Saturday, March 21, 2015

அமெரிக்காவின் வர்க்க அநீதி : வெள்ளையின மேலாண்மைக்கு பலியாகும் கருப்பின ஏழைகள்


  • அமெரிக்கா என்றதும் அது பொன் விளையும் சொர்க்க பூமியாகத் தான் பலரின் கண்களுக்குத் தெரிகின்றது. சொர்க்கத்தின் மறுபக்கமாக நரகம் இருப்பதை பலர் அறிந்திருக்கவில்லை. "பணக்கார நாடான" அமெரிக்காவில் பல இலட்சம் ஏழைகள் வாழ்கின்றனர் என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பான்மை ஏழைகள், கறுப்பினச் சிறுபான்மையினராக இருப்பதால், அது நிறவாதப் பிரச்சினையாகவும் உள்ளது.
  •  
  • தமது அன்றாட வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட முடியாத ஆயிரக் கணக்கான ஏழைகள், சிறைகளில் அடைத்து வதைக்கப் படும் உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?உதாரணத்திற்கு,போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் கட்ட முடியாத ஏழைகள், எந்தக் குற்றச்சாட்டும் இன்றி மாதக் கணக்காக சிறைகளில் வாடுகின்றனர்.
  •  
  • ஒரு "நாகரிகமடைந்த ஜனநாயக" நாடான அமெரிக்காவிலும், சட்டங்கள் எழுத்தில் மட்டுமே உள்ளன. நடைமுறையில் அவை பின்பற்றப் படுவதில்லை அல்லது அந்தச் சட்டங்கள் ஏழைகளுக்கு உதவுவதில்லை. ஒரு சராசரி ஆப்பிரிக்க நாட்டில் நடப்பதைப் போன்ற சிறைச்சாலை அவலங்களும், காவலர்களின் அத்துமீறல்களும் அமெரிக்காவிலும் நடக்கின்றன என்று சொன்னால் நம்ப முடியுமா? நீங்கள் நம்பத் தான் வேண்டும்.
  •  
  • நெதர்லாந்தில் வெளியாகும் பிரபல தினசரிப் பத்திரிகை de Volkskrant ல் பிரசுரமான ஆய்வுக் கட்டுரையை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்துத் தருகிறேன். அமெரிக்காவின் இருண்ட பக்கத்தை அறிந்து கொள்வதற்கு இது உதவும்.

Zwart, arm, dus een prooi voor de witte macht 
(கருப்பு, வறுமை, அதனால் வெள்ளை அதிகாரத்திற்கு இரை )


மனித மலமும், இரத்தக் கறைகளும் சுவர்களில் படிந்துள்ள சிறைச்சாலைகள். அங்கிருக்கும் மனநோயாளிகளுக்கும், வயோதிபர்களுக்கும் மருந்து கிடைப்பதில்லை. பேன் தொல்லையால் ஏற்படும் சொறி நோய். எந்தக் காலத்திலும் சுத்தம் செய்யப்படாத கழிப்பறை. பெண்களின் மாதவிடாய் பட்டிகள், பற்பசை, சவர்க்காரம் என்பன தடைசெய்யப் பட்ட பொருட்களுக்குள் அடங்கும். எப்போது விடுதலையாவோம் என்று தெரியாமல், நிலத்தில் படுத்துறங்கும் ஏழை கறுப்பினக் கைதிகள்.

இந்தக் காட்சிகள் ஆப்கானிஸ்தான் நிலைமையை நினைவுபடுத்தலாம். ஆனால், அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில், இன்றைய சென் லூயிஸ் நகரில் இதெல்லாம் நடக்கின்றன. "சுழல் கதவுப் பொறிமுறை" (சிறையில் இருந்து போவதும், பின்னர் திரும்பி வருவதுமான நிலைமை) என்று அழைக்கப் படும் இரக்கமற்ற அமைப்பினால் பாதிக்கப் பட்டவர்கள். பணமில்லாத காரணத்தால், அபராதம் கட்ட முடியாத அவலம், அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்க்கும். ஒரு பிரஜை ஏழையாக இருக்கும் ஒரே காரணத்தால் அவரைக் கைது செய்ய முடியாது என்று அரசமைப்பு சட்டம் தடை செய்திருக்கிறது. ஆனால், கைதுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சென் லூயிஸ் நகருக்கு அருகில் உள்ள பெர்குசன் நகரில், ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஏழைகள் கூண்டுகளுக்குள் அடைக்கப் படுகின்றனர் என்று நீதி அமைச்சின் அரச அறிக்கை தெரிவிக்கின்றது. இதெல்லாம், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கான பொலிசின் கடமையுணர்வு காரணமாக நடக்கவில்லை. ஏழைகளை அடைத்து வைப்பதன் முழு நோக்கமும் இலாபம் சம்பாதிப்பது தான். சந்தையில் மாட்டுக்கு விலை பேசுவது போன்று, கைது செய்யப் பட்டவர்களின் உறவினர்கள் விடுவிப்பதற்காக நீதித் துறையுடன் பேரம் பேசுகின்றார்கள். அதனால், நகர சபை பல கோடி பணத்தை சம்பாதித்துள்ளது. ஆனால், ஏழைகளின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியுள்ளது.

வெள்ளையின, கருப்பின மக்களுக்கு இடையிலான வருமான ஏற்றத்தாழ்வு காரணமாக, பெருமளவில் கருப்பின மக்கள் தான் பாதிக்கப் படுகின்றனர். அதை விட, நிறுவனமயப் படுத்தப் பட்ட நிறவாதமும் ஒரு காரணம். நீதிபதி, நீதிமன்ற அலுவலர், வக்கீல், பொலிஸ்காரர்கள், சிறைக் காவலர்கள் எல்லோரும் பெரும்பாலும் வெள்ளயினத்தை சேர்ந்தவர்கள். அப்படி இல்லாவிட்டாலும், வேண்டுமென்றே "கடமையுணர்வு" காரணமாக கருப்பின பிரஜைகளை குறிவைக்கிறார்கள். கடன் கட்ட முடியாதவர்களின் சிறைச்சாலைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று பாதிக்கப் பட்ட மக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவையெல்லாம் நகர சபையின் கவனத்தைக் கவரவில்லை.

இவையெல்லாம், மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் "செல்மா" (Selma) எனும் ஹாலிவூட் திரைப்படக் காட்சிகளை நினைவூட்டுகின்றன. ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் எல்லா வெள்ளையின அரச அலுவலர்களும், கருப்பின பிரஜைகளை தேவையற்ற குப்பைகள் போன்று நடத்த முடிந்தது.

ஐம்பது வருடங்களுக்கு முன்னர், செல்மா பாலத்தில் நடந்த கருப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தை நினைவுகூரும் முகமாக, ஜனாதிபதி ஒபாமா அங்கே சென்றிருந்தார். அவர் ஒரு தடவை அயலில் உள்ள பெர்குசன் நகருக்கு சென்றிருந்தால், நிலைமைகளை நேரில் கண்டறிந்திருக்கலாம். ஏனென்றால், இன்றைக்கும் அங்கேயுள்ள சிறைகளில், வெள்ளையின காவலர்கள் கருப்பின கைதிகளைப் பார்த்து, "ஊத்தை விபச்சாரிகள்", "நாற்றம் பிடித்தவர்கள்" என்றெல்லாம் தண்டனைக்கு பயமின்றி திட்ட முடிகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம், பெர்குசன், ஜென்னிங்க்ஸ் நகரங்களை சேர்ந்த இருபது சமூக ஆர்வலர்கள், "Class action complaint" என்ற பெயரில் நீதிமன்றத்தை நாடினார்கள். சட்டவிரோதமான சுழல் கதவு பொறிமுறைக்கு முடிவு கட்டுவதும், சிறைகளில் அடைக்கப்பட்ட அனைத்துக் கைதிகளுக்கும் நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதும் அந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. 

வாஷிங்டன் நகரில் உள்ள "Equal Justice unde Law" அமைப்பின் வழக்கறிஞர் Alec Karakatsanis மேற்படி அமைப்பில் பங்களித்து வருகின்றார். ஹார்வார்ட் சட்டக் கல்லூரி நிதியுதவியும், நலன்விரும்பிகள் பலரின் நன்கொடைகளும் அந்த அமைப்பிற்கு கிடைத்துள்ளன. "இங்கே சர்வசாதாரணமாகப் போய் விட்ட மிலேச்சத்தனமான அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்." என்று கூறினார் Alec Karakatsanis

அமெரிக்காவின் சனத்தொகையில் நூறில் ஒருவர் சிறையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். உலகக் கைதிகளின் சனத்தொகையில், கால்வாசிப் பங்கு அமெரிக்காவில் உள்ளது! உலகில் வேறெந்த நாட்டிலும் இந்தளவு பெருந்தொகையான கைதிகள் இல்லை! அவர்கள் பெரும்பாலும் ஏழைகள், அல்லது சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றனர்.

"கருப்பின மக்களை தூள் தூளாக அரைத்துத் தள்ளும் அமைப்பு" என்று ஒரு பொறியியல் அறிஞர் கூறினார். அது எப்படி என்பது, பெர்குசன் நகரில் நீதித்துறை நடத்திய ஆய்வில் இருந்து தெரிய வருகின்றது. 37 வயதான Keilee Fant எனும் பெண்ணின் கதையை உதாரணமாகக் காட்டலாம். அவர் தாதி உதவியாளராக வேலை செய்வதுடன், தன்னந்தனியாக பிள்ளைகளை வளர்க்கும் தாயும் ஆவார். அந்தப் பெண் வருடக் கணக்காக பத்து தடவைகளுக்கு மேல் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் செய்த குற்றம், போக்குவரத்து விதிகளை மீறிய தண்டப் பணம் கட்டாதது. 

2013 அக்டோபர், Keilee Fant தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்ற சமயம் கைது செய்யப் பட்டார். 300 டாலர் கட்டினால் விடுதலை செய்யப் படுவதாக தெரிவிக்கப் பட்டது. அவரிடம் அந்தளவு பணம் இல்லை. பணம் அறவிட முடியாத கட்டத்தில் விடுதலை செய்யப் பட்டார். ஆனால், சில தினங்களுக்கு பின்னர், அயலில் உள்ள இன்னொரு நகரில், அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இறுதியாக பெர்குசன் சிறையில் அடைக்கப் பட்டிருந்த நேரம், அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகை 1400 டாலர்களாக உயர்ந்து விட்டிருந்தது. 

அடிக்கடி கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப் பட்டிருந்த காரணத்தால், அந்த அபலைப் பெண்ணின் வேலை பறிபோனது. அரசு உதவித் தொகையில் வாழ்க்கை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு தடவை, அவரது தந்தையாரின் மரணச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாதவாறு 48 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

சமூகத்தில் எந்த ஆய்வும் நடக்காத காரணத்தால், எப்படி இந்த அநியாயங்கள் நடக்கின்றன என்ற விபரம் யாருக்கும் தெரியாது. "நான் எத்தனையோ நீதிமன்றங்களை பார்த்து விட்டேன். எல்லா இடங்களிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதாவது, எழுதப் பட்ட சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது." என்றார் ஒரு வழக்கறிஞர். 

பொலிஸ் யாரையும் எந்தக் காரணமும் இன்றி தடுத்து வைக்கவோ, சோதனையிடவோ முடியாது. ஆனால், அது ஒவ்வொரு நாளும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் நடக்கிறது. குற்றஞ்சாடப்பட்டவர் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள உரிமையுண்டு என்று அரசமைப்பு சட்டம் கூறுகின்றது. ஆனால், அது இலட்சக் கணக்கான வழக்குகளில் நடப்பதில்லை. ஏனென்றால், ஒரு குற்றம் பல மடங்காக பெருகுகின்றது. 

உதாரணத்திற்கு, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்தில் 150 டாலர் தண்டம் அறவிடப் படலாம். ஆனால், உங்களால் அதைக் கட்ட முடியா விட்டால், அந்தத் தொகை 500 டாலர், சிலநேரம் ஆயிரம் டாலர் வரை உயரும்.

பெர்குசன் நகர பொலிஸ்காரர்கள், எத்தனை பேரை தடுத்து வைத்தார்கள், எத்தனை பேருக்கு அபராதம் விதித்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்களது தகைமை மதிப்பிடப் படுகின்றது. ஆகையினால், பொலிஸ்காரர்கள் முடிந்தளவு அதிகமான அளவு தடுத்து வைக்கவும், அபராதம் விதிக்கவும் முயல்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் போட்டி மாதிரி. இதனால் பாதிக்கப் படுவோர் பெரும்பாலும் கருப்பின மக்கள் தான். 

காவலரிடம் உங்களது பெயரை சுருக்கமாக சொன்னீர்களா? பிழையான தகவல் கொடுத்தமைக்காக அபராதம். உங்கள் காரை தெருவில் ஓரிடத்தில் நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தீர்களா? பெல்ட் போடாத குற்றத்திற்காக அபராதம். அபராதத் தொகை இன்னும் கட்டவில்லையா? கைது செய்யப் படுவதுடன் மேலதிகமாக ஆயிரம் டாலர் அபரதாம் விதிக்கப் படும். வறுமை காரணமாக அபராதம் கட்டுவதற்கு பணம் இல்லையா? கைது செய்யப் படுவீர்கள். 

வீட்டு வன்முறை காரணமாக போலிசை கூப்பிட்டீர்களா? வன்முறையால் பாதிக்கப் பட்ட நீங்களும் கைது செய்யப் படலாம். காரணம்? நீங்கள் அந்த வீட்டில் பதிவு செய்யப்படாத ஒருவராக இருக்கலாம். பூங்காவில் ஒரு மறைவிடத்தில் உங்களது குழந்தையை சிறுநீர் கழிக்க விட்டீர்களா? அபராதம். குற்றம்? நிர்வாணமாக நடந்தது அல்லது பிள்ளைகளை கவனிக்காமல் திரிய விட்டது. இதெல்லாம் நீதித்துறை ஆய்வறிக்கையில் இருந்து கிடைத்த சில உதாரணங்கள்.

"இதைப் பற்றியெல்லாம் கேள்விப்படும் பொழுது, சுத்த பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறதா?"  என்று கேட்கிறார் வழக்கறிஞர் Alec Karakatsanis. " இது தான் அமெரிக்கா!ஏராளமான மனிதத் தன்மையற்ற  கொடுமைகள் , இந்த நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. உங்களது காற்சட்டை இடுப்பில் எந்தளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்பதில் இருந்து, யார் உங்கள் வீட்டில் தங்கக் கூடாது என்பது வரையில் ஏராளமான விதிகள். அநேகமாக, அர்த்தமற்ற, சட்டத்திற்கு விரோதமான விதிகள். ஆனால், இவையெல்லாம் ஏழைகள் மீது தான் நடைமுறைப் படுத்தப் படுகின்றன. அவர்களுக்கு வழக்கறிஞர்களும் கிடையாது. ஒரு சில அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும், இந்த ஊழல் மய அமைப்பிற்கு தீர்வு கண்டு விட முடியாது. நாங்கள் வறுமையை கிரிமினல்மயப் படுத்தி வைத்திருக்கிறோம்."

"செல்மா நிகழ்வுகள் நடந்த காலத்தில் கருப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப் பட்டதைப் போன்ற நிலைமை தான் தற்போதும் உள்ளது." என்கிறார் ஹார்வி என்ற வழக்கறிஞர். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், தற்போது நிறைய சட்ட வல்லுனர்கள் உதவி செய்ய முன்வருகிறார்கள். கருப்பின மக்கள், இப்போதும் வெள்ளையின பொலிஸ்காரர்களை கண்டு அஞ்சுகிறார்கள். நிறவாதத்தை இலகுவில் வேறு பிரித்து அறிய முடியாது.

1865 ம் ஆண்டு, அடிமை ஒழிப்பிற்குப் பின்னரே, கருப்பின மக்களை கிரிமினல் மயப் படுத்தும் போக்கு ஆரம்பமானது. அதற்கு முன்னர், மிக மிகக் குறைந்தளவு கருப்பின கைதிகள் தான் சிறைகளில் அடைக்கப் பட்டிருந்தனர். ஆனால், 1870 ம் ஆண்டு அலபமா மாநிலத்தில், கருப்பின கைதிகளின் எண்ணிக்கை திடீரென 74 சதவீதமாக உயர்ந்தது. அதற்கு என்ன காரணம்? 

பெருந்தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு காரணமாக, சிலர் இதனை ஒரு வியாபாரமாக செய்து வந்தனர். வெள்ளையின அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கருப்பினத்தவர்களை பிடித்து கைதிகளாக அடைத்து வைத்து, பின்னர் தொழிலாளர்களாக விற்று வந்தனர். 

இந்த வணிகத்தை விரிவு படுத்தி இலாபகரமாக்கும் நோக்கில், பல தடைச் சட்டங்கள் கொண்டு வரப் பட்டன. அரசு அதிகாரிகளும், தொழிலதிபர்களும் கைதிகளின் இலவச உழைப்பினால் பெருமளவு இலாபம் சம்பாதித்தனர். அன்று அலபமா மாநிலம் தனது வருமானத்தில் பன்னிரண்டு சதவீதத்தை, சிறைக் கைதிகள் எனும் நவீன அடிமைகளிடம் இருந்து ஈட்டி வந்தது. 

Doughlas Blackmon எனும் ஊடகவியலாளர் எழுதிய "Slavery by Another Name" என்ற நூலில் அது குறித்த பல வரலாற்றுத் தகவல்கள் எழுதப் பட்டுள்ளன.

(நன்றி: de Volkskrant, 14-3-2015, மூலப் பிரதியின் தலைப்பு : "Zwart, arm, dus een prooi voor de witte macht")

No comments: