Saturday, June 07, 2014

ஜேவிபி கிளர்ச்சிக்கு வட கொரியா ஆயுத உதவி செய்திருந்ததா?


இலங்கையில் வட கொரியாவுக்கு தூதுவராலயம் கிடையாது. அதற்கு காரணம், "வட கொரியா ஜேவிபி க்கு ஆயுத தளபாட உதவி செய்திருந்தமை தான்," என்று சிறிலங்கா அரசு கூறி வருகின்றது. 12 ஏப்ரல் 1971 அன்று, கொழும்பு நகரில் இருந்த வட கொரிய தூதரகம் இழுத்து மூடப் பட்டது. வட கொரிய தூதுவர் Hwang Yung Wu, மற்றும் 17 பணியாட்களும் உடனடியாக நாடுகடத்தப் பட்டனர். தூதரகத்தில் வேலை செய்த இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப் பட்டு, சில நாட்கள் தடுத்து வைக்கப் பட்டனர். 1970 ம் ஆண்டு தான், அன்று சிறிமாவோ ஆட்சியின் கீழிருந்த இலங்கை அரசு, வட கொரியாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ஒரு வருடத்திற்குள் அந்த உறவை முறிக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது?

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யை உருவாக்கிய ரோகன விஜேவீரவின் கொள்கை, பெருமளவு (சிங்கள) தேசியவாதக் கருத்துக்களை உள்ளடக்கி இருந்தது. வட கொரியாவின் அன்றைய ஆட்சியாளர் கிம் இல் சுங் கூட, ஒரு மிகத் தீவிரமான (கொரிய) தேசியவாதி. அந்த வகையில், வட கொரிய அரசுக்கும், ஜேவிபி க்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருந்தன. கிளர்ச்சியின் முடிவில், அரச படைகளினால் கைப்பற்றப் பட்ட ஜேவிபி முகாம்களில், வட கொரிய கொள்கைப் பரப்பு நூல்கள் கண்டெடுக்கப் பட்டதாக, இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அந்தக் காலத்தில், ஒரு கிளர்ச்சியை அடக்கும் அளவிற்கு, இலங்கை அரசிடம் ஆட்பலம், ஆயுத பலம் கிடையாது. இலங்கையில் ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி நடக்கிறது என்று கேள்விப் பட்டதும், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகள், இலங்கைக்கு உதவுவதற்காக ஓடோடி வந்தன. எதிரெதிர் அணியில் இருந்த, அன்று பங்களாதேஷ் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்து கொண்டு இலங்கைக்கு உதவின. மீண்டும் ஒரு தடவை, 2009 ம் ஆண்டு, புலிகள் அழிக்கப் பட்ட ஈழப்போரின் இறுதி யுத்தத்திலும், இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து, இலங்கை அரசுக்கு உதவின. யாருமே வரலாற்றில் இருந்து பாடம் படிப்பதில்லை என்பது, இதிலிருந்து தெரிய வருகின்றது.

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தான் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பி இருந்தது. இலங்கையை சுற்றிய கடற் பகுதியில், இந்திய கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றின. அப்போது, ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த வட கொரிய ட்ரோலர் படகுகள், இந்திய கடற்படையினரிடம் அகப்பட்டன. இதனால், ஜேவிபிக்கு வட கொரியா அனுப்பிய  ஆயுத விநியோகம் வந்து சேரவில்லை. பொலிஸ் நிலையங்களை தாக்கி கைப்பற்றிய, ஆயுதங்களை வைத்துக் கொண்டு மட்டுமே, ஜேவிபி அரச படைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது.

ஜேவிபி உறுப்பினர்களை தேடி அழிப்பதற்கு, இந்தியப் படைகளும் களத்தில் நின்று உதவி செய்தன. அந்த அழித்தொழிப்பில், குறைந்தது பத்தாயிரம் இளைஞர்கள் கொல்லப் பட்டனர். (25000 என்று ஜேவிபி கூறுகின்றது.) சுமார் இருபதாயிரம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். உண்மையில், அன்றிருந்த ஆயுதமேந்திய ஜேவிபி உறுப்பினர்கள், மொத்தம் இரண்டாயிரம் தான் இருக்கும்.

71 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சி தோல்வியடைந்தமைக்கு, போதியளவு மக்கள் ஆதரவு இல்லாதிருந்தமை காரணம் என்று நம்பப் படுகின்றது. இலங்கையின் இரண்டு பெரிய ஆளும் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், தமக்குத் தெரிந்த ஜேவிபி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை காட்டிக் கொடுத்தனர். தேர்தல் காலத்தில், இந்த இரண்டு கட்சிகளும் மிகத் தீவிரமாக ஒன்றையொன்று எதிர்த்து தாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இலங்கையில் ஒரு இடதுசாரி கிளர்ச்சி நடக்கிறது என்றதும், இரண்டு எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விட்டமை இங்கே குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், அந்தக் கட்சிகளின் வர்க்க அபிமானம்.

அன்று, வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய, தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரித்தன. "அன்றைய சிறிமாவோ அரசில் அமைச்சராக இருந்த கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற இடதுசாரி அமைச்சர்கள் தமிழர்களின் முதுகில் குத்தியதாக" இன்றைக்கும் பல தமிழ்த் தேசியவாதிகள் சொல்லிக் கொண்டு திரிகின்றனர். ஆனால், 71 ம் ஆண்டு, ஒரு டிராஸ்கிஸ்ட் கட்சி உறுப்பினரான, இதே கொல்வின் ஆர்.டி. சில்வா, அரச படைகள் ஜேவிபி கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்கியதை ஆதரித்து பேசினார். 

அப்போது, தமிழ் தேசியவாதிகள், இடதுசாரிகளுடன் கூட்டிச் சேர்ந்து கொண்டு, அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த சிங்கள மக்களின் முதுகில் குத்தினார்கள். இலங்கை வரலாறு முழுவதும், இப்படித் தான், எல்லா அரசியல் சக்திகளும், ஒருவர் முதுகில் மற்றவர், மாறி மாறி குத்திக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில், முதலாளிய வர்க்க நலன்களை பேணும் சிறிலங்கா அரசு இயந்திரம், தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றது. 

இலங்கையில் ஒரு சோஷலிசத்திற்கான வர்க்கப் புரட்சி நடக்குமானால், இன்று எதிரிகளாக காட்டிக் கொள்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். பொதுவான வர்க்க குணாம்சம், அவர்களை ஓரணியில் சேர்த்து விடும். முதலில் இரண்டு சிங்கள பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்தை ஆதரிக்கும். இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்து இராணுவ உதவி வழங்கும். இது கற்பனை அல்ல. ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட வரலாறு.

மேலதிக தகவல்களுக்கு: 

No comments: