Monday, January 26, 2015

பாரிஸ் சேரிகளில் வாழும் தமிழர்களும், பிரான்ஸின் இனப் பிரச்சினையும்


பிரான்ஸ் நாட்டில், சேரிகள் இல்லையென்று அங்கு வாழும் தமிழ் பேசும் அரச அடிவருடிகள் கூறுகின்றனர். ஆனால், உண்மை நிலையோ வேறு. பாரிஸ் நகரில் வாழும், பெரும்பான்மையான தமிழர்கள் அடித்தட்டு பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.
பிரெஞ்சு மொழியில் "banlieue" என்று அழைக்கப் படும், நகருக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கிருந்து, தினசரி 30- 50 கி.மி. தூரம் பிரயாணம் செய்து, வேலை செய்து விட்டு வருவோரும் உண்டு.

தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தினர், பிரெஞ்சு வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலைகளைத் தான் செய்கின்றனர். பெரும்பாலானோர் துப்பரவுப் பணியாளர்களாக, அல்லது உணவகங்களில் வேலை செய்கின்றனர். அவர்களின் சக பணியாளர்களும், பிற நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் தான்.

குறிப்பாக, அல்ஜீரியா, மொரோக்கோ, மாலி, செனகல் போன்ற முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் இருந்து வந்தவர்கள். பிரான்சில் இவர்களைத் தான், பொதுவாக "முஸ்லிம்கள்" என்று அழைக்கிறார்கள். தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். காலனிய தொடர்பு காரணமாக, பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருப்பதால், வேலை வாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதாக, சில தமிழர்கள் சொல்லிக் குறைப் படுவதுண்டு.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், தமிழர்களும், பிரெஞ்சு பேசத் தெரிந்த "முஸ்லிம்களும்", ஒரே இடத்தில் வேலை செய்வது மட்டுமல்ல, ஒரே இடத்தில் தான் வசிக்கிறார்கள். மிக உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தாலும், பலரால் வாடகையை செலுத்த முடிவதில்லை. வேலை செய்யும் இடங்களில், பிரெஞ்சு முதலாளிகள் அனைவரையும் ஒன்றாகத் தான் சுரண்டுகின்றனர்.

தொழிலாளர்களை சுரண்டுவதில், வெளிநாட்டு முதலாளிகளும் சளைத்தவர்கள் அல்ல.   தமிழ் முதலாளிகள் தங்களது சொந்த இனத்தை சேர்ந்த தொழிலாளர்களையே சுரண்டிக் கொழுக்கின்றனர். மிகக் குறைந்த கூலி கொடுப்பது மாத்திரமல்ல, தினசரி 12 மணிநேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாளிகளும் உண்டு. 

பாரிஸ் தமிழர்கள் அல்ஜீரியர்களுக்கு வைத்துள்ள பட்டப் பெயர்: "அடையார்"! அதன் அர்த்தம், அல்ஜீரியர்களின் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும் என்பதாலாம். எந்த நேரமும் திறந்திருக்கும் அல்ஜீரிய முதலாளிகளின் கடைகளில், தினசரி 16 மணித்தியாலம் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப் படும் தொழிலாளர்களும் அல்ஜீரியர்கள் அல்லது முஸ்லிம்கள் தான்.

பாரிஸ் நகரில் வாழும் தமிழர்களுக்கு காலமெல்லாம் பொருளாதார நெருக்கடி தான். தனியொரு உழைப்பாளி தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்திற்கு ஏற்றவாறு வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கிறார். பாரிஸ் நகரில் வீட்டுப் பற்றாக்குறை, வாடகைப் பிரச்சினை பற்றி, அங்கு வாழும் தமிழர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். பல தமிழ்க் குடும்பங்கள் பிரமச்சாரி இளைஞர்களுக்கு அறைகளை வாடைக்கு விடுவதும், பின்னர் அதனாலேயே குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவதும் வழமையானவை.

பாரிஸ் நகரை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் தான், இன்று சேரிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. கிளிஷி சூ புவா (Clichy sous Bois) பிரான்சின் பிரபலமான banlieue சேரிப் பகுதி. அங்கே தான், அண்மைய பாரிஸ் தாக்குதலில் யூத கோஷர் மார்க்கெட்டில் நான்கு பேரை கொன்ற "பயங்கரவாதி" Amedy Coulibaly வாழ்ந்து வந்தான். அவன் முன்பு ஒரு சாதாரண கிரிமினல். அவனைப் போன்ற பல கிரிமினல்கள், ஜிகாதி தீவிரவாத அரசியலுக்குள் நுளைந்து பெருமை தேடிக் கொள்கின்றனர்.

Clichy sous Bois, பாதுகாப்பற்ற, வெளியார் நுளைய முடியாத பிரதேசம் என்று, அமெரிக்க Fox சேனல் அறிவித்திருந்தது. உண்மையில், அந்தளவு மோசமான நிலைமை இல்லையென்றாலும், வசதி இருப்பவர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை. பிரெஞ்சு வெள்ளையர்கள் மட்டும் அந்தப் பிரதேசத்தில் வாழ்வதை தவிர்க்கவில்லை. அதிகம் சம்பாதிக்கும், வசதியான வெளிநாட்டு குடியேறிகள், முஸ்லிம்கள், தமிழர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை.

கைவிடப் பட்ட கட்டிடங்கள், பராமரிக்கப் படாத சுற்றுச் சூழல், பெருகி வரும் குற்றச் செயல்கள், போதைவஸ்து பாவனை என்பன, அந்த இடத்தை வசிக்க முடியாத ஆபத்தான பிரதேசம் ஆக்கியுள்ளன. நகர மத்தியில், பட்டப் பகலில் போதை வஸ்து விற்பனையாளர்கள் தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இரவில் அவர்களே திருட்டுக்களிலும் ஈடுபடுவார்கள்.

Clichy sous Bois, பாரிசுக்கு வெளியே உள்ள தனியான நகரசபைக்கு சொந்தமான பகுதி. அங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் "முஸ்லிம்கள்" தான். அதாவது, அல்ஜீரியர் மற்றும் ஆப்பிரிக்கர்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் "முஸ்லிம்கள்" தான். ஆனால், அந்தக் கிரிமினல்களினால் அதிகமாகப் பாதிக்கப் படுவோரும் "முஸ்லிம்கள்" தான் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. 

பத்து வருடங்களுக்கு முன்னர், இதே Clichy sous Bois புறநகர்ப் பகுதி, உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. அங்கே நடந்த கலவரம் தான் அதற்கு காரணம். "பணக்காரர்களின் சொத்துக்களான" கார்களை, இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் எரித்து நாசமாக்கினார்கள். அப்போது நடந்த கலவரத்தில், சில வசதியான "முஸ்லிம்களின்" கார்களும் எரிக்கப் பட்டன.

பாரிஸ் கலவரம் தொடர்பாக, நான் முன்பு பிரான்சில் இருந்து வெளியான உயிர்நிழல் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி: 
//"இனி இது பாரிஸ் அல்ல. பாக்தாத்!" என்ற கோஷம் 2005ம் ஆண்டு ஒக்டோபர் 27 அன்று பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான கிளிஷி சூ புவாவின் தெருக்களில் கேட்டது. தெருக்களின் அந்தப் பக்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், குண்டாந்தடிகள் சகிதம் பாரிஸ் நகரப் பொலிஸ். இந்தப் பக்கம் பெட்ரோல் குண்டுகளுடன் 18 வயதையும் தாண்டாத இளைஞர்கள் கூட்டம். அமைதியான தெருக்கள் போர்க்களமாகின. தன்னிச்சையாக திரிந்த இளைஞர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர். பாடசாலைகள், தபால் அலுவலகங்கள், கடைகள் எதுவும் தப்பவில்லை. அனைத்தும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புப் படையினருக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்தக் கலவரம் ஒரு நாளோடு அடங்கி விடவில்லை. அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் தொடர்ந்தது. கலவரத்தீ பாரிஸின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தொடர்ந்து பிரான்சின் பல நகரங்கள் ஒரே மாதிரியான தீவைப்புக் காட்சிகளை கண்டன .// (Uyirnizhal, January - March 2006)

வீடுடைத்து திருடுபவன், பாரிஸ் நகரில் பணக்காரர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அதைச் செய்வதில்லை. ஏழைகள் வசிக்கும் புறநகர்ப் பகுதியில், வசதியானவர்களின் வீடுகளைத் தான் உடைப்பார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களும் அப்படித் தான். இதனால் பாட்டாளிவர்க்க தமிழர்களும் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால், அவர்கள் இதனை உலகம் முழுவதும் உள்ள சேரிகளின் சமூகப் பிரச்சினையாக பார்க்காமல், குறிப்பிட்ட இனத்தை குற்றவாளிப் பரம்பரை ஆக்கும் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர்.

பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் பதற்றம் நிலவியது. பாடசாலைகள் எல்லாவற்றையும் அரசாங்கமே நிர்வகிப்பதால், சார்லி எப்டோ தாக்குதலில் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. குறைந்தது, 200 பாடசாலைகளில் மௌன அஞ்சலி மாணவர்களினால் இடையூறு செய்யப் பட்டது. ஏன் சிரியாவில் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சார்லி எப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை யாரும் நியாயப் படுத்தவில்லை. "அந்தப் பத்திரிகை முஸ்லிம்களை அவமதித்து இருந்த போதிலும், மதத்தின் பெயரில் கொல்வது தவறு. கொலை செய்யப் படுமளவிற்கு கேலிச் சித்திரம் வரைந்தவர்கள் அந்தளவு பெரிய குற்றத்தை செய்யவில்லை." என்று கூறுகின்றனர். மேலும், இதனை "யூதர்களின் சதி" என்று கூறுகின்றனர். பிரான்சில் முஸ்லிம்களை ஒடுக்குவது யூத ஆளும் வர்க்கம் என்றும், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலந்த் ஒரு யூதர் என்றும் இளைய தலைமுறையினர் பலர் நம்புகிறார்கள்.

இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டுமானால், இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கொழும்பில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப் பட்ட சிங்களவர்களுக்காக, யாழ்ப்பாண பாடசாலைகளில் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று, சிறிலங்கா அரசு உத்தரவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது தமிழ் மாணவர்கள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பார்கள்? பிரான்சில் இருப்பதும் இனப் பிரச்சினை தான். பலர் தவறாக நினைப்பதைப் போல, மதப் பிரச்சினை அல்ல.

கிளிஷி சூ புவா, முன்னொரு காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்த அமைதிப் பூங்காவாக இருந்தது. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து குடியேறியோர் வசதியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிட்ரோன் கார் தொழிற்சாலை பலருக்கு வேலை கொடுத்தது. அதனால், உழைக்கும் வர்க்க மக்களின் விருப்பத்திற்குரிய குடியிருப்பாக அது மாறியிருந்தது. பல புதிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுந்தன. லிப்ட், வெப்பமூட்டும் வசதிகளுடன் கட்டப் பட்டன.

எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் நிலைமைகள் மாறத் தொடங்கின. சிட்ரோன் கார் தொழிற்சாலை மூடப் பட்டது. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்த படியால், வறுமையும் அதிகரித்தது. இன்று வரையில், அங்குள்ள நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை. கிளிஷி சூ புவாவில் வாழும் மொத்த சனத்தொகையில் 20% வேலையில்லாதவர்கள். இளைய தலைமுறையினர் மத்தியில், இன்னும் அதிகம்.

வட ஆபிரிக்க குடியேறிகளில் பெரும்பான்மையானோர், பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள். அதாவது மத நம்பிக்கையை விட, பொருள் சேர்ப்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆயினும், கடந்த இருபது வருட கால பொருளாதார நெருக்கடி காரணமாக, பலர் மதத்திற்குள் தஞ்சம் புகுகின்றனர். அது இந்தியா, இலங்கையில் வாழும் மத நம்பிக்கை கொண்ட மக்களின் நிலைமையை விட வித்தியாசமானது அல்ல. தமது பொருளாதார பிரச்சினைகளுக்கு மதம் தீர்வைத் தரும் என்று, உலகம் முழுவதும் உள்ள ஏழைகள் நம்புகிறார்கள்.

நான் "பிரான்சைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை புனைகிறேன்" என்று சிலர் என் மேல் குற்றஞ்சாட்டலாம். "நான் எழுதுவதெல்லாம் பொய்" என்று, பிரெஞ்சு அரசை ஆதரிக்கும் தமிழ் அடிவருடிகள் சீறிப் பாயலாம். ஆனால், பிரான்ஸ் பிரதமர் Valls கூட, பிரான்சில் அப்பார்ட்ஹைட் (Apartheid) எனும் இனப் பாகுபாடு நிலவுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். (Apartheid : Valls taille Sarkozy http://www.liberation.fr/politiques/2015/01/22/apartheid-valls-taille-sarkozy_1186459 ) அதாவது, பிரான்ஸ் நாட்டில், இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது.

பெரும்பான்மையான பிரெஞ்சு வெள்ளையர்கள் வசதி, வாய்ப்புகளை அதிகமாக கொண்டவர்களாக உள்ளனர். அதற்கு மாறாக, பெரும்பான்மையான "முஸ்லிம்கள்" (வட ஆப்பிரிக்கர்கள்) வருமானம் குறைந்த ஏழைகளாக இருக்கின்றனர். அதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. ஒரு தடவை, பாரிஸ் நகரில் இருந்து கிளிஷி சூ புவாவுக்கு பயணம் செய்து பாருங்கள். ஒரு மணிநேரத்திற்குள், முதலாம் உலகில் இருந்து, மூன்றாம் உலகிற்கு சென்று விட்டதாக உணர்வீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு: 

2005 பாரிஸ் கலவரம் தொடர்பாக, உயிர்நிழல் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

1 comment:

Online Jobs for Tamil People said...

முதலீடு இல்லாமல் Onlineல் தினமும் 100ரூபாய் உறுதியாக சம்பாரிக்க மூடியும்! மேலும் விவரங்களுக்கு - http://www.bestaffiliatejobs.blogspot.in/2015/01/paidverts-earning-opportunities-in-tamil.html