Tuesday, July 23, 2013

தமிழரின் தலைவிதியை தீர்மானிக்கும் 13 ம் இலக்கச் சட்டம்

இலங்கையில், வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தருணத்தில், 13 ம் திருத்தச் சட்டம் பற்றிய சர்ச்சையும் சூடு பிடித்துள்ளது. 2009, ஈழப்போர் முடிவுக்கு முன்னர், 13 ம் திருத்தத்திற்கு அதிகமாகவே உரிமைகளை தருவதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது அவரே, ஏற்கனவே உள்ள 13 ம் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால், பொதுநல அமைப்பு நாடுகளின் உச்சி மகாநாடு நடக்க இருப்பதாலும், இந்திய அழுத்தம் காரணமாகவும் அந்த எண்ணம் கைவிடப் பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 13ம் திருத்தச் சட்டம் மட்டுமல்ல, "இந்திய-இலங்கை ஒப்பந்தம்" முழுமையாக நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்று அது விரும்புகின்றது.

இதற்கிடையில், தென்னிலங்கையில் 13 ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடுமையான பிரச்சாரம் நடக்கின்றது. சட்டத்தில் மிக முக்கியமான அம்சங்களான, காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்க முடியாது என்று அரசு பிடிவாதமாக மறுத்து வருகின்றது. "இந்த நாட்டில் இரண்டு இராணுவங்கள் இருக்க முடியாது" என்று கோத்தபாய ராஜபக்ச கூறி வருகின்றார். ஏற்கனவே, புலிகளின் இராணுவம் இருந்த காலங்களை, சிங்கள மக்கள் நினைவுகூர வேண்டுமென்பதாக அந்தப் பேச்சுகள் அமைந்துள்ளன.

உண்மையில், பொலிஸ், காணி அதிகாரங்கள் அனைத்து மாகாண சபைகளுக்கும் பொதுவான சட்டமாக இருந்த போதிலும், வடக்கு, கிழக்கை தவிர்ந்த பிற மாகாண அரசுகள் அவற்றில் அக்கறை கொள்வதில்லை. குறிப்பாக, வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அவை முக்கியமான பிரச்சினைகள். அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ சமுதாயத்தை கொண்ட இலங்கையில், நில உரிமை மக்களின் வாழ்வாதாரமாக கருதப் பட வேண்டியது. இன்று நடைபெறும் இராணுவத்தினரின் நில அபகரிப்புகள், உயர் பாதுகாப்பு வலையம், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் என்பன, காணி அதிகாரம் கொண்ட மாகாண சபையின் தேவையை தமிழ் மக்களுக்கு உணர்த்தி நிற்கின்றது. மேலும் பொலிஸ் அதிகாரமானது சிவில் சமூகத்தை நடைமுறைப் படுத்துவதுடன், இராணுவத்தையும் முகாம்களுக்குள் முடங்க வைக்கும்.

இது போன்ற பல காரணங்களால், மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை வாங்கிக் கொள்வதில், தமிழ் மக்கள் உறுதியாக நிற்கின்றனர். மத்திய அரசும், அதே காரணங்களுக்காக அதிகாரப் பரவலாக்கலுக்கு மறுத்து வருகின்றது. மத்திய அரசு, மறுப்பதற்கு சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை. இனவாதம், அதிலிருந்து எழும் ஐயப்பாடுகள் மட்டுமே மூல காரணமாக இருப்பதாக தெரிகின்றது. அது எவ்வாறு அமைப்பு வடிவமாகின்றது என்பதை, இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். தமிழ் தேசியக் கூட்டணி, மகிந்த அரசுக்கு "செக்" வைப்பதாக நினைத்துக் கொண்டு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனை, வட மாகாண சபையின் முதல்வராக்க விரும்பியிருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன:

1. 2009 க்கு முன்பிருந்த தமிழ் தேசியக் கூட்டணி, புலிகளினால் உருவாக்கப் பட்டது. அவர்கள் சொல்லிக் கொடுப்பதை, இராஜதந்திர மொழியில் கூறுவதற்கு பழக்கி இருந்தனர். புலிகளின் அழிவுடன், சம்பந்தர் 180 பாகையில் திரும்பி, அதிகாரத்தை தனது கையில் எடுத்த போதிலும், ஸ்ரீலங்கா அரசு அவர்களை இன்றைக்கும் "புலிகளின் கைக்கூலிகள்" என்று கூறி வருகின்றது. உள்நாட்டில் புலிகள் இல்லாவிட்டாலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஆட்டுவிக்கிறார்கள் என்று பயமுறுத்துகின்றது. இதனால், த.தே.கூ. விக்னேஸ்வரனை தெரிவு செய்ததன் மூலம், புலி முத்திரை குத்தப் படுவதில் இருந்து தப்பிக்க நினைக்கிறது. விக்னேஸ்வரன் ஸ்ரீலங்கா அரச கட்டமைப்பில் முக்கிய பதவி வகித்தவர் என்பதால், புலிகளின் அரசியலை ஏற்றுக் கொள்ளாத ஒருவராக இருந்தார்.

2. ஈழப்போரின் முடிவில், புலிகள் அழிந்த பின்னர், அவர்களின் ஜென்மப் பகைவர்களான PLOTE தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. ஈழ அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதினமல்ல. புலிகள் காலத்தில் உருவாக்கப் பட்ட த.தே.கூட்டமைப்பில் முக்கிய தலைவராக இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்பு இந்திய இராணுவ ஆட்சிக் காலத்தில் புலி வேட்டையாடிக் கொண்டிருந்தார். சம்பந்தர் கூட்டணியில் இருந்த காலத்தில், புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர். அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. அந்த அடிப்படையில், இன்னொரு தமிழ் தேசிய இயக்கமான PLOTE, த.தே. கூட்டமைப்பில் இணைந்ததில் வியப்பில்லை. விக்னேஸ்வரனின் தெரிவானது, முன்பு த.தே. கூட்டமைப்பில் இருந்திராத PLOTE, மற்றும் சில உதிரிகளுக்கும் உவப்பான விடயம் தான்.

3. புலிகள் மற்றும் பல ஆயுதபாணி இயக்கங்கள் தமிழ் தேசிய அரசியல் களத்தில் இறங்குவதற்கு முன்னர், மேட்டுக்குடி அரசியல் கோலோச்சியது. "மெத்தப் படித்தவர்கள் அரசியலில் ஈடுபட்டால், நேர்மையாக நடந்து கொள்வார்கள், ஊழல் செய்ய மாட்டார்கள்..." என்ற மாயை, பாமர மக்கள் மத்தியில் பரவியிருந்தது. புலிகளின் ஆதிக்கம் நிலவிய காலத்தில், அதிகம் படித்திராத, தமிழ்ச்செல்வன் போன்ற சாதாரண பாட்டாளிவர்க்க புத்திஜீவிகள் முன்னுக்கு வரக் கூடிய வாய்ப்பிருந்தது. அவர்கள் சர்வதேச பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றினார்கள். வெளிப் பார்வைக்கு புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டாலும், ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரால் இதனை ஜீரணிக்க முடியாதிருந்தது. தற்போது, சம்பந்தரின் காலத்தில், மேட்டுக்குடி அரசியல் மெல்ல மெல்ல தலையெடுகின்றது. கட்சிக்கு சம்பந்தமில்லாத அறிவுஜீவிகள் வளைத்துப் போடப் படுகின்றனர். முன்பொரு தடவை சுமேந்திரன் எம்.பி. ஆனதைப் போல, தற்போது விக்னேஸ்வரன் முதல்வராக்கப் படுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் உட்கட்சி ஜனநாயகம் கிடையாது. கட்சி உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது. அவர்கள் தமக்குப் பிடித்த பிரதிநிதியை ஒரு ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்ய முடியாது. எல்லாவற்றையும் தலைமையில் உள்ளவர்களே முடிவு செய்கின்றனர். இன்றைக்கு இருக்கும் தமிழ் தேசிய தலைமை என்ற அடிப்படையில், த.தே.கூட்டமைப்பிற்கு தமது தார்மீக ஆதரவை வழங்கும் வலதுசாரித் தமிழர்கள் கூட அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படுவதில்லை. (அதே நபர்கள், ஸ்டாலின், மாவோவின் "சர்வாதிகாரம்" பற்றி எமக்குப் பாடம் எடுப்பார்கள். அறிவுஜீவிகள் அல்லவா? நாங்களும் கேட்டுக் கொள்ள வேண்டும்.) உட்கட்சி ஜனநாயகமற்ற த.தே.கூ., விக்னேஸ்வரனை நியமிப்பதில் எந்தத் தடையும் இருக்கவில்லை. சம்பந்தர், சுரேஷ், மாவை போன்ற கட்சித் தலைவர்கள் வீட்டுக்கு வந்து கேட்டதால், தாம் தேர்தலில் நிற்க ஒப்புக் கொண்டதாக, விக்னேஸ்வரனே தெரிவித்திருக்கிறார். (பார்க்க: "வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே நல்லது: விக்னேஸ்வரன்", http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/75405-2013-07-17-12-18-02.html)

