Saturday, October 04, 2014

3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்கோ மக்கள் எழுச்சி

3 அக்டோபர் 1993, இந்தத் தினத்தில் என்ன நடந்தது என்ற தகவலை, உங்களுக்கு எந்த ஊடகமும் சொல்லப் போவதில்லை. "சோவியத் யூனியன் "வீழ்ந்து" விட்டது. ரஷ்ய மக்களே கம்யூனிசத்தை வெறுத்து, முதலாளித்துவத்தை தேர்ந்தெடுத்தார்கள்..." என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் சதிகாரக் கும்பல், உண்மை பேசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியுமா?

உண்மையில், சோவியத் யூனியன் "விழவில்லை" அல்லது "உடைந்து நொறுங்கவில்லை." எல்சின் எனும் அமெரிக்க கைக்கூலியின் சதித் திட்டத்தினால் கலைக்கப் பட்டது. அதைப் பற்றி அங்கிருந்த மக்களுக்கு எதுவுமே தெரியாது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், எல்சினின் சர்வாதிகாரத்திற்கு எதிராக, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக, மொஸ்கோ நகரில் மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது.

மீண்டும் சோவியத் யூனியன் வேண்டுமென்றும், சோஷலிசம் தேவை என்றும் போராடினார்கள். ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இறுதியில், எல்சினின் கூலிப் படைகள், ஆயிரக் கணக்கானோரை படுகொலை செய்து, மக்கள் எழுச்சியை நசுக்கின. ரஷ்யாவில் நடந்த ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக, ஜனநாயகக் காவலர்களான மேற்கத்திய நாடுகள் முணுமுணுக்கக் கூட இல்லை.

  "சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், கம்யூனிசம் செத்து விட்டது. முன்னாள் கம்யூனிச நாடுகளில் வாழ்ந்த மக்கள், முதலாளித்துவத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்..." என்று அரைவேக்காட்டுத்தனமாக உளறிக் கொண்டிருக்கும் பலர் இன்றைக்கும் உள்ளனர். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மேற்குலக ஊடகங்கள் செய்யும் பிரச்சாரங்களை, உண்மை என்று நம்பும் தற்குறிகள் அப்படித் தான் பிதற்றிக் கொண்டிருப்பார்கள்.


26 டிசம்பர் 1991 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் கலைக்கப் பட்டது. அதற்கு முன்னர், கிரெம்ளினில் கோர்பசேவுக்கு எதிரான கடும்போக்காளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி எடுத்திருந்தனர். அந்த சதி முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் சதிப்புரட்சி முறியடிக்கப் பட்ட பின்னர், மேற்கத்திய ஆதரவு லிபரல் தலைவர்களின் சதிப்புரட்சி மிகவும் கவனமாக முன்னெடுக்கப் பட்டது.

"ரஷ்யாவும், உக்ரைனும் சேர்ந்திருந்தால் அது ஐரோப்பிய - ஆசிய கண்டங்களில் மிகவும் பலமான வல்லரசாக இருக்கும்..." என்று, அமெரிக்க வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர் பிரெசென்ஸ்கி ஒரு தடவை தெரிவித்திருந்தார். அதனால், முதலில் உக்ரைனை பிரிக்கும் சதித்திட்டம் திரைமறைவில் அரங்கேறியது. உக்ரைனில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டது. 1 டிசம்பர் 1991, உக்ரைன் தனி நாடாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.

உக்ரைன் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளை துரிதப் படுத்தியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம், வெள்ளை ரஷ்யாவின் Brest நகருக்கு அருகில் உள்ள காட்டுப் பங்களா ஒன்றில், மூன்று சோவியத் குடியரசுத் தலைவர்களின் இரகசிய சந்திப்பு இடம்பெற்றது. ரஷ்ய பிரதமர் எல்சின், உக்ரைனிய பிரதமர் கிராவ்ஷுக், வெள்ளை ரஷ்யா பிரதமர் ஸ்டானிஸ்லாவ் சுஸ்கேவிச் ஆகியோர் கலந்துரையாடிய பின்னர் அந்த முடிவு எடுக்கப் பட்டது. கவனிக்கவும்: சோவியத் யூனியனை "வீழ்த்த" வேண்டுமென்று, சோவியத் மக்கள் நினைக்கவில்லை. மூன்று தலைவர்களின் இரகசியமான சதித் திட்டம் அது.


எல்சின் தனது சதித் திட்டத்தை நிறைவேற்றிய உடனேயே, தனது அமெரிக்க எஜமான் ஜோர்ஜ் புஷ்ஷிடம், அந்த முடிவை அறிவித்தார். மேற்கத்திய ஊடகங்களில் தகவல் வெளியான பின்னர் தான், சோவியத் யூனியன் கலைக்கப் பட்ட விடயம், அங்கு வாழ்ந்த மக்களுக்கு தெரிய வந்தது.


ரஷ்யாவின் அதிகாரத்தை எல்சின் கைப்பற்றியிருந்த போதிலும், ரஷ்ய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் அதிகமாக இருந்தனர். அவர்கள் ஜனநாயக வழியில், எல்சினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். கிளர்ச்சியில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, வெளியில் மக்கள் ஆதரவும் இருந்தது. மக்கள் எழுச்சி ஒன்றின் மூலம், மீண்டும் சோவியத் யூனியனை கட்டமைப்பதும், சோஷலிசத்தை மீட்பதும் அவர்களின் தொலை தூர இலக்காக இருந்தது.


 3 அக்டோபர் 1993, மொஸ்கோ நகரில் ஒரு மக்கள் எழுச்சி ஏற்பட்டது. பலர் செங்கொடிகள், சோவியத் கொடிகள் ஏந்திய வண்ணம், வீதிகளில் இறங்கினார்கள். மொஸ்கோவாசிகள் நகர மத்தியில் தடையரண்கள்  போட்டு, பாதுகாப்பு வலையங்களை  உருவாக்கினார்கள். அவர்களுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள், ரஷ்யப் பாராளுமன்றத்தினுள்  உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.


கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாராளுமன்றத்தை சுற்றிவளைத்த எல்சினின் கூலிப்படைகள், மின்சாரத்தையும், தண்ணீரையும் துண்டித்தன. முற்றுகைக்குள், பல இன்னல்களுக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், எல்சினின் உத்தரவின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தின் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

அன்றைய தாக்குதலில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் மூடி மறைக்கப் பட்டன. நூற்றுக் கணக்கான உயிரிழப்புகள் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டதாக, ரஷ்ய மக்கள் பேசிக் கொண்டனர். உலகம் முழுவதும் ஜனநாயக பஜனை பாடும் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், ரஷ்ய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கவில்லை.

நடுநிலை தவறாத மேற்கத்திய ஊடகங்களும், அந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதை ஒரு ஜனநாயகப் படுகொலையாக சித்தரித்து, உலக மக்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பவில்லை. அதே  நேரம், அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகில் யாராவது பட்டாசு கொளுத்திப் போட்டிருந்தால், இதே ஊடகங்கள் பயங்கரவாதம் என்று அலறித் துடித்திருக்கும். உலக நாடுகள் எல்லாம் கண்டனம் தெரிவித்திருக்கும்.

3 அக்டோபர் 1993 மக்கள் எழுச்சியை நினைவு கூரும் படங்களையும், வீடியோவையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:


1993 October uprising in Moscow. 






No comments: