Wednesday, October 08, 2014

பிரான்ஸ் : உலகின் முதலாவது பேரினவாத அரசு தோன்றிய நாடு

இந்தப் படத்தில் இருப்பது ISIS போன்றதொரு இஸ்லாமிய தீவிரவாதக் குழு அல்ல. "நாகரிகத்தில் சிறந்த" பிரெஞ்சுப் படையினர். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான அல்ஜீரியாவில் நடந்த போரின் பொழுது, எதிராளிகளின் தலைகளை வெட்டி மகிழும் காட்சி. பிரான்சில் இதற்குப் பெயர்: "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்."


ஒரு மேற்குலக, முதலாளிய விசுவாசியின் கேள்வி: 

//விவாதிப்பது எனது நோக்கமல்ல... மார்க்சியம் தெரியாதவனுமில்லை... என் வாழ்நாளில் நான் பொய்யனாக வாழ்ந்த காலம், புரட்சி பேசி திரிந்த காலமே. மேற்குலக நாடுகளைப் போல், அதிலும் பிரான்சை போல், "சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம்" என அரசியல் சாசனத்துடன் கூடிய ஒருநாட்டை ஒப்பீட்டு அடிப்படையில் (பிரான்சில் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இருக்கிறது) ஏன் மற்ற நாடுகளில் இல்லையா? இவற்றை விட, தலைசிறந்த முன்னுதாரணமான முதலாளித்துவ கொள்கை இல்லாத ஒரு நாடடின் பேர் உங்களால் தர முடியுமா? மனச்சாட்சியுடன் பதிலளியுங்கள்.// 

விவாதிப்பதற்கு முன்னர், ஒரு விடயத்தை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? "மார்க்சியம் தெரியாதவனல்ல..." என்று கூறும் ஒருவர், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகத் தான், மார்க்சியத்தின் தேவை உருவானது என்ற உண்மையை உணராதது ஏனோ? 

உலக வரலாற்றுப் பாதையில் பிரெஞ்சுப் புரட்சி முற்போக்கான பாத்திரம் வகித்துள்ளது என்று மார்க்சியம் கூறுவது தெரியாமல் போனது எப்படி? நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், லிபரல்வாதிகளும், முதலாளிகளும் அதிகாரத்தை கைப்பற்றினர்.

நீங்கள் கூறும் "சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்" என்பது லிபரல்வாதிகளின் அரசியல் கோட்பாடு. இன்று உலகில் உள்ள பெரும்பான்மையான அரசுகள், லிபரல் கொள்கை அடிப்படையில் தான் ஆட்சி அமைத்துள்ளன. இலங்கை, இந்தியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், பிரான்சில் தோன்றிய அதே லிபரல் கொள்கை தான் பின்பற்றப் பட்டு வருகின்றது. 

ஆனால், "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்று முழங்கிய அதே லிபரல் பிரெஞ்சு அரசு, கரீபியன் தீவுகளில் கிளர்ச்சி செய்த கருப்பின அடிமைகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுத்தது! கருப்பின அடிமைகளை சகோதரர்களாக அங்கீகரிக்கவில்லை. அவர்களை சமத்துவமாக நடத்தவில்லை. பிரான்சில், பிரெஞ்சு மொழியின் பேரினவாதம் நிலைநாட்டப் பட்ட வரலாறு தெரியாதா? உலகின் முதலாவது பேரினவாத அரசு பிரான்சில் தான் உருவானது. 

பிரான்சில் உள்ள சிறுபான்மை இனங்களான பாஸ்க், ஒக்கிட்டான், பிறேய்ட்டன், கொர்சிக்கன், பிளாம்ஸ்(டச்சு), அல்சாசியன் (ஜெர்மன்) மொழிகளை பேசிய சிறுபான்மை இனங்கள் அடக்கப்பட்ட வரலாறு தெரியாதா? பிரான்சில் வாழ்ந்த சிறுபான்மை இன மக்கள், தமது தாய்மொழியை பேசும் உரிமை இருக்கவில்லை. வீடுகளில், பொது இடங்களில் தாய்மொழி பேசினால் கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள். அவர்கள் மேல் பிரெஞ்சு மொழி பலவந்தமாக திணிக்கப் பட்டது. அதை எல்லாம் மறந்து விட்டீர்களா? 

தமிழர்களின் உரிமைகளை நசுக்கும் சிங்களப் பேரினவாத அரசும், பிரான்சின் வழியை பின்பற்றி வருகின்றது. அப்படியானால், சிங்களப் பேரினவாத அரசு உங்கள் கண்களுக்கு "சிறந்த முன்னுதாரணமாக" தெரிகின்றதா? 

"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" பேசிய பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள், எதற்காக அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்தார்கள்? அல்ஜீரியாவில் பிரெஞ்சுப் படைகள் புரிந்த இனப்படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் உங்களுக்கு "தலைசிறந்த முன்னுராதணமாக" தெரிகின்றதா? முன்னாள் காலனிகளான வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில், பிரெஞ்சுக்காரர்கள் நடத்திய பயங்கரவாத ஆட்சி காரணமாகத் தானே, அங்கே விடுதலைப் போராட்டங்கள் நடந்தன? 

அது தான் போகட்டும். பதினெட்டாம் நூற்றாண்டுப் பிரான்சில், "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற கொள்கையின் கீழ் புரட்சி நடந்தது. அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது? கொடூரமான பயங்கரவாத ஆட்சி நடந்தது. ரொபெஸ்பியர் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மைக்கு பலர் பலியானார்கள். ஒரே கொள்கையை பின்பற்றியவர்கள் கூட ஒழித்துக் கட்டப் பட்டார்கள். 

நீங்கள் அந்தக் கால பிரான்சில் வாழ்ந்திருந்தால், பொதுத் தேர்தல், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் பற்றி மூச்சுக் கூட விட்டிருக்க முடியாது. அடுத்த கணமே தலையை வெட்டி விடுவார்கள். ஈராக், சிரியாவில், ISIS தலை வெட்டும் வீடியோ பார்த்தீர்கள் தானே? அதே தான் அன்றைய பிரான்சில் நடந்தது. "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" பேசிய பிரான்சில், ஆயிரக் கணக்கான அப்பாவிகளின் தலைகள் வெட்டப் பட்டன. இது தான் நீங்கள் காட்டும் "சிறந்த முன்னுதாரணம்!"

முதலாளித்துவ ஜனநாயகத்தை, சோஷலிச ஜனநாயகத்துடன் ஒப்பிட முடியாது. முதலாளித்துவ நாடுகளில் முதலாளிகளின் சர்வாதிகாரம் இருக்கும். ஒரு சோச‌லிச புரட்சியின் பின்னர் அது ஒழிக்கப் படும். அங்கே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்படும். அது பின்னர் உழைக்கும் மக்களின் ஜன நாயகத்தை கொண்டு வரும்.

1 comment:

Anand Kumar said...

சுதந்திரம்,சமத்துவம்,சகோரத்துவம் என்ற கோஷம் அமைதி,வளம்,வளர்ச்சி என்ற தமிழ்நாட்டின் தற்போதைய கோஷத்தை நினைவூட்டுகிறது.