக்காளர் என்று தெரிகின்றது. ஆகவே, வத்திக்கானின் மத அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஏற்ற நபர். இம் முறையாவது, வத்திக்கான் ஒரு கறுப்பின பாப்பரசரை தெரிவு செய்து, ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Unknown said...

நன்றி...

Unknown said...

நன்றி...