 "ஒரு முன்னாள் நீதியரசர், மாகாண சபைக்கு வழங்கப் படாத அதிகாரங்கள் பற்றியும், 13ம் சட்டத் திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்தும், சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் பொழுது, அவர்கள் கேட்பார்கள்," என்று த.தே.கூ. தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றது. சர்வதேசம் எப்போதும் தமிழ் மக்களின் பிரதிநிதி யார், அவர் என்ன சொல்கிறார் என்று தான் பார்க்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல்கலைக்கழகத்தை எட்டியும் பார்த்திராத பிரபாகரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும், சர்வதேசம் மதிப்புக் கொடுத்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்வதற்கு அன்டன் பாலசிங்கம் இருந்த போதிலும், பிரபாகரன் தமிழில் சொன்னவற்றை எல்லாம், சர்வதேச சமூகம் தானாகவே மொழிபெயர்த்து அறிந்து கொண்டது. புலிகள் இயக்கத்தின் ஆயுத பலம் மட்டுமே அதற்கு காரணம் என்று கூற முடியாது. தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்த பிரக்ஞை எழுந்த காலத்தில், அந்த மக்களின் பிரதிநிதி ஒரு சிறு கிராமத்தில் நிகழ்த்திய உரை கூட சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதனை நம்ப முடியாதவர்கள், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதர கேபிள் ஆவணங்களை வாசித்துப் பார்க்கவும்.

ஆகவே, அறிவுஜீவிகளின் அரசியல் பிரவேசம், சமூகத்தில் அது குறித்த பிரமையில் உள்ள பிரிவினரை மட்டுமே கவரப் போகின்றது. ஏற்கனவே, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் விக்னேஸ்வரனின் நியமனத்தை வரவேற்க ஆரம்பித்துள்ளனர். சிங்கள மத்தியதர வர்க்கமும் அதற்கு விதி விலக்கல்ல. இந்த சமூகத்தினர் மத்தியில் தான் அது பெரும் தாக்கத்தை உண்டாக்கப் போகின்றது. ஸ்ரீலங்காவில் உள்ளது, "பூர்ஷுவா வர்க்கத்தினரின் ஜனநாயகம்" என்பதைத் தான் மேற்படி சம்பவங்கள் கோடி காட்டுகின்றன. விக்னேஸ்வரனின் நியமனத்தின் மூலம், சம்பந்தர் மகிந்த ராஜபக்சவை மேற்கொண்டு நகர முடியாத அளவுக்கு செய்து விட்டதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், ராஜபக்ச அரசுக்கு, சிங்கள இனவாதம் என்றைக்கும் கைகொடுக்கும் சர்வரோக நிவாரணி ஆகும். அதனை மகிந்த செய்யத் தேவையில்லை. மகிந்த காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிப்பதற்கு, அவரது எடுபிடிகள் காத்திருக்கிறார்கள்.

வட மாகாண சபைத் தேர்தலில், த.தே. கூட்டமைப்பு வெற்றி பெற்றால், அதையே காட்டி இனவாத பிரச்சாரம் செய்வதற்கு அரசு தயாராகி வருகின்றது. த.தே.கூ. வின் வெற்றியை பிரிவினைவாதமாகவும், இன்னும் சொல்லப் போனால், இந்திய விஸ்தரிப்புவாதமாகவும் திரித்துக் கூறும். அதற்கான சமிக்ஞைகள் இப்போதே தெரிய ஆரம்பித்துள்ளன. அரச நாளேடான டெயிலி நியூஸ் பின்வருமாறு எழுதுகின்றது: "13 ம் திருத்தச் சட்டம், அகண்ட தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான முதல் படி!" அதற்கு சொல்லப்படும் காரணங்கள் முக்கியமானவை:
1. தமிழ்நாட்டில் உள்ளவர்கள்,(ஈழத்)தமிழர்களை இலங்கையின் பிரஜைகளாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள். தமிழர்கள் என்ற இன அடையாளத்தை வலியுறுத்துகிறார்கள்.
2. அவர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள். புலிகளுக்கு நிதியும், பயிற்சியும் கொடுத்தார்கள்.
3. (ஈழத்) தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையில் தலையீடு செய்யுமாறு, இந்திய மத்திய அரசை வற்புறுத்துகிறார்கள்.
4. அவர்கள் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள, த.தே.கூ. இனை பயன்படுத்துகின்றனர்.
5. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைக் கொண்டு, ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய பிரச்சாரம் செய்கின்றார்கள்.
(3 A WAS A MARKER FOR A LARGER TAMIL NADU, http://www.dailynews.lk/?q=features/13-was-marker-larger-tamil-nadu)
இந்தக் காரணங்கள் எல்லாம், எமக்கு வேடிக்கையாக தோன்றலாம். தமிழ் தேசிய அரசியலில் அவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட சர்வ சாதாரணமான விடயங்கள். ஆனால், சிங்கள இனவாத சக்திகள் அவற்றை தமது அரசியலுக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும், சாதாரண சிங்கள மக்கள் மனதில் அச்சவுணர்வை உண்டாக்கும் வகையில் திரிபு படுத்தப் படலாம்.

மேலேயுள்ள குறிப்புகளில் இருந்து ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள தமிழ் தேசியவாத சக்திகள், ஈழத் தமிழர் நலன் சார்ந்து எடுக்கும் அரசியல் நகர்வுகள் யாவும், இலங்கையில் சிங்கள இனவாத தீயை மூட்டுவதற்கான விறகாக பயன்படுத்தப் படுகின்றன. அது ஒரு ஆங்கிலப் பத்திரிகை என்பதால், அந்தளவோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிங்களப் பத்திரிகைகளில் இன்னும் சத்தமாகக் குலைப்பார்கள். சிங்கள இராணுவ வீரர்கள், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள் போன்று எழுதுவார்கள். இராணுவத்தினர் புரிந்த படுகொலைகள் குறித்து, ஒரு சிங்களவர் மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் விமர்சித்தாலும், அவரை தேசத் துரோகி அல்லது இனத் துரோகி என்று முத்திரை குத்தி, சமூகத்தில் இருந்து ஒதுக்கி விடுவார்கள். அதற்குப் பிறகு, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கூட அவரைத் தீண்ட மாட்டார்கள்.

சிங்கள இனவாதத்திற்கு எதிராக தமிழ் இனவாதத்தை வளர்ப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. அது பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கவே பயன்படும். நாம் ஏன் வேறொரு பாதையை கண்டுபிடிக்கக் கூடாது? சர்வதேசத்திலோ, இந்தியாவிலோ, அல்லது தமிழ்நாட்டிலோ தங்கியிராத ஈழத் தமிழ் தேசியத்தை உருவாக்குவது அவசியம். சில நேரம், பெயர்கள் பிரச்சினையை கொடுக்கலாம். நாங்கள் தமிழீழம் என்று சொல்லாமல் விட்டால் கூட, தமிழ் தேசியம், சமஷ்டி, சுய நிர்ணய உரிமை போன்ற சொற்கள், சிங்கள மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி விட போதுமானதாக இருக்கின்றன. அதனால் தான், எந்த பெரும்பான்மையின (சிங்கள) கட்சியும் அந்தச் சொற்களை உச்சரிக்கவே அஞ்சுகின்றன. சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்காக, இடதுசாரிக் கட்சிகளையும் இனவாதிகள் என்று திட்டிக் கொண்டிருப்பதால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை.

இடதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், 13 ம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதே போன்று, முஸ்லிம் காங்கிரஸ், ஈபிடிபி ஆகிய அரசை ஆதரிக்கும் சிறுபான்மையினக் கட்சிகளும் 13 ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்கின்றன. அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஒவ்வொரு அதிருப்தியாளரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தமிழர் தரப்பின் கடமை. மகிந்த அரசை கவிழ்ப்பதற்காக, தமிழர்களை கொன்ற சரத் பொன்சேகாவுக்கு ஓட்டுப் போட்டதில் குற்றமில்லை என்றால், 13 ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்கும் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப்பதிலும் தவறில்லை. இன்றுள்ள நிலையில், தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை தவிர வேறு தெரிவும், தமிழ் மக்கள் முன்னால் இல்லை. அவற்றை தமிழரின் விருப்பு வாக்குகள் என்று அழைப்பதை விட, வெறுப்பு வாக்குகள் என்று சொல்வதே பொருத்தமானது. தேர்தல்களை பகிஷ்கரித்தால், தங்கள் பெயரில் கள்ள ஓட்டுக்கள் போடப்படும் என்ற பயத்திலேயே பலர் வாக்குச் சாவடிகளுக்கு செல்கின்றனர்.


இத்துடன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

No comments: