Tuesday, April 21, 2015

சுதந்திரமான கியூபா தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி


கியூபாவில் பொதுத் தேர்தல்கள் நடப்பதே வெளியில் பலருக்குத் தெரியாது. அது சரி, கியூபா ஒரு "சர்வாதிகார நாடு" என்றல்லவா,  மேற்குலக எஜமானர்கள் எமக்குப் போதித்தார்கள்? இந்த லட்சணத்தில் அங்கே தேர்தல் நடப்பது எவனுக்குத் தெரியும்? அதிலும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் போட்டியிடுவதாவது. காதிலே பூச் சுற்றுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். 

நம்பினால் நம்புங்கள், 19 ஏப்ரல் 2015 நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான பொதுத் தேர்தலில், இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள், அமெரிக்காவிலும் பலருக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வந்திருந்தார்கள்.

இடது: சாவியானோ, வலது: லோபெஸ் 
ஹில்டபிராண்டோ சாவியானோ (Hildebrando Chaviano, வயது 65), யூனியல் லோபெஸ் (Yuniel Lopez, வயது 26) ஆகியோரே அந்த இரு எதிக்கட்சி வேட்பாளர்கள் ஆவர். சாவியானோ ஹவானா நகரில் உள்ள Plaza de la Revolución தொகுதியில் போட்டியிட்டார். லோபெஸ் Arroyo Naranjo தொகுதியில் போட்டியிட்டார். கியூபாவில் 168 உள்ளூராட்சி சபைகள் (Asambleas Municipales del Poder Popular) உள்ளன. அவற்றிற்கு மொத்தம் 27.300 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் செயற்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கட்சி சார்பற்ற தனி நபர்களும் போட்டியிடலாம். அவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு மக்கள் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பார்கள்.

வேட்பாளர்கள் யாரும் கூட்டம் கூட்டி பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள், மக்கள் கூடுமிடங்களில் ஒட்டப் பட்டிருக்கும். அதைத் தவிர வேட்பாளர்கள் மக்களை சந்தித்து தனக்கு ஓட்டுப் போடுமாறு கேட்க முடியும். வாக்குரிமை பெற்றுள்ள எட்டு மில்லியன் வாக்காளர்களில், பெரும்பான்மையானோர் தவறாமல் தேர்தல் அன்று தமது வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவார்கள்.

சாவியானோ முன்னொரு காலத்தில், உள்துறை அமைச்சில் வேலை செய்து வந்தார். அரசுக்கு எதிராக விமர்சனம் செய்த படியால் வேலையை விட்டு நீக்கப் பட்டார். அவர் இன்று வரையில், பிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளை குறை கூறியும் பேசி வருகிறார். இதனால், அவரைப் பற்றிய துண்டுப் பிரசுரத்தில், "எதிர்ப்புரட்சியாளர்", "அமெரிக்க தூதரகத்தில் நடந்த வகுப்புகளில் கலந்து கொண்டவர்" என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தன.

சாவியானோ அதனை சாதகமாக எடுத்துக் கொண்டார். அதாவது, காஸ்ட்ரோ அரசின் மேல் வெறுப்புற்று இருக்கும் மக்கள், தனது அமெரிக்க தொடர்பை நன்மையாகக் கருதி ஓட்டுப் போடுவார்கள் என்று நம்பினார்.  லோபெஸ் பற்றிய பிரசுரத்திலும் அதே மாதிரியான வசனங்கள் இருந்துள்ளன. "எதிர்ப்புரட்சியாளர்", "அமெரிக்க நிதி பெற்றுக் கொள்பவர்" என்றெழுதி இருந்தன.

லோபெஸ், தனியாக ஒரு வர்த்தக நிறுவனத்தை (குழந்தைகள் பராமரிப்பு நிலையம்) நடத்தி வருகிறார். அதே நேரம், அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி உள்ளார். அதன் அங்கத்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனினும், ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் கியூபாவும் கையெழுத்து இட்டுள்ளதை சுட்டிக் காட்டி, தனது கட்சியின் இருப்பை நியாயப் படுத்தி வருகிறார்.

அண்மையில் அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டுள்ள படியால், பல வெளிநாட்டு ஊடகங்களும் தேர்தலை கண்காணிக்க வந்திருந்தன. இரண்டு காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தால், அந்த தகவல் உலகம் முழுவதும் முக்கியத்துவம் கொடுத்து தெரிவிக்கப் பட்டிருக்கும். ஆனால், மேற்கத்திய கண்காணிப்பாளர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

சாவியானோ போட்டியிட்ட தொகுதியில், நான்கு வேட்பாளர்களில் கடைசியாக வந்தார். (138 votos para Chaviano; http://www.14ymedio.com/nacional/votos-Chaviano_0_1764423541.html) லோபெஸ் கொஞ்சம் அதிகமான ஓட்டுக்களை பெற்றிருந்தார். ஆயினும், அரசு ஆதரவு வேட்பாளருக்கு அடுத்ததாக இரண்டாம் இடமே கிடைத்தது. தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் போட்டதாக யாரும் குற்றஞ் சாட்டவில்லை. ஏனெனில், தேர்தல் நடந்த இடத்தில் மட்டுமல்ல, வாக்குகள் எண்ணும் இடத்திலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

தங்களது தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக, இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்களும் அறிவித்துள்ளனர். "வாக்கெடுப்பில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. நேர்மையான வாக்குப் பதிவு நடந்துள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சாவியானோ தெரிவித்தார்.

லோபெஸ் போட்டியிட்ட Arroyo Naranjo தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் "புரட்சி வாழ்க!", "பிடல் வாழ்க!" என்று கோஷம் எழுப்பிய படி ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு அருகிலேயே, லோபெஸ் ஆதரவாளர்களும் "லோபெஸ் வாழ்க!" என்று கோஷம் எழுப்பிய படி குழுவாக சென்றுள்ளனர். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 

"எதற்காக நீங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடவில்லை?" என்று, அமெரிக்க ஊடகவியலாளர்கள் கியூபர்கள் சிலரை விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் "அந்த வேட்பாளர்கள் பல வருட காலமாகவே உங்களது (அமெரிக்க) அரசிடம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள்!" என்று கூறினார்கள்.  

மேலதிக தகவல்களுக்கு:
 14ymedio; 
http://www.14ymedio.com/
Two Cuban Opposition Candidates Lose Election Bids;
http://www.voanews.com/content/two-cuban-opposition-candidates-lose-election-bids/2726321.html


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
கியூபாவில் ஜனநாயக தேர்தல்கள் - ஒரு பார்வை
கியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?
கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

No comments: