Saturday, August 16, 2014

உழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசியம் போலியானது



"பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்தினர், எம்முடன் இணங்கிப் போக முடியாத பகைவர்கள். அவர்களது செல்வமானது எமது வறுமையின் மேல் கட்டப் பட்டது. அவர்களது மகிழ்ச்சி எமது துயரங்களை அடித்தளமாகக் கொண்டது." - ஸ்டாலின்


ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுவதாக காட்டிக் கொள்ளும், "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும், அதே ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதை, பல தடவைகள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டில் வாழும் பிரஜைகள் அனுபவிக்கும் அனைத்து சுதந்திரங்களையும், ஒரு ஈழத் தமிழர்களும் அடைய விரும்புவதில் என்ன தவறு? அவர்கள் கனவு காணும் தேசத்திற்கு கம்யூனிசம், சோஷலிசம், ஜனநாயகம், நலன்புரி அரசு, அல்லது தமிழீழம் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும்.

ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் உரிமைகளை கோருகிறார்கள். சுதந்திரம் என்றால் என்னவென்று அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். சிங்கள பேரினவாதத்தில் இருந்து மட்டுமல்ல, முதலாளித்துவ அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை அடைவதும் சுதந்திரம் தான்.

ஈழத் தமிழர்களும், மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்களைப் போன்று அடிப்படை வசதி, வாய்ப்புகளை அனுபவிக்கும் உரிமை கொண்டவர்கள் இல்லையா? கல்வி, தொழில், வீடு, சுகாதார வசதிகள் ஒரு மனிதனின் அடிப்படை மனித உரிமைகள் இல்லையா?

இந்த வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கும் நடுத்தர வர்க்க தமிழர்கள், அதனை உழைக்கும் வர்க்க தமிழர்கள் அடைய விடாமல் தடுப்பது என்ன நியாயம்?
தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுப்பதற்கு இவர்கள் யார்?
          அவர்கள் தான் உழைக்கும் வர்க்கத் தமிழர்களின் வர்க்க எதிரிகள். 

தற்போது யாழ் வைத்தியசாலையில் இளம் மருத்துவராக பணியாற்றும் நண்பர் ஒருவர், என்னுடனான முகநூல் விவாதம் ஒன்றின் இறுதியில் ஒரு கேள்வி கேட்டார்: 
//நீங்கள் ஏழை உழைக்கும் வர்க்க மக்களுக்காக பாடுபடுகிறீர்கள். ஆனால், சிங்கள உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஏழை மக்கள் தான், பெரும்பாலும் தமிழர்களுக்கு எதிரான இனவெறியை காட்டுவோராக இருக்கின்றனர்.// 

ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் இனவாதிகளாக மட்டுமல்ல, மதவாதிகளாகவும், சாதிய வாதிகளாகவும் கூட இருக்கின்றனர். இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அது தான் நிலைமை. மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வெளிப்படையாக நிறவெறியை காட்டுவோர், பெரும்பாலும் வெள்ளையின ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் தான்.

சே குவேராவும் ஒரு மருத்துவர் தான். சுகபோக வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, பொலிவிய ஏழை உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, காடுகளுக்குள் மறைந்திருந்து போராடினார். மக்களின் ஆதரவின்றி, அவரது கெரில்லாப் போராட்டம் தோல்வியடைந்தது. இறுதியில், பொலிவியா படையினரிடம் அகப்பட்டு, கைதியாக வைக்கப் பட்டிருந்த சே இடம், ஒரு இராணுவ அதிகாரி கேட்டான்: 
//நீ எந்த ஏழை மக்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்டாயோ, அதே மக்கள் தான் உனக்கு எதிராகத் திரும்பினார்கள், பார்த்தாயா?// 

அதற்கு சே கூறிய பதில் : 
//அவர்கள் நீ சொன்ன பொய்களை நம்புகிறார்கள். அதனால் தான்.//

*******

கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த எமது குடும்பம், அனேகமாக தமிழர்களுக்கு விரோதமான எல்லாக் கலவரங்களையும் கண்டு அனுபவித்துள்ளது. 1977, 1983 கலவரங்களை நானே நேரில் கண்டு அனுபவித்துள்ளேன். அந்தக் காலங்களில், கொழும்பில் வாழும் தமிழர்கள் அரசுக்கு எதிரான தமது அதிருப்திகளை தெரிவித்த போதெல்லாம், தமிழீழத்தில் சென்று வாழுமாறு சிங்களவர்கள் மிரட்டல் விடுப்பார்கள்.

இதனால், 1983 கலவரம் தொடங்குவதற்கு, சில மாதங்களுக்கு முன்னரே, எமது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு, அதாவது தமிழீழத்திற்கு படிப்படியாக புலம்பெயர்ந்து கொண்டிருந்தோம். 83 படுகொலைகளுக்கு பின்னர், இனிமேல் தமிழர் யாரும் சிங்களப் பிரதேசங்களில் வாழ மாட்டார்கள் என்றும், எல்லோரும் தமிழீழம் சென்று விடுவார்கள் என்று அப்பாவித் தனமாக நம்பிக் கொண்டிருந்தோம்.

எமது நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம், ஜூலை மாதம் அகதிகளாக யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழர்களில் பெரும்பான்மையானோர், ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் கொழும்புக்கு சென்று விட்டார்கள். அப்படித் திரும்பிச் சென்றவர்கள், தமது தொழில் வாய்ப்புகளை அதற்கு காரணமாக காட்டினார்கள். ஈழப் போர் தொடங்கிய பின்னர், இன்னும் புதிதாகப் பலர், ஆயிரக் கணக்கில் கொழும்பு சென்று குடியேறி விட்டார்கள். அதில் ஒரு தொகையினர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள். நாங்கள் மட்டும் தமிழீழ தாயகப் பூமியில் நிரந்தரமாக தங்கி விட்டிருந்தோம்.

சில வருடங்களுக்குப் பின்னர், நானும் கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்து விட்டிருந்தது. அப்போது யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. கொழும்பில் கூட குண்டுவெடிப்புகள் காரணமாக, நூற்றுக் கணக்கான சிங்களவர்கள் இறந்து விட்டிருந்தனர். ஆனால், கொழும்புத் தமிழர்கள் யார் மனதிலும் மீண்டும் ஓர் இனக் கலவரம் வருமென்ற கவலை இருக்கவில்லை. காரணம் கேட்டதற்கு, அரசாங்கம் இனிமேல் அப்படி எதுவும் நடக்க விடாது என்று உறுதியாகக் கூறினார்கள்.

இன்றைக்கும் கொழும்பில் வசதியாக வாழும் நடுத்தர வர்க்கத் தமிழர்கள் பலர், மிகத் தீவிரமான தமிழ் தேசியவாதிகளாக உள்ளனர். "இனிமேலும் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழீழம் என்பது முடிந்த முடிவு." என்று வாதாடினார்கள். அப்படிக் கூறும் பலர், சிங்கள அரசிடம் கை கட்டி, வாய் பொத்தி சேவகம் செய்கிறார்கள். சிங்கள அரசு நிர்வாகத்திற்கு தமது உழைப்பை செலுத்திக் கொண்டிருகிறார்கள்.

சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியாதவர்கள், எவ்வாறு சிங்கள அரசுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை.

******


இந்த வருடமும் (2014), ஆகஸ்ட் மாதம் லண்டனில் கோலாகலமாக நடந்த, ஈலிங் அம்மன் கோயில் தேர் திருவிழாவில், பல்லாயிரக் கணக்கான தமிழ் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். லண்டன் மாநகரில் வாழும், பல்லின மக்கள் ஒன்று சேர்ந்து காஸா இனப்படுகொலைக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இந்த சாமி ஊர்வலமும் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

லண்டன் தேர்த் திருவிழாக்களில், ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான தமிழ்ப் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நடந்த காலத்திலும் இந்த திருவிழாக்கள் நிறுத்தப் படவில்லை. லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும், "தமிழ் தேசிய" தொலைக்காட்சியான GTV, ஒவ்வொரு வருடமும் நேரடி ஒளிபரப்புச் செய்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் கூட, GTV யில் லண்டனில் நடக்கும் கோயில் திருவிழாக்களுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.

எந்தவொரு "மாற்றுக்" கருத்தாளரும், போலித் தமிழ் இன உணர்வாளரும், கோயில் திருவிழா கொண்டாடும் பக்தர்களின் சமூக அக்கறையின்மை குறித்து கேள்வி எழுப்ப மாட்டார். அம்மனின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற பயம் போலும்.

ஊர், உலகத்தில், எவன் செத்தாலும் நாங்கள் அழ மாட்டோம். ஆனால், எங்கள் வீட்டில் நடக்கும் மரணத்திற்கு மட்டும் உலகம் முழுவதும் அழ வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

1 comment:

Unknown said...

தமிழீழம் கிடையாது.,
இனப் படுகொலை தொடரும்.,
வாழ விட மாட்டோம்.,
ஆனால், அமைதிக்கான விருதுகளை வாங்குவோம்.,

ஊடகங்களின் அரைகுறை செய்திகளில், தமிழீழ போராட்டக்கார்களைத் தீவிரவாதிகளாகவும், அரசாங்கம், அமைதிக்காக்கும் பொருட்டு போர் புரிவதாகவும் பாவித்திருக்கிறார்கள்.

என்னதான் இந்த சிங்கள அரசின் நிலைப்பாடு? தமிழர்களை விரட்டி அடித்தால் நிம்மதி அடைவார்களா? அவர்களின் வாதம்தான் என்ன?
என்னதான் எதிர்பார்கிறார்கள்?