Wednesday, January 07, 2015

தேர்தல்கள் : தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒன்று பேய், மற்றது பிசாசு. தமிழ் வாக்காளர்கள், இந்த இரண்டில் ஒன்றுக்கு மட்டும் தான் ஒட்டுப் போடுவார்கள் என்றால், அது அவர்களது அரசியல் பாமரத்தனத்தையும் காட்டுகின்றது.

இந்தத் தேர்தல்களினால் எந்த மாற்றமும் வந்து விடாது. அவை எல்லாம், மக்களை ஏமாற்றுவதற்கான நாடகங்கள். தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம் மக்களும் அந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் அர்த்தம் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதல்ல.

மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்ட, உண்மையான மாற்றத்தை கொண்டு வரக் கூடிய ஒருவரை ஆதரிக்க வேண்டும். அது பேய், பிசாசு இரண்டில் ஒன்றல்ல. மூன்றாவதாக ஒரு அரசியல் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும். இங்கே முக்கியமானது, அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதல்ல. மக்களுக்கு என்ன செய்வார் என்பது தான் முக்கியம்.

எத்தனை தேர்தல் வந்தாலும், நாங்கள் பேய், பிசாசுகளை தான் தேர்ந்தெடுப்போம் என்பது விவேகமானது அல்ல. வெனிசுவேலாவில் சாவேஸ், பொலிவியாவில் ஏவோ மொராலேஸ்... இவர்கள் எல்லாம் எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்? அதற்கு முன்னர், அந்த நாடுகளிலும் பல தசாப்த காலமாக, பேய், பிசாசுகள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட்டு வந்தன.

வெனிசுவேலா, பொலிவியா மக்களுக்கு இருக்கும் அரசியல் விழிப்புணர்வில், ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இலங்கையில் இல்லை. சிங்களவர்கள், தமிழர்கள் மட்டுமல்ல, "யூதர்களுக்கு அடுத்த புத்திசாலிகளான" தமிழர்களிடமே இல்லை. அதற்காக நாங்கள் வெட்கப்பட வேண்டும். இப்படியே போய்க் கொண்டிருந்தால், இன்னும் நூறாண்டுகள் போனாலும் இலங்கையில் எந்த மாற்றமும் வராது.

இலங்கையில் அமையப் போகும் மைத்திரி அரசாங்கத்தில், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு "அடக்கமாக" தெரிவித்துள்ளது. ஆனால், "அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் அங்கம் வகிப்பார்கள்" என்று த.தே.கூ. சார்பாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடைசியில், தாங்களும் "இணக்க அரசியல்" செய்பவர்கள் தான் என்ற உண்மையை பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார்.

எதிர்ப்பு அரசியல் என்பது, ஆளும் கட்சிக்கு எதிராகப் பேசும் எதிர்க்கட்சி அரசியல் அல்ல. அது நடைமுறையில் உள்ள அரசு கட்டமைப்பை மாற்றும் புரட்சிகர அரசியல். முதலாளிய ஆதரவு வலதுசாரிகளான போலித் தமிழ் தேசியவாதிகளுக்கும், எதிர்ப்பு அரசியலுக்கும் வெகு தூரம்.

கடந்த முப்பது வருடங்களாக, ஈழப்போர் நடந்த காலங்களிலும், இலங்கையில் பொதுத் தேர்தல்கள் நடந்தன. அப்போதும் "தமிழீழ மக்கள்", சிங்கள தேசம் நடத்தும் தேர்தல்களில் ஓட்டுப் போட்டு "ஆட்சி மாற்றத்தை" கொண்டு வர நினைத்தார்கள்.

போருக்கு நடுவில் மக்களுக்கு "மூச்சு விட அவகாசம்" கொடுக்க வேண்டும் என்பதை புலிகளும் உணர்ந்து கொண்டு, தேர்தல் நடக்கும் காலங்களில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சம்மதிப்பார்கள். தெற்கில் நடக்கும் "ஆட்சி மாற்றத்தால்", புதிதாக பொறுப்பேற்கும் கட்சி அல்லது ஜனாதிபதி தமக்கு ஒரு தீர்வைக் கொண்டு வருவார்கள் என்று தமிழ் மக்கள் நம்புவார்கள். கூடவே, போர் நிறுத்தம் தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

அந்த தருணத்தில் புலிகள் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள்: "தமிழீழ மக்களே, சிங்கள தேசம் நடத்தும் தேர்தல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடரும். ஆகவே, எங்களது இறுதி இலட்சியமான தமிழீழத்திற்காக தொடர்ந்தும் போராடுவோம்..." 

புலிகளின் அறிக்கைக்கு பின்னர் மக்கள் பலவிதமாக எதிர்வினையாற்றுவார்கள். "போர்நிறுத்த நிலைமை இப்படியே இருக்குமென்று நினைத்தால்... உவங்கள் திரும்பவும் சண்டைக்குப் போகப் போறாங்கள் போலக் கிடக்கு..." என்று புலிகளை விமர்சித்த மக்களும் இருந்தார்கள்.

பொதுவாகவே மக்கள் எப்போதும் தற்காலிக தீர்வை பெரிதென நினைப்பது வழமை. ஆனால், புலிகளைப் போன்று ஒரு குறிக்கோளுடன் போராடும் இயக்கம், சாதாரண மக்களை மாதிரி நடந்து கொள்ள முடியாது. அதனால் தான், தேர்தல்களில் ஒட்டுப் போடுவதற்கு மக்களை அனுமதித்தாலும், அவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தார்கள். தேர்தல்கள், ஆட்சி மாற்றங்கள் எந்தத் தீர்வையும் கொண்டு வராது என்று தங்கள் நடவடிக்கைகள் மூலம் நிரூபித்தார்கள்.

மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு இயங்கும் சமதர்மவாதிகளும் அப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும். மக்களின் அபிலாஷைகளுக்கும் மதிப்புக் கொடுத்து, தேர்தலில் எதிரணி வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர ஊக்குவிக்க வேண்டும்.

இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் போன்றோர், புலிகளை மாதிரி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும். "எல்லாத் தேர்தல்களிலும் ஓட்டுப் போட்டு, உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினாலும், எமது இறுதி இலட்சியம் சோஷலிசம் என்பதை மறந்து விடாதீர்கள் மக்களே!" என்று புலிகளின் பாணியில் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


No comments: