Sunday, February 14, 2016

பிற்போக்கு தேசியவாதத்திற்கு முற்போக்கு முலாம் பூசும் "மார்க்சிய- அடிப்படைவாதி"!

தன்னை ஒரு மார்க்சிய அறிவுஜீவியாக காட்டிக் கொள்ளும், சாய்மனைக் கதிரை மார்க்சிஸ்டான "இலங்கை வேலன்" என்ற நபர், வலதுசாரி தமிழ்தேசியத்தை நியாயப் படுத்தும் கருத்துக்களை "தூய்மையான மார்க்சியம்" என்று கூறி வருகின்றார். 

இலங்கை அரசியலில் இது ஒன்றும் புதுமை அல்ல. ஏற்கனவே, சிங்கள இடதுசாரி கட்சிகளை சேர்ந்த கதிரை மார்க்சிஸ்டுகள் பலர், இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். சிங்கள தேசியவாதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுவதற்காக, மார்க்சிய சொல்லாடல்களை வரட்டுத்தனமாக பயன்படுத்துவார்கள். அதே பாணியில், இலங்கை வேலன் தமிழ் தேசியவாதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுகின்றார்.

தேசியவாதத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவதற்காக, "வரையறைகளின் காலப்பொருத்தம் பற்றி!!!" (http://xn--velan-68n6cxa6nmc.blogspot.no/2015/12/blog-post.html) என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். மார்க்சியம் தனக்கு இறைவனால் அருளப் பட்டது என நினைத்துக் கொண்டு எழுதியுள்ள அபத்தங்களை கீழே பட்டியலிடுகிறேன். "இலங்கையில் என்ன நடக்கின்றது?" என்ற உப தலைப்பின் கீழ் எழுதியுள்ளவை தான், முக்கியமாக விவாதிக்கப் பட வேண்டியவை.

கட்டுரையின் தொடக்கத்தில் இனம் என்ற சொல்லுக்கு கறுப்பர், வெள்ளையர், மங்கோலியர் என்று மானிடவியல் பாகுபாட்டை விவரித்து விட்டு, இலங்கை விடயத்தில் மட்டும் இனம் என்ற சொல்லுக்கு புதுமையான வியாக்கியானம் கொடுக்கிறார்: 
//மக்கள் கூட்டத்தினை குறிக்க இனம் என்ற சொல்லும் அதன் பொருட்டு வெளிப்படும் பாகுபாட்டுச் சிந்தனை என்பதை இனவாதமாக ஓட்டுமொத்தமான பார்வையில் பயன்படுத்தப்படுகின்றது.// 

தமிழில் இனம் என்று சொல்லும் பொழுது, அது எப்போதும் சரியான அர்த்தத்தை தருவதில்லை. அதே மாதிரித் தான், இனவாதம் என்ற சொல்லும். ஐரோப்பியர்களைப் பொறுத்தவரையில், இனம் என்ற சொல் வெள்ளையர்கள், கருப்பர்கள் போன்ற நிறப் பாகுபாட்டை மட்டுமே குறிக்கும். ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மக்களை "தேசியங்கள்" என்று வரையறுத்தார்கள். ஆனால், ஐரோப்பிய காலனிய எஜமானர்களினால் ஆளப்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்கள் ethnic groups என்று வேறு படுத்தப் பட்டனர். 

நாம் இன்று பேசும் நவீன தமிழ் மொழியானது, ஆங்கிலத்தில் இருந்து பல கலைச்சொற்களை மொழிபெயர்த்து பயன்படுத்துகின்றது. ஆகையினால், தமிழில் இவையெல்லாம் "இனம்" என்று பொதுப்படையாக மொழிபெயர்க்கப் பட்டன. தமிழில் மட்டும் தான் இந்தக் குழப்பம் என்று சொல்ல முடியாது. சிங்கள மொழியில் "ஜாதிய" என்ற சொல் இனத்தைக் குறிக்கும். அதாவது, சிங்களத்தில் சாதியை குறிப்பதும் அதே சொல் தான்.

தென்னாபிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மையினரின் அப்பார்ட்ஹைட் என்ற பெயரிலான பாகுபாட்டு அரசமைப்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். வெள்ளை நிறவெறி ஒடுக்குமுறை இனவாதம் பற்றியும் விளக்கம் தேவையில்லை. ஆனால், உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில், சிம்பாப்வே, தென்னாபிரிக்காவில் விடுதலைக்காக போராடிய கருப்பின ஆயுதபாணி இயக்கங்கள், சிலநேரம் வெள்ளையின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தின. பிரிட்டிஷ் ஊடகங்கள், அப்படியான சம்பவங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டன. அதை "கறுப்பர்களின் இனவாதம்" என்று கண்டித்து வந்தன.

ஆகவே, வெறுமனே பாகுபாட்டு "சிந்தனை" மட்டுமே இனவாதமாக கருதப் படுவதில்லை. இனக்குரோத செயற்பாடுகள், எந்த இனத்தில் இருந்து வந்தாலும், அதை இனவாதமாக கருதுவது உலகப் பொதுப் புத்தி ஆகும்.

//இலங்கையில் இருப்பது ஒடுக்கும் பாகுபாட்டுச் சிந்தனை மற்றையது அதனை எதிர்க்கும் பாதுகாப்புச் சிந்தனையாகும்.// 

இலங்கையில் இருப்பது இனவாதம் இல்லையாம்! "மார்க்சியத்தை கரைத்துக் குடித்த" வேலன் சொல்கிறார். எல்லோரும் நம்புங்கள். உலக நாடுகளில் உள்ள அத்தனை இனவாதிகளும், வேலனின் கோட்பாட்டை பயன்படுத்தி தம்மை தற்காத்துக் கொள்ள முடியும். உலகில் நடக்கும் அத்தனை இனப் பகை போர்களையும், "ஒடுக்கும் பாகுபாட்டு சிந்தனைக்கும், அதை எதிர்க்கும் பாகுபாட்டு சிந்தனைக்கும் இடையிலான முரண்பாடு" என்று விளக்கம் கொடுத்து விட்டு கடந்து செல்ல முடியும்.

இன்றைய உலகில் பாகுபாடு (discrimination) என்பது, எப்போதும் இனம், மதம், சாதி சார்ந்தே எழுகின்றது. அமெரிக்காவில் சிறுபான்மை கருப்பர்கள் பாகுபாடு காட்டப் படுகின்றனர். ஐரோப்பாவில் முஸ்லிம் குடியேறிகள் பாகுபாடு காட்டப் படுகின்றனர். ஈராக்கிலும், சிரியாவிலும், சுன்னி முஸ்லிம்களை, ஷியா முஸ்லிம்கள் பாகுபாடு காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு, இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றது.

ருவாண்டாவில் ஒரே மொழி பேசும், ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும், டுட்சி, ஹூட்டு மக்களுக்கு இடையில் நடந்த இனப்படுகொலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வதாம்? இரத்தவெறி கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட இனங்கள் எல்லாம், வரலாற்றில் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒடுக்கும் இனமாகவும், ஒடுக்கபடும் இனமாகவும் இருந்துள்ளன. இவற்றில் எது "ஒடுக்கும் பாகுபாட்டு சிந்தன"? எது "எதிர்க்கும் பாகுபாட்டுச் சிந்தனை"? ஒவ்வொரு நாட்டு  இனப் பிரச்சினையையும் அவ்வாறு தெளிவாக வரையறுக்க முடியுமா? 

//தமிழ் மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆண்ட பரம்பரைக் கோசம் என்பது இந்த தேசிய இனத்தின் எழுச்சிக்கு உட்பட்டதேயன்றி இது இனவாதத்திற்கு உட்பட்டதல்ல.... 
தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது (myth- symbol- national heroes ) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்.//

தமிழ் தேசியவாதிகளை, "தமிழ் மிதவாதிகள்" என்று மிதமாக வருடிக் கொடுக்கிறார். ஒரு காலத்தில் தமிழர்கள் இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்டார்கள்... ராஜராஜ சோழன் காலத்தில் தெற்காசியா முதல் இந்தோனேசியா வரை ஆண்டார்கள்... இது போன்ற வரலாற்றுப் பெருமிதங்களில் இருந்து தான் ஆண்ட பரம்பரைக் கோஷம் முளைத்தது. இது ஒன்றும் இரகசியம் அல்ல. தமிழ் தேசியவாதிகளே பகிரங்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நமது ஆள் ஒரு "மார்க்சிய அறிஞர்" அல்லவா? அதனால், "தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம்" என்று கோட்பாட்டு விளக்கம் கொடுக்கிறார். அது சரி? இது தமிழர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமா?

"இலங்கை வேலன்" என்ற புனைபெயரில் எழுதும் இந்த எழுத்தாளர், தேசியப் பெருமை பேசும் மேற்கைரோப்பிய நாடொன்றில் வாழ்கிறார். அதனால், அவருக்கு ஐரோப்பிய தேசியவாதிகள், அவர்களது கோஷங்கள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும்.

நோர்வீஜிய தேசியவாதிகளுக்கு வைகிங் சாகசக்காரர்கள் தேசிய வீரர்கள் ஆவார்கள். வைக்கிங் கடலோடிகள் ஐரோப்பாவை ஆட்டிப் படைத்த வரலாற்றுப் பெருமை பற்றி பேசுவார்கள். அதிலிருந்து நோர்வீஜியர்களின் ஆண்ட பரம்பரைக் கோஷம் எழுகின்றது. கிழக்கிந்தியக் கம்பனி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அதனை காலனிய சுரண்டலின் சின்னமாக பார்க்கலாம். ஆனால், நெதர்லாந்து (டச்சு) தேசியவாதிகளுக்கு அது பெருமைக்குரிய தேசிய சின்னம். காலனி அடிமைப்படுத்திய கடலோடிகள் அவர்களது தேசிய வீரர்கள். அவர்களது ஆண்ட பரம்பரைக் கோஷம் காலனிய பொற்காலத்தை நினைவுபடுத்துகின்றது.

இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், ஹிட்லரின் ஆண்ட பரம்பரைக் கோஷம் அமைந்திருந்தது. மேற்கைரோப்பா முழுவதிலும் ஜேர்மனிய இனம் தான் ஆதிக்கம் செலுத்துகின்றது என்று ஒரே போடாகப் போட்டான். ஸ்கண்டிநேவிய, டச்சு மொழிகளுக்கும், ஜெர்மன் மொழிக்கும் இடையில் ஒற்றுமைகள் இருப்பதால் மட்டும் அப்படிக் கூறவில்லை. ஆங்கிலேயரின் மூதாதையர் ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஆங்லோ- சாக்சன் இனத்தவர்கள். பூர்வீகத்தில் ஜெர்மன் மொழி பேசிய பிராங் இனத்தில் இருந்து தான் பிரான்ஸ் என்ற பெயர் வந்தது. ஸ்பானிஷ் மன்னர் பரம்பரையில் ஜேர்மனிய இரத்தம் தான் ஓடுகின்றது. இதிலிருந்து தான் ஜெர்மன் தேசியவாதிகளின் ஆண்ட பரம்பரைக் கோஷம் எழுந்தது. 

"தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோஷம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்." ஆமாம், உலகில் உள்ள எல்லா தேசியவாதங்களினதும் அடிப்படைக் கொள்கையே அது தானே?

முன்னாள் சோவியத் யூனியனில் இருந்தும், முன்னாள் யூகோஸ்லேவியாவில் இருந்தும் பிரிந்த நாடுகளில் பிற்போக்கான தேசியவாதிகள், இனவாதிகள் மேலாதிக்கம் பெற்றது எவ்வாறு? போல்ஷெவிக் புரட்சிக்கு முன்பிருந்த அதே இனவாத சக்திகள் மீண்டும் அரசியலை தீர்மானிக்கும் சக்தியானது எப்படி? 

சோவியத் யூனியனின் குடியரசுகளாக இருந்த பால்டிக் நாடுகளில் ஏன் இன்றைக்கும் ரஷ்யாவை வெறுக்கிறார்கள்? சிறுபான்மையான ரஷ்யர்களை ஒடுக்கிறார்கள்? எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா தேசியவாதிகள், ஜெர்மன் நாஸிகளை விடுதலை வீரர்களாக போற்றும் அளவிற்கு இனவாதிகளாக இருப்பது எப்படி? 

அங்கெல்லாம் லெனினின் கோட்பாடு எவ்வாறு செல்லுபடியாகாமல் போனது? செல்லுபடியாமால் போனால்கூடப் பரவாயில்லை. லெனினின் சிலைகளை அல்லவா உடைத்தார்கள்? அவர்கள் லெனின் சிலைகளைக் கூட, ரஷ்ய பேரினவாத சின்னம் என்று சொல்லித் தான் உடைத்தார்கள் என்ற உண்மை "மார்க்சிய அறிவுஜீவி" வேலனுக்கு தெரியுமா? 

இன்று பால்டிக் நாடுகளிலும், உக்ரைனிலும் மீண்டும் பிரபலமாகும் நாசிஸத்தை, "வேலன் தான் கற்ற மார்க்சிய விஞ்ஞானம்" கொண்டு விளக்குவாரா? நாசிஸ ஆதரவு தேசியவாதங்களையும், மார்க்சியம் கொண்டு புனிதமாக்க முடியாது. வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. நடைமுறை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் சமூக விஞ்ஞானம்.

Ilankai Velan, நீங்க‌ள் பேசுவ‌து ஒரு வ‌கையில் "மார்க்சிய அடிப்ப‌டைவாத‌ம்" (dogmatism). புனித நூலில் எழுதியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கோரும் ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் மாதிரி, மார்க்சியம் தொடர்பான உங்க‌ள‌து க‌ருத்துக்க‌ள் அமைந்துள்ள‌ன‌. அறிவுஜீவித்தனத்துடன் மார்க்சிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌டித்து அப்ப‌டியே ஒப்புவிக்க‌ப் பார்க்கிறீர்க‌ள். அதை ச‌ரியென்று ந‌ம்புகிறீர்க‌ள்.

உங்க‌ளை போன்ற‌வ‌ர்க‌ளை "வ‌ர‌ட்டுத்த‌ன‌மான‌ சித்தாந்த‌வாதிக‌ள்" என்று சொல்வார்க‌ள். பெரும்பாலும் "க‌திரை மார்க்சிஸ்டுக‌ள்". ஒரு மேட்டுக்குடி ம‌ன‌ப்பான்மையுட‌ன் மார்க்சிய‌ம் பேசுவீர்க‌ள். உங்க‌ள‌து வ‌ர்க்க‌மும் அதுவாக‌ இருக்கும். அத‌னால் தான் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள் பேசும் மார்க்சிய‌த்தால் ம‌க்களை க‌வ‌ர‌ முடியாம‌ல் உள்ள‌து. நீங்க‌ள் உழைக்கும் ம‌க்க‌ளுக்கு புரியாத‌ மொழியில் பேசிக் கொண்டு, அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌ள்ளி நிற்கிறீர்க‌ள்.

நீங்க‌ள் வ‌ர‌ட்டுத்த‌ன‌மாக‌ பின்ப‌ற்றும் மார்க்சிய‌ ஆசான்க‌ள் சுய‌நிர்ண‌யம் தொட‌ர்பாக‌ ஒருமித்த‌ க‌ருத்தைக் கொண்டிருக்க‌வில்லை. அதாவ‌து எந்த‌ நிப‌ந்த‌னையும் இன்றி எல்லா சுய‌நிர்ண‌ய‌ங்க‌ளையும் ஆத‌ரிக்க‌வில்லை. ஐரிஷ் சுயநிர்ணயத்தை ஆதரித்த கார்ல்மார்க்ஸ், அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை உடைத்து நொறுக்கும் என்று நியாயப் படுத்தினார்.

பெரும்பான்மை ஐரிஷ் மக்கள் பாட்டாளி வர்க்கத்தினராக இருந்ததும், சோஷலிச அமைப்புகள் தேசிய விடுதலையை முன்னெடுத்ததையும் கார்ல் மார்க்ஸ் சாதகமாகப் பார்த்தார். முதலாம் உலகப்போருக்கு பின்னர், பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனி நாடுகள் விடுதலையடைய வேண்டும் என்று மூன்றாம் கம்யூனிச அகிலம் தீர்மானம் நிறைவேற்றியது. அதிலும் தேசங்களின் சுயநிர்ணயத்தை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக கருதும் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

ரோசா ல‌க்ச‌ம்பேர்க் ஒடுக்கப்பட்டபோலிஷ் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தும், போலிஷ் தேசிய‌த்தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. இதுதொடர்பாக லெனினுக்கும், ரோசா லக்சம்பேர்க்குக்கும் இடையில் பெரும் விவாதங்கள் நடந்தன. ர‌ஷ்ய‌ பெரும்பான்மை இனத்தை சேர்ந்த லெனின், சிறுபான்மையின போலிஷ் தேசிய‌த்தை ஆத‌ரித்தாலும், அதே நேரம் யூத‌ர்க‌ளுக்கு எதிரான‌ போலிஷ் இன‌வாத‌த்தை ஏற்றுக் கொள்ள‌ முடியாது என்று நேரடியாகவே கூறினார்.

தேசங்களின் சுய‌நிர்ண‌ய‌ம் ப‌ற்றி நூல் எழுதிய‌ ஸ்டாலின், த‌ன‌து சொந்த‌ நாடான‌ ஜோர்ஜியாவில் வ‌ல‌துசாரி தேசிய‌வாதிக‌ள் த‌னிநாடு பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. இராணுவ‌த்தை அனுப்பி அட‌க்கினார். அயலில் இருந்த அச‌ர்பைஜான் தேசிய‌வாதிக‌ளின் சுதந்திர தனிநாடும் பறிக்கப்பட்டது. அவர்கள் தமது த‌னி நாட்டுக் கோரிக்கையை இஸ்லாமிய ஜிகாத் ம‌ய‌மாக்கினார்க‌ள். அதுவும் அட‌க்க‌ப் ப‌ட்ட‌து. மத்திய ஆசியாவில் துருக்கேஸ்தான் தேசத்திற்காக போராடிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள், செம்படையினரால் ஒடுக்கப் பட்டனர்.

எந்த விதமான வர்க்க கண்ணோட்டமும் இன்றி, சுயநிர்ணயத்தை அங்கீகரிக்க வேண்டுமென்று மார்க்சியம் கூறவில்லை. இன‌வாத‌த்திற்கு ப‌திலாக‌ இன்னொரு இன‌வாத‌த்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கார்ல் மார்க்ஸ் முன்மொழியவில்லை. ஒருதேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் அதே நேரம், ஒடுக்கும் இன‌த்தின் பாட்டாளி வ‌ர்க்க‌மும், ஒடுக்க‌ப் ப‌டும் இன‌த்தின் பாட்டாளி வ‌ர்க்க‌மும் உண‌ர்வுத் தோழ‌மையுடன் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று லெனின் விரிவாக எழுதியுள்ளார். நீங்க‌ள் பேசுவ‌து மார்க்சிய‌ம் அல்ல‌. அது எதற்கும் உதவாத வரட்டுவாதம்.

நீங்க‌ள் மார்க்சிய‌ முலாம் பூசிய த‌மிழ் தேசிய‌ம் பேசுகின்றீர்க‌ள். அது உங்கள் மத்தியதர வர்க்க நலன் சார்ந்தது. நீங்கள் ஒரு சிங்களவராக பிறந்திருந்தால், சிங்களத் தேசியம் முற்போக்கானது என்று வாதாடி இருப்பீர்கள். நீங்கள் பேசுவது இட‌துசாரி தேசிய‌ம் கூட அல்ல‌. அது அப்பட்டமான வ‌ல‌துசாரி தேசிய‌ம். அதனால் தான் இனமுரண்பாடுகளுக்கு ந‌டைமுறை சாத்திய‌மான‌ தீர்வு உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌வில்லை.

2 comments:

வேலன் said...

‘‘தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது ( myth- symbol- national heroes ) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும். ‘‘
--
இதனை விளங்கிக் கொள்வதற்கு மார்க்சிய அறிவு தேவையில்லை. இதனை அறிந்து கொள்ள மானிடவியல் ஆரம்ப அறிவு இருந்தால் இதனை அறிந்து கொள்ள முடியும். மேற்கண்ட விடயம் என்பது தேச (formation of national identity unity) எழுச்சியின் போது உருவாக்கப்படும் அடையாளத்தின் ஒரு அங்கம். இதனை அறியாது ஆண்டபரம்பரையை நியாயப்படுத்துவதாக திரிப்பது இட்டுக் கட்டிய அறிவியல் குறைபாடாகும்.

வேலன் said...

ஒரு அரசியல் போக்கில் இருந்து தான் கோட்பாடுகளை வந்தடையமுடியும். இந்த உலகின் அரசியல் போக்கினை விளங்கிக் கொள்வதில் இருந்து கோட்பாடு வகுப்பதும், சமூகத்தில் எவ்வகையான அரசியல் போக்கு இருக்கின்றது என்ற அடிப்படையில் இருந்து தான் விடயங்கள் முன்வைக்கப்படும், முன்வைக்க முடியும்.
தனிமனிதர்களின் விளக்கம் நம்பிக்கை அல்லது அகவுணர்வு சார்ந்த நிலையில் நெற்றியில் கல்லைத்து கேள்வி கேட்பது என்பது சமூக விஞ்ஞானப் பார்வையற்ற அரைநிலமானிய பெருமைக்கு உட்பட்டதாகும்.
சமூகத்தை விஞ்ஞான ரீதியாக ஆய்வதில் இருந்து தான் விடயங்களை முன்வைக்கப்படுகின்றது.
சில விடயங்களுக்கு ஒரு கேள்விபதில் என்று எதுவும் கொடுக்க முடியாது. சமூகத்தினை ஆராய்வது என்பது சமூகத்தின் அனைத்து தளங்களுக்கும் சென்று அங்க அசைவுகளை ஆராய வேண்டும்.
சமூகத்தின் அனைத்து தளங்களுக்கும் சென்று ஆராயாது மேலோட்டமாக பார்ப்பது பொதுப்புத்திக்கு உட்பட்டதாக இருக்கின்றது.
சமூகத்தின் சிந்தனைப் போக்கு, அரசியல் ஓட்டம் என்பதை பொதுப்புத்தியில் இருந்து அறிவதுதான் வழமையாக உள்ளது.

ஒரு பொருளைப் பற்றிய வியாக்கியானம் அறிவு மட்டத்தில் அமைந்துள்ளது. இவை என்னளவான கருத்தாக இருக்கின்ற போது அதற்கு மாற்றாக மறுஆய்வுரை வைத்து மாற்றுக் கருத்தைக் கொடுக்க முடியும்.
சமூகம் முரண்பாடுகள் சமூக மட்டத்தில் சமூக பொருளாதார அமைப்பில் இருந்து தான் சமூகத்தின் தன்னை எந்த நிலையில் இருந்து எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுமுறைக்கு உட்பட்டதாகும்.
இந்த வகையில் பெருந்தேசிய வெறியும் குறுந்தேசியமும் ஒன்றல்ல. ஒரு தேசிய இன முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக் காலத்தில் எவ்வகையான போக்கு இருக்கின்ற என்பதை வைத்து ஆராயப்பட்டதே ‘‘வரையறைகளின் காலப்பொருத்தம் பற்றி‘‘‘

//மக்கள் கூட்டத்தினை குறிக்க இனம் என்ற சொல்லும் அதன் பொருட்டு வெளிப்படும் பாகுபாட்டுச் சிந்தனை என்பதை இனவாதமாக ஓட்டுமொத்தமான பார்வையில் பயன்படுத்தப்படுகின்றது.//
//இலங்கையில் இருப்பது ஒடுக்கும் பாகுபாட்டுச் சிந்தனை மற்றையது அதனை எதிர்க்கும் பாதுகாப்புச் சிந்தனையாகும்.//
//தமிழ் மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆண்ட பரம்பரைக் கோசம் என்பது இந்த தேசிய இனத்தின் எழுச்சிக்கு உட்பட்டதேயன்றி இது இனவாதத்திற்கு உட்பட்டதல்ல....
தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது (myth- symbol- national heroes ) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்.// http://velanவேலன்.blogspot.no/2015/12/blog-post.html சுமார் A4 -அளவான 15 பக்கத்தைக் கொண்ட கட்டுரையில் முழுமையாக விளக்கவைக்கப்படும் அடிப்படையான விடயத்தை தனியே
"இனவாதம்/இனப்பகை" எனும் சொற்கள் "பெருந்தேசியவாதம்/தேசிய இன முரண்பாடு என்பன நிறுவனமயப்பட்ட பெருந்தேசியவாதம், அதனை எதிர்த்த குறுந்தேசியவாதம் என்பதைப் பற்றிய பிரச்சனையை விளக்கும் நோக்கோடு எழுதப்பட்டது. அந்தக் கட்டுரையில் போதிய விளங்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தேசிய இயக்கங்கள் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் தோன்றுகின்றபோது பொதுவடையாளம் கொண்டு இணைப்பதும் அதன் பொதுப்பண்பு உருவாக்கிக் கொண்டு வருவதும் ஒரு அம்சம்.
இந்த கட்டுரை
1. விளங்கிக் கொள்வதில் சிக்கல் இருக்க முடியும்
2.நுனிப்புல் மேய்வது
3.அரசியல் புரிதல் இல்லாத நிலையை மறைப்பது
------------------------------------
தனிமனிதராக சமூகம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது என்பது அடிப்படையில் கற்றல் கற்பித்தலுக்கு உட்பட்டதாகும்.
தேசியஇனப் போராட்டம் ( இதுவும் வர்க்கப் போராட்டத்திற்கு உட்பட்டதே)
வர்க்க முரண்பாடு - வர்க்கப் போராட்டம்
சமூக சிந்தனை, பொருளாதாரக் கட்டமைப்பு போன்று வெவ்வேறு ஆய்வுக் கட்டுரை எழுதுகின்றேன், எழுதி வைத்துள்ளேன் (இன்னும் அச்சேற்றவில்லை) என்னுடைய கடமையை தன்னியல்பாக இருக்கும் அதற்கு அப்பால் செல்ல முடியாது.

பல விடயங்களை எழுதிக் கொள்கின்ற போது முன்னர் கூறியது போல வத்திக்கான், சங்கராச்சாரியார்களின் மடத்தவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை. இத்துடன் என்னை தேசிய வெறியனாக பிரச்சாரம் செய்பவர்கள் செய்யட்டும். அதனையிட்டு கவலை கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. இவற்றிற்கு தனித்தனியாக பதில் கொடுக்க வேண்டியதும் இல்லை.
அன்பர்களே ஏதாவது கருத்துக்கள் இருந்தால் எனது முகப்புத்தகத்தில் கற்றல்- கற்பித்தல் அடிப்படையில் எழுதுங்கள். கற்போம், விவாதிப்போம், --https://www.facebook.com/Velan.illaikai/posts/1015434831883